Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தப்புக் கணக்கு போட்ட திமுக.?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் போல ஒரு சூழல், சமீப ஆண்டுகளில் திமுக.வுக்கு வாய்க்கவில்லை. ஆனால் இதிலும் திமுக முன்னணியினரே நம்பிக்கை இழந்தது ஆச்சர்யம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin dmk

mk stalin dmk

ச.செல்வராஜ்

Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் போல ஒரு சூழல், சமீப ஆண்டுகளில் திமுக.வுக்கு வாய்க்கவில்லை. ஆனால் இதிலும் திமுக முன்னணியினரே நம்பிக்கை இழந்தது ஆச்சர்யம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்றிய எந்த திமுக நிர்வாகியிடம் கருத்து கேட்டாலும், ‘நாங்க ரெண்டாவது இடமா, மூன்றாவது இடமா?’ என ‘ஆப் தி ரெக்கார்ட்’டாக மனம் திறக்கிறார்கள். அவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற விதமாக எந்த சர்வேயிலும் திமுக முன்னணியில் இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கிட்டத்தெட்ட இடைத்தேர்தலுக்கென்றே ஒரு ஃபார்முலாவை சாத்தான்குளத்தில் அறிமுகப்படுத்தியவரான ஜெயலலிதா மறைந்துவிட்ட சூழலில் நடக்கிறது.

ஜெயலலிதா உருவாக்கி விட்ட ஆட்சியை அதிமுக தக்க வைத்திருக்கிறதே தவிர, அங்கு ஆயிரம் குழப்பங்கள்! மத்திய அரசு எத்தனை அடிகளைக் கொடுத்தாலும், டிடிவி தினகரன் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று ஆளும்கட்சிக்கு குடைச்சல்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் கைகோர்த்துவிட்டதாக காட்டிக் கொண்டார்களே தவிர, உள்ளுக்குள் இருக்கும் உறுமல்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

டெல்லி பாஜக.வின் எடுப்பார் கைப்பிள்ளையாக இந்த அளவுக்கு வரலாற்றில் தமிழக அரசு இருந்ததே இல்லை. அந்த பயத்திற்கு காரணம், ஆட்சியாளர்கள் முதுகில் சுமக்கும் ஊழல் மூட்டைகள்! சேகர் ரெட்டி டைரிக்கு வேலை வைக்காமல் இருக்க வேண்டுமென்றால், அவர்கள் அடங்கித்தான் ஆக வேண்டும்.

2015 சென்னை பெருவெள்ளம், 2016 வர்தா புயல், 2017-ம் ஆண்டு வறட்சி என எதற்கும் தமிழக அரசு கேட்டதில் கால் பங்கு நிதியைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. இப்போது ஓகி துயரத்திலும் அதுதான் நடக்கப் போகிறது என்பது பெரிய ரகசியம் இல்லை. ஆர்.கே.நகரில் கடைசி நாள் பிரசாரத்தைகூட தியாகம் செய்துவிட்டு கன்னியாகுமரியில் பிரதமரை வரவேற்க ஓடுகிற அளவுக்கு முதல்வரும் துணை முதல்வரும் விசுவாச திலகமாக தங்களைக் காட்டிக் கொள்வதில்தான் கவனமாக இருக்கிறார்கள். அவர்களின் குறி ஆட்சி... ஆட்சி.. ஆட்சி மட்டுமே!

இவ்வளவு பலவீனமான ஒரு பொம்மலாட்ட ஆட்சியின் கீழ் நடைபெறும் இடைத்தேர்தலில், அதிமுக ஜெயிக்கும் என ஆரம்பகட்டத்தில் யாருமே கூறவில்லை. போதாக்குறைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் திமுக.வை ஆதரிக்கின்றன. காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட வழக்கமான கூட்டணிக் கட்சிகளும் கை கோர்த்திருக்கின்றன.

ஆனால் தேர்தல் களத்தில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு சோர்வு திமுக முன்னணியினரிடமே தென்பட்டது. கடந்த ஏப்ரலில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலின்போது யார், யார் எங்கெங்கு பணியாற்றினார்களோ அதே இடங்களில் இந்த முறையும் பணியாற்ற திமுக நிர்வாகிகளுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் கடந்த ஏப்ரலில் காணப்பட்ட வீரியம் இந்த முறை திமுக.வினரிடம் மிஸ்ஸிங்!

குறிப்பாக திமுக முன்னணி நிர்வாகிகள் பலரும் இங்கு சுயேட்சையாக ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிடும் விசிறிகளாக இயங்கியதைக் காண முடிந்தது. அதாவது, தினகரன் தரப்பின் செயல்பாடுகளை மெச்சிக் கொண்டிருந்தார்களே தவிர, திமுக.வின் செயல்பாட்டை முடுக்கி விடுவதில் தவறினார்கள்.

‘கடந்த 7 ஆண்டு காலமாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல், பொதுக்கூட்டம், நமக்கு நாமே பயணம் என ஸ்டாலின் முடுக்கி விட்டதில் திமுக நிர்வாகிகள் பலரும் கடனாளி ஆகியிருக்கிறார்கள். அதனால் அவர்களில் யாரும் இடைத்தேர்தலில் மடியை அவிழ்க்கத் தயாராகவில்லை. திமுக.வின் சோர்வுக்கு இது ஒரு காரணம்’ என்கிறார் மேற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர்.

தவிர, அண்மையில் ஆட்சி மாற்ற ‘அஸைன்மென்ட்’டுக்காக என குறிப்பிட்டு திமுக முக்கியப் புள்ளிகளிடன் கோடிகளில் ஒரு வசூல் நடந்ததாம். எனவே வழக்கமாக இடைத்தேர்தல்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் அந்தப் புள்ளிகளும் இந்த முறை கைகளை இறுக்க மூடிக்கொண்டார்கள். டிசம்பர் 11-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம், கடைசி 3 நாட்கள் ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கூட்டம் திரட்ட செலவிட்ட சொற்ப தொகையைத் தவிர்த்து, திமுக தலைமையும் பெரிதாக ‘முதலீடு’ செய்யவில்லை.

திமுக பெரிதாக பணம் செலவு செய்யாதது கட்சியினரை சோர்வு ஆக்கியது நிஜம் என்றாலும், அதை கட்சியின் தலைவர்கள் முன்னின்று தீவிர களப்பணி மூலமாக சரி செய்திருக்க முடியும். இடைத்தேர்தல்களில் திமுக அப்படி கடுமையான களப்பணியை செயல்படுத்தியதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு.

1967 பொதுத்தேர்தலில் விருதுநகரில் தோற்ற காமராஜர், 1968 நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நாகர்கோவிலில் நின்றார். திமுக அப்போது மிக பலவீனமாக இருந்த ஏரியா அது! தவிர, காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவோ, பிரசாரம் செய்யவோ அறிஞர் அண்ணா விரும்பவில்லை.

ஆனால் தேர்தல் பிரசாரம் மூலமாகவே அங்கு கட்சியை வலுப்படுத்த முடியும் என அண்ணாவிடம் கூறி, சுதந்திரா கட்சியின் வேட்பாளர் டாக்டர் மத்தியாஸுக்கு ஆதரவு கொடுக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. அத்துடன் விடாமல் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான கருணாநிதியும், சி.பா.ஆதித்தனாரும் வாரக்கணக்கில் அங்கு முகாமிட்டு கடுமையான கள மோதல்களுக்கு மத்தியில் பிரசாரம் செய்தனர். காமராஜர் வென்றாலும், இன்று திமுக துணையில்லாமல் கன்னியாகுமரியில் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது என்கிற நிலைக்கு விதை போடப்பட்டது அப்போதுதான்!

அதேபோல கடையநல்லூர் இடைத்தேர்தலில் கா.மு.கதிரவனுக்காக அப்போது திமுக.வில் இருந்த எம்.ஜி.ஆர். ‘கதிரவன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தனியாக சினிமா படமே எடுத்து பிரசாரம் செய்தார். ஆர்.கே.நகரும் திமுக.வுக்கு கடினமான தொகுதிதான். ஆனால் இன்று அதிமுக இருக்கும் சூழலில், திமுக அந்தத் தொகுதியை இன்னும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டிருக்க முடியும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஏன் கடைசி 3 நாள் பிரசாரம் போதும் என முடிவெடுத்தார் என்பதே புரியாத புதிர்தான். ‘எப்படியும் ஆளும்கட்சியினரும் டிடிவி தரப்பும் பணப் பட்டுவாடா செய்வார்கள், தேர்தல் நின்றுவிடும்’ என ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையே இதற்கு காரணம் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

அதை நிரூபிப்பது போலவே தேர்தல் களத்தில் சுழன்றதைவிட தேர்தல் தொடர்பான புகார்களை தூக்கிக்கொண்டு தேர்தல் ஆணையத்தை துரத்துவதையே பிரதான வேலையாக ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் செய்தனர். பிரசாரத்தின் கடைசிகட்டத்தில் டெல்லியில் திமுக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, ‘100 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா’ பற்றி புகார் கூறினர்.

அந்தப் புகாரின் வரிகள் மறைமுகமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின. தேர்தலுக்கு முன் தினம் வரை இந்த நம்பிக்கையை திமுக விடவில்லை. சசிகலா தரப்பு மெஜாரிட்டி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காட்டியபோது சின்னம் ஒதுக்காத தேர்தல் ஆணையம், இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸுக்கு அதையே ஆதாரமாக வைத்து சின்னத்தை ஒதுக்கியது. அதுவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக! அதை வைத்தே தேர்தல் ஆணையம், ‘இந்த முறை தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தாது’ என்பதை திமுக யூகித்திருக்கலாம்.

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் திமுக.வின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் இல்லை. உண்மையான கள நிலவரங்களை ஸ்டாலினிடம் வெளிப்படையாக சொல்லும் தலைவர்களும் இப்போது இல்லை. கருணாநிதிக்கு கிடைத்த ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், முரசொலி மாறன் போல!

கருணாநிதியிடம் எந்த விஷயத்தையும் உள்ளது உள்ளபடி பேச முடிகிற துரைமுருகனால், ஸ்டாலினிடம் அப்படி பேச முடியவில்லை. ஸ்டாலின் விரும்புகிற மாதிரி பேசும் சூழலுக்கு அவரும் தள்ளப்பட்டுவிட்டார் என்கிறார்கள், உள் நிலவரங்களை அறிந்த திமுக.வினர். ஒருவேளை இந்தத் தொடர்புகள் சரியாக இருந்தால், ஆர்.கே.நகரில் ஸ்டாலின் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க முடியும்.

ஆனால் இதையும் தாண்டி திமுக.வின் கட்டமைப்பும் அதன் வழக்கமான வாக்கு வங்கியும் ஆர்.கே.நகரில் ஆளும்கட்சிக்கு ‘ பைட்’ கொடுக்கின்றன. நம்பிக்கையுடன் திமுக போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், ஆளும்கட்சியின் பண வினியோகத்தையும் மீறி களத்தில் திமுக முன்னே நின்றிருக்க முடியும்.

 

Mk Stalin Dmk Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment