வாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதை

2006-க்குப் பிறகுதான் திமுக.வைவிட அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதம் குறைவாக இருந்து வருகிறது. சுய பரிசோதனை செய்வது, திமுக.வுக்கே நல்லது.

By: Updated: January 23, 2021, 08:36:44 AM

சந்தேகமே இல்லை… தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த முறைதான் மிகக் குறைவான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடப் போகிறது. புதுவையில் சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸை தெறிக்க விட்ட திமுக., தமிழகத்தில் மட்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்கப் போவதில்லை.

யு.பி.ஏ 1, 2 காலங்களில் காங்கிரஸுடன் அரசியல் ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் ஒட்டி உறவாடிய திமுக., 2014 எம்.பி தேர்தலில், ‘கூடா நட்பு, கேடாய் முடியும்’ என உதறியது. காரணம், காங்கிரஸ் மீதான ஊழல் எதிர்ப்பு அலை மற்றும் ஈழ உணர்வாளர்களின் கோபம். அதே திமுக., 2016 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸின் தேவையை உணர்ந்து சேர்த்துக் கொண்டது. 2019-ல் டிடிவி தினகரன் – எஸ்.டி.பி.ஐ அணிக்கு மைனாரிட்டி வாக்குகள் சென்றுவிடாமல் தடுக்க, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டது திமுக.

பாண்டிச்சேரியில் காங்கிரஸுக்கு அடி

ஆனால் 2021-ல் திமுக.வுக்கு அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. பாஜக எதிர்ப்பு சிந்தனை கொண்ட வாக்கு வங்கியை இந்த முறை யார் துணையும் இல்லாமல் மொத்தமாக அறுவடை செய்யும் நம்பிக்கை திமுக.வுக்கு இருக்கிறது. அதனால்தான் பாண்டிச்சேரியில் காங்கிரஸுக்கு இந்த அடி!

ஆம், புதுவையில் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை களம் இறக்கியிருக்கிறது திமுக. அங்கு அடுத்தடுத்து திமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, ‘ மொத்தமுள்ள 30 தொகுதிகளையும் ஜெயிப்போம்’ என சூளுரைத்து வருகிறார் அவர். இத்தனைக்கும் கடந்த முறை அங்கு காங்கிரஸ் கூட்டணியில் 9 தொகுதிகளில் நின்ற திமுக வெற்றி பெற்றது இரண்டே தொகுதிகள்தான்!

அப்புறம் என்ன நம்பிக்கை? கடந்த முறை 15 தொகுதிகளை ஜெயித்து திமுக ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் நாராயணசாமி மீது இந்த முறை அதிருப்திகள் தென்படுகின்றன. பாஜக கடந்த முறை 30 தொகுதிகளிலும் நின்று 2.4 சதவீதம் வாக்குகள்தான் வாங்கியது. 8 இடங்கள் ஜெயித்த என்.ஆர்.காங்கிரஸும், தனித்து 30 தொகுதிகளிலும் நின்றே 4 தொகுதிகளில் ஜெயித்த அதிமுக.வும் ஆக்டிவாக இல்லை.

நிர்ப்பந்தத்தில் காங்கிரஸ்

இதையெல்லாம்விட, மொத்தமே 10 லட்சம் வாக்குகளைக் கொண்ட புதுவையை வெல்வது, தமிழகத்தில் ஒரு எம்.பி தொகுதியில் ஜெயிப்பது மாதிரிதான் என்பதே திமுக கணக்கு! அதனால்தான் செலவுகளைப் பற்றி அஞ்சாத ஜெகத்ரட்சகன் களம் இறக்கப்பட்டிருக்கிறார். திமுக தன்னுடன் அடுத்த தேர்தலில் தொடரும் என்கிற நம்பிக்கையில் அங்கு காலை உணவுத் திட்டத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரையெல்லாம் சூட்டிய நாராயணசாமி இடிந்து உட்கார்ந்திருக்கிறார்.

புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் தேசிய அளவில் திமுக.வின் இமேஜ் இன்னும் உயரும் என்பதே நிதர்சனம். எனவே ஒரு அரசியல் கட்சியாக வெற்றியை நோக்கி திமுக வியூகம் வகுப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. திமுக.வின் விருப்பதிற்கு ஏற்ப மட்டுமே புதுவையிலும், தமிழகத்திலும் கூட்டணியில் தொடரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பது காங்கிரஸின் பலவீனம்!

இப்போதும் புதுவையில் கடந்த முறை திமுக வாங்கியதைப் போல 9 சீட்களை பெற்றுக்கொண்டு மீதம் 21 இடங்களில் திமுக.வை நிற்க காங்கிரஸ் அனுமதித்தால் கூட்டணி தொடரலாம். ஆனால் முதல் அமைச்சர் பதவியையும், மெஜாரிட்டியான எம்.எல்.ஏ.க்களையும் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கு தயாராகுமா? அதே போலத்தான் தமிழகத்திலும் இந்த முறை பேர வலிமையை இழந்து நிற்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் பிரிந்து போனாலுமே மைனாரிட்டி வாக்கு வங்கி இந்த முறை சிதறாது என திமுக வைத்திருக்கும் நம்பிக்கை இதற்கு ஒரு காரணம். தமிழகம் தொடங்கி பீகார் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் வெற்றி சதவிகிதம் மிகக் குறைவாக இருப்பது மற்றொரு காரணம்.

திமுக.வின் பலவீனமா?

2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது. அதாவது, 20 சதவிகித வெற்றி! அதேசமயம், 178 இடங்களில் போட்டியிட்ட திமுக 89 இடங்களை ஜெயித்தது. இது 50 சதவிகித வெற்றி. ஒருவேளை காங்கிரஸும் 50 சதவிகித வெற்றியைப் (20 இடங்கள்) பெற்றிருந்தால், தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்.

ஆனால் இதை காங்கிரஸின் பலவீனம் என்று மட்டுமே கூறிவிட முடியாது. அதே 2016 தேர்தலில் காங்கிரஸைத் தவிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (5 இடங்கள்), மனிதநேய மக்கள் கட்சி (4 இடங்கள்), புதிய தமிழகம் (4 இடங்கள்) ஆகியவை மொத்தம் 13 இடங்களில் போட்டியிட்டன. இவற்றில் கடையநல்லூரில் மட்டும் முஸ்லிம் லீக் சொற்ப வாக்குகளில் வென்றது. இந்த 3 கட்சிகளின் வெற்றி சதவிகிதம் காங்கிரஸ் கட்சிக்கும் வெகு கீழேதான்!

அது மட்டுமல்ல, தேமுதிக.வில் இருந்து வந்த சந்திரகுமார், சேகர், பார்த்தீபன் ஆகிய 3 நிர்வாகிகள், சமூக சமத்துவப் படையின் சிவகாமி, உழவர் உழைப்பாளர் கட்சியின் பொன் குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் நின்றனர். இந்த 6 தொகுதிகளிலும் அடியோடு தோல்விதான். எனவே நிஜமாகவே இது காங்கிரஸின் பலவீனமா, கூட்டணியின் பெரிய கட்சியான திமுக.வின் பலவீனமா? என்பது விவாதத்துக்குரியது.

மாறுபட்ட 2006 தேர்தல்

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் 63 இடங்களில் நின்ற காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. இது 8 சதவிகித வெற்றி! இதே அணியில் நின்ற பாமக 30 தொகுதிகளில் நின்று 3 தொகுதிகளை ஜெயித்து 10 சதவிகித வெற்றியை பதிவு செய்தது. விடுதலை சிறுத்தைகள், பெஸ்ட் ராமசாமியின் கொங்கு மக்கள் கட்சி ஆகியன முறையே 10, 7 இடங்களில் நின்று, ஒரு தொகுதியைக் கூட ஜெயிக்கவில்லை.

இந்தத் தேர்தலில் 119 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 23 தொகுதிகளை ஜெயித்து 19.32 சதவிகித வெற்றியை பதிவு செய்தது. ஆக, இங்கும் காங்கிரஸ் மட்டுமல்ல… திமுக.வின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதமும் பறிபோயிருக்கிறது.

2006 தேர்தல் மேலே குறிப்பிட்டவைகளில் இருந்து மாறுபட்டது. இந்த தேர்தலிலும் திமுக- அதிமுக அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி திமுக அணியில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34-ல் வென்றது. இது 71 சதவிகித வெற்றி. இதே தேர்தலில் பாமக 58 சதவிகித வெற்றியையும் (31 தொகுதிகளில் 18 வெற்றி), மார்க்சிஸ்ட் 69 சதவிகித வெற்றியையும் (13 இடங்களில் 9 வெற்றி), இந்திய கம்யூனிஸ்ட் 60 சதவிகித வெற்றியையும் (10 தொகுதிகளுக்கு 6 வெற்றி) பதிவு செய்தன.

கூட்டணித் தலைமையான திமுக 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96-ஐ வென்றது. இது 72 சதவிகித வெற்றி. காங்கிரஸின் வெற்றி சதவிகிதமும், திமுக.வின் வெற்றி சதவிகிதமும் இங்கே கிட்டத்தெட்ட சம அளவில் இருந்ததைக் காணலாம். திமுக கூட்டணியின் இதரக் கட்சிகளும்கூட பெரிய சேதாரமில்லாமல் வெற்றி சதவிகிதத்தை பெற்றிருந்தன.

திமுக சுய பரிசோதனை செய்வது நல்லது

2001-ல் அதிமுக அணியில் காங்கிரஸ், த.மா.கா ஆகிய இரு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அப்போது காங்கிரஸ் கட்சி 50 சதவிகித வெற்றியையும் (14 தொகுதிகளில் 7 வெற்றி), தமாகா 71 சதவிகித வெற்றியையும் ( 32 தொகுதிகளுக்கு 23 வெற்றி) பதிவு செய்தன. இதே தேர்தலில் திமுக அணியில் பாஜக 19 சதவிகித வெற்றியையும் (21 தொகுதிகளில் 4 வெற்றி), திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் மக்கள் திமுக 67 சதவிகித வெற்றியையும் (3 தொகுதிகளில் 2 வெற்றி), திமுக 19 சதவிகித வெற்றியையும் (169 இடங்களுக்கு 31 வெற்றி) பதிவு செய்தன. மொத்தமாக திமுக இணைத்து வைத்திருந்த சாதிக் கட்சிகள் படு தோல்வியை சந்தித்தன. எனினும் திமுக.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே வெற்றி சதவிகிதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டாலும் 2004-ல் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரி கூட்டணி 100 சதவிகித வெற்றியை பதிவு செய்தது. ஆனால் 2009 தேர்தலில் திமுக 82 சதவிகித வெற்றியை (22 தொகுதிகளில் 18 வெற்றி) பதிவு செய்தது. ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 53 சதவிகித வெற்றியையும் (15 தொகுதிகளில் 8 வெற்றி), விடுதலை சிறுத்தைகள் 50 சதவிகித வெற்றியையும் (2-ல் ஒன்று வெற்றி) பெற்றன. மொத்தமாக அலையாக வீசிய 2019 தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே வென்றன; காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதியைத் தவிர்த்து!

இந்தப் புள்ளி விவரங்கள் தீர்க்கமாகத் தருகிற உண்மை ஒன்றுதான்… 2006-க்குப் பிறகுதான் திமுக.வைவிட அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதம் குறைவாக இருந்து வருகிறது. கலைஞர் கருணாநிதி மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மீதான தனது கண்காணிப்பை சற்றே தளர்த்திக் கொண்ட காலகட்டம் இது. இந்தக் கோணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக.வும் சுய பரிசோதனை செய்வதுதான், திமுக.வுக்கே நல்லது.

எம்.ஜி.ஆர் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்ட காங்கிரஸ்

இது ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் வாக்கு வங்கி வெகுவாக சரிந்துவிட்டதும் பெரிய ரகசியம் அல்ல. 1967 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எம்.ஜி.ஆரின் எழுச்சியால் தமிழகத்தில் 3-வது கட்சி ஆனது. பிறகு எம்.ஜி.ஆர் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டதுதான் அந்தக் கட்சியின் முதல் தவறு.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸுக்கு பெரும் திருப்பத்தை உருவாக்கிக் கொடுத்தார் ஜி.கே.மூப்பனார். 1989 தேர்தலில் மூப்பனார் தலைமையில் தனித்துக் களம் கண்ட காங்கிரஸ் 26 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ) சேவல் சின்னத்தில் நின்று இதைவிட அதிகமாக ஒரு தொகுதி (27 தொகுதிகள்) மட்டுமே பெற்றது. மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதம் 19.83. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 22.37. இப்படி சரியான ஒரு மாற்று சக்தியாக காங்கிரஸ் மறு உருவமெடுக்கும் வாய்ப்பை உருவாக்கியிருந்தார் மூப்பனார்.

ஆனால் 1991 தேர்தலில் இந்த வாய்ப்பை வீணடித்தது, காங்கிரஸின் தேசியத் தலைமை. வெறும் இரண்டரை சதவிகிதம் கூடுதல் வாங்கியிருந்த ஜெயலலிதா தலைமையிடம் சட்டமன்றத் தேர்தலுக்கு 65 இடங்களை மட்டும் பெற்றுக் கொண்டு கூட்டணி அமைத்தது காங்கிரஸ். அதனுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், அதிமுக.வுக்கு 11 தொகுதிகள் என முடிவாகின.

இந்தக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. எனினும் தங்களுக்கு எம்.பி சீட்தான் முக்கியம் என இந்திரா- எம்.ஜி.ஆர் காலத்தில் உருவான ஃபார்முலாவை தொடர்ந்ததுதான் அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். அதுவும் அன்று தேர்தல் அரசியலில் தன்னை முழுமையாக நிரூபிக்காத ஜெயலலிதா தலைமையிடம் எம்.ஜி.ஆருக்கு இணையாக சீட்களை விட்டுக் கொடுத்தது காங்கிரஸின் தவறு!

1996-ல் ஜெயலலிதாவுக்கு பெரும் எதிர்ப்பு அலை நிலவியபோது, மூப்பனாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும் அதிமுக கூட்டணியை அமைத்தார் நரசிம்மராவ். இதனால் தமாகா பிறந்தது. காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. இது அடுத்த வீழ்ச்சி! மூப்பனார் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ்- தமாகா இணைந்தாலும், பழைய வலிமையைப் பெற முடியவில்லை.

காங்கிரஸுக்கு கஷ்ட காலம்

மீண்டும் வாசன் வெளியேற, இப்போது தமாகா.வும் வலிமையாக இல்லை. காங்கிரஸும் பெரிதாக இல்லை. 2014 தேர்தலில் தனித்து நின்று பெற்ற 4.3 சதவிகிதம்தான் காங்கிரஸின் இப்போதைய நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி!

சில கட்சிகளின் வாக்கு வங்கிக்கு எதிர்மறை வாக்குகள் உண்டு. குறிப்பாக மத ரீதியான, சாதி ரீதியான கட்சிகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன. ஆனால் காங்கிரஸுக்கு, எதிர்மறை வாக்குகள் குறைவு. முக்கியமான இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் இருந்தால், காங்கிரஸை பயன்படுத்திக் கொள்ள போட்டி இருக்கும். அப்போது காங்கிரஸும் தனது பேர வலிமையை வெளிப்படுத்தலாம்.

கடும் போட்டி இல்லாமல் வெல்ல முடியும் என திமுக நினைத்துவிட்டால், காங்கிரஸுக்கு கஷ்ட காலம்தான். மணி சங்கர் அய்யர் கூறியது போல, ‘காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை ஸ்டாலின் தான் முடிவு செய்வார்’. சட்டமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் உணராமல், சுயநலமாக தேசியத் தலைமைகள் எடுத்த முடிவுகள்தான் காங்கிஸை வாழ்ந்து கெட்ட கட்சியாக தமிழகத்தில் நிலை நிறுத்தியிருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu congress committee performance in lok sabha tn assembly elections

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X