Advertisment

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இப்பொழுதும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இமயமலை போல் இருந்த செல்வாக்கு இடமே தெரியாமல் அழிந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live, Rajinikanth

ரஜினிகாந்த்

திராவிட ஜீவா

Advertisment

ரஜினிகாந்த் பெயர் இப்படியொரு சர்ச்சையில் சிக்கியதை, அவரது எந்த ரசிகரும் விரும்பவில்லை. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த ஆறு மாதமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் வருமானம் இல்லை. எனவே வருமான வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ரஜினி. அதை விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு கண்டனத்தையும் பதிவு செய்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 வருடங்களாக தமிழ் திரையுலகிலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகில் மட்டும் அல்ல ஆசிய திரைஉலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். அவரின் வியாபாரம் 400 கோடிக்கு மேல் என்று கபாலி பட தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே கூறியதே அவரது சினிமா வர்த்தக செல்வாக்கை நிரூபிக்க போதுமானது.

இந்தியத் திரையுலகில் 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து எடுக்கப்பட்ட படமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் 2.0. இப்படிப்பட்ட உச்ச நடிகர் தன்னுடைய மண்டபத்திற்கான வரிகளை கட்டாமல் சலுகை கேட்பது ஏன் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததுதான். அவரது கடந்தகால வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்ப்போமானால் அவர் எவ்வளவோ உதவிகளை செய்துள்ளதை அறியலாம்.

பல பேரிடர் காலத்தில் நிவாரணங்களை செய்துள்ளார். 1983-ல் நடந்த இலங்கை இனப் படுகொலையின்போது உண்ணாவிரதம் இருந்த ரசிகர்கள் மூலம் தனது சொந்த பணத்தில் நிவாரணம் வழங்கியவர். அகதிகளாக வந்த தமிழர்கள் பலருக்கு உதவி செய்தது, போலியோ தடுப்பு மருந்து விழிப்புணர்வுக்காகவும் கண்தானத்திற்காகவும் இலவசமாக விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுத்தவர்தான் ரஜினிகாந்த்.

அதுமட்டுமல்லாமல் அவர் சார்பில் 93-ல் பெருவெள்ளம் ஏற்பட்டு அவதியுற்ற திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் தன்னுடைய சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான உதவிகளை வழங்கியது கண்முன்னே இருக்கும் சாட்சி. 1997-ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களை இணைத்து 8 பேர் கொண்ட தயாரிப்பாளர்களை உருவாக்கி அவர்கள் அனைவருக்கும் அருணாச்சலம் படத்தின் லாபத் தொகையை பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அருணாசலா ட்ரஸ்ட் ஒன்றை உருவாக்கினார். அந்த ட்ரஸ்டில் வருடத்திற்கு 20 திருமணங்கள் நடத்தப்படும் என்று அறிவித்து அதை தொடர்ந்து மூன்று வருடங்கள் நடத்தினார். குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும், மணப்பெண் மணமகனுக்கு தேவையான திருமண பொருட்கள், உடைகள், தாலி உள்ளிட்ட சீர் செலவுகள், வந்து செல்ல போக்குவரத்து செலவுகளையும் அந்த டிரஸ்ட் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

1999ஆம் வருடம் வெளிவந்த படையப்பா படத்தின் லாபத் தொகையில் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு மேஜைகள், நாற்காலிகள் வாங்கிக்கொடுத்தார். பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள் உள்ளிட்டவைகளை எல்லாம் சரிசெய்து கொடுத்தார். அதற்கு ஒரு ட்ரஸ்ட் உருவாக்கி அது ஒரு இரண்டு மூன்று வருடங்கள் நன்றாகவே செயல்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மன்ற விழா நடத்திய ரசிகர்களை அழைத்து, ‘எனக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டாம்’ என்று 15 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்தவர் ரஜினிகாந்த் என்பது பொதுவெளியில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. சென்னை மாநகர மற்றும் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு மருத்துவச் செலவுகளையும் ரஜினிகாந்த் கொடுத்து வந்தவர்தான். இப்படி வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்த உதவிகள் பல பக்கங்களை தாண்டும் பட்டியல்கள் உண்டு.

ஆனால் சமீப காலங்களில் தன்னுடைய மனைவி நடத்தும் பள்ளிக்கூட வாடகை, அலுவலக வாடகைகள், அவர் மகள் வாங்கிய கடன் உள்ளிட்டவைகள் மிகப் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. அது அவரின் அரை நூற்றாண்டு சிம்மாசனத்தை களங்கப்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

தன்னுடைய திருமண மண்டபத்திற்கு வருமான வரி கட்டாமல் சலுகை கேட்டு இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற ஒரு நடிகர், இந்தியாவின் ஒப்பற்ற ஈடுஇணையற்ற நம்பர் 1 நடிகர், பேருக்கும் புகழுக்கும் மட்டுமல்ல மிகப்பெரும் பணத்திற்கு சொந்தக்காரராக பார்க்கப்படுகின்றவர் ரஜினிகாந்த். வருமான வரியில் மத்தியஅரசு இவருக்கு சலுகை அளித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்பே எழுந்தன. அவர் தரப்பிலும் அதை மறுக்கவில்லை.

பல உதவிகளை செய்தவர், சமூகப் பணிகளை செய்தவர், இலவச விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுத்தவர் இப்படி மாறிப்போனதன் பின்னணி என்ன? 2002லேயே 110 கோடி ரூபாய் வியாபாரமாகி 70 கோடி வசூலித்த படமான பாபா படத்தின் வசூல் (இன்றைய முன்ணணி நடிகர்களின் தற்போதைய தியேட்டர் வசூலைவிட அதிகம் ) தொடர்பான பிரச்சினையில் 30 கோடி ரூபாயை திருப்பி கொடுத்தவர் என்று பேசப்பட்டவர். அப்போது கமல்ஹாசன் உள்ளிட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மீண்டும் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் இதே மாதிரியான ஒரு சூழல் எழுந்தபோது தன்னுடைய குருநாதருக்காக 10 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை திருப்பிக் கொடுத்தார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 2014ஆம் ஆண்டிலும் லிங்கா என்னும் திரைப்படத்தில் சில சர்ச்சைகள் கிளம்பிய போது படம் வெற்றியடைந்து இருந்தாலும் கூட அவரிடம் போலியாக ஒரு கணக்கை காட்டி படம் தோல்வி என்று மிக நெருங்கிய நண்பரும் விநியோகஸ்தருமானவர் அவரை 10 கோடி ரூபாய் ஏமாற்றிய போதும் கூட ரஜினிகாந்த் எந்த அளவுக்கு விட்டுக் கொடுப்பவராக இருந்தார் என்பது திரையுலகில் அவரை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் சில லட்சங்களில் வருமான வரிச் சலுகைகளை விரும்புவாரா? விலக்கு கேட்பாரா? என்ன நடக்கிறது ரஜினி தரப்பில்? ரஜினி மீதான பெரும்பாலான விமர்சனங்கள் சர்ச்சைகள் எப்போதும் ரஜினியை மையப்படுத்தி ஏற்படுவதே இல்லை. ஒன்று அவர் குடும்பத்தை சார்ந்ததாக இருக்கின்றது. இல்லையென்றால் அவர் படம் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கின்றது.

ஒரு படம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவருக்கு சில உண்மையான தகவல்கள் சென்று சேர வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்னுடைய தனிப்பட்ட வங்கி பிரச்சினைகளும் தனிப்பட்ட வருமான பிரச்சினைகளும் தனிப்பட்ட கணக்குகளும் அவருக்கு தெரிவிக்கப் படுவதில்லையா?

திரைப்பட பிரச்சினைகள் மட்டுமல்ல, தற்போது அரசியல் பிரச்சினைகளில் கூட ரஜினிகாந்த் அவர்களுக்கு சரியான தகவல்கள் போய் சேருகின்றனவா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மனதிலும் இருக்கின்றது. யார் சிங்கத்தின் குகையில் நுழையமுடியும்? யார் ரசிகர்கள்? யார் நலன் விரும்பிகள் ? யார் துரோகிகள் ? என்கிற தகவல்கள் அவருக்கு தெரியுமா? அப்படி தெரிவிக்கப்படவில்லை என்றால் அந்த வட்டம் எது? அதை ரஜினியும் தற்போது உணர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

ஒரு உலகப் புகழ்பெற்ற நடிகர் உச்சத்தில் இருக்கின்ற நடிகர் பல்வேறு சர்ச்சைகளை தாண்டியும் அவருக்கு செல்வாக்கு மறையவில்லை என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுதும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இமயமலை போல் இருந்த செல்வாக்கு இடமே தெரியாமல் அழிந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கான தொடக்கப் புள்ளியை அவரே தொடங்கிவைத்துக்கொண்டுள்ளார் என்பதை விமர்சனமாக ஏற்க வேண்டும்.

தற்போது ஆட்சி அரசியல் என்று அறிவித்துவிட்டு அமைதி காப்பதும் அழகல்ல. அவருக்கும் நல்லதல்ல, அவருடைய சூப்பர்ஸ்டார் இமேஜ்க்கும் அது பொருந்தக்கூடியது அல்ல. தீதும் நன்றும் பிறர் தர வாரா!

(கட்டுரையாளர் திராவிட ஜீவா, அரசியல்- சினிமா விமர்சகர்)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment