டிசம்பர் 24 அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள். இதையொட்டி எம்.ஜி.ஆரின் நினைவுகள் தொடர்பாக அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் பேசினோம்.
எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். (முழுமையான பேட்டிக்கு இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்க்கவும்).
'அடிப்படையில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அந்த வகையில் 1958-லேயே தி.மு.க உறுப்பினராக பதிவு செய்து எம்.ஜி.ஆர் உடன் இணைந்து அந்த கட்சியில் பயணித்து வந்தேன். எம்.ஜி.ஆர் மன்றத்திலும் பொறுப்பில் இருந்து வந்தேன்.
1972-ல் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட போது நான் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனராக பணியில் இருந்தேன். எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட தகவல் கிடைத்தபோது மதுரையில் நான் ஓட்டி வந்த பஸ்ஸை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, 'கருணாநிதி ஆட்சியில் இனி ஒரு நிமிடம் கூட அரசு பஸ் ஓட்டுனராக இருக்க மாட்டேன்' என கூறிவிட்டு ஊருக்கு வந்து விட்டேன். நாகர்கோவிலில் இரவோடு இரவாக எம்.ஜி.ஆர் மன்றத்தினரையும் ரசிகர்களையும் கூட்டி கருணாநிதியை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் தனி கட்சி தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு மறுநாள் காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.
நான் ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றபோது எம்.ஜி.ஆர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக ஏற்கனவே தலைவருடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. நான்தான் பதற்றமாகவும் பரபரப்பாகவும் அங்கே போனேன். ஆனால் அவர் கூலாக இருந்தார்.
பின்னர் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்து உடை மாற்றிக் கொண்டு அவரது காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு சத்யா ஸ்டுடியோ வந்தார். அதற்குள் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. முக்கியமான மன்ற நிர்வாகிகளை தலைவர் அழைத்து ஆலோசித்தார். வெளியே கூடியிருந்த மொத்த கூட்டமும் தலைவரை தனி கட்சி தொடங்க வற்புறுத்தினர். நாங்களும் அதையே கூறினோம். உடனே தனிக்கட்சி தொடங்க வேண்டும் என சொல்கிறவர்கள் ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள் என கேட்டார். அப்படி ஒரு பேப்பரில் நான்காவது கையெழுத்தாக எனது கையெழுத்தை ஒரு ஊசி மூலமாக விரலை குத்திக்கொண்டு ரத்த கையெழுத்தாக போட்டுக் கொடுத்தேன். பின்னர் கட்சி தொடங்கிய மூன்றாவது நாளே கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன்.
நாகர்கோவில் செம்மாங்குளம் (இப்போதைய அண்ணா பஸ் நிலையம்) அருகே ஒரு ஓலைக் குடிசை தான் எனது வீடு. அங்கே மூன்று முறை தலைவர் வந்து எனது வீட்டில் சாப்பிட்டு இருக்கிறார். தலைவரை வைத்து நாகர்கோவிலில் பெரியார் நினைவுத் தூண் திறப்பு விழா நடத்தி இருக்கிறேன். என்.எஸ் கிருஷ்ணன் சிலை திறப்பு விழா நடத்தி இருக்கிறேன். தலைவர் என்னை வாடா போடா என்று தான் அழைப்பார். பலரிடமும் என் பிள்ளை என்று என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
தலைவரின் வள்ளல் தன்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். தன்னை தேடி வருகிறவர்களின் தேவை அறிந்து தாராளமாக உதவி செய்யக் கூடியவர்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு பல நடிகர்கள் கட்சி தொடங்கி இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் தனது ரசிகர்களை மட்டும் நம்பி கட்சி தொடங்கவில்லை. அவர் அரசியலில் இயங்க ஆரம்பித்தது முதல் மக்களோடு பயணித்தார். அப்படி மக்கள் சக்தியை பெறாமல் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலில் யாரும் ஜெயிக்க முடியாது. இதுதான் எம்.ஜி.ஆருக்கும் மற்ற நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு பெரிய மரியாதை இருப்பதை நான் பார்க்கிறேன். அ.தி.மு.க கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லும் போதே இளைஞர்கள் கரகோஷம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர் உடன் பழகிய நினைவுகள் இன்றும் பசுமையாக என் மனதில் நீடிக்கின்றன. எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா கட்டி வளர்த்த இந்த இயக்கத்தை இன்று எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சிறப்பாக வழி நடத்திச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் தமிழ் மகன் உசேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.