தஞ்சை பெரிய கோயில் சர்ச்சை; இது முதல்முறை அல்ல

ஜோதிகாவின் பேச்சுதான் தஞ்சை பெரிய கோயிலையொட்டி, எழுந்த முதல் சர்ச்சை அல்ல. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் சர்ச்சையும் தொடங்கிவிட்டது என்பதே வரலாறு.

By: Updated: April 30, 2020, 10:14:24 AM

வானுயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில் அதன் கட்டடக் கலைக்காக உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. சிவாலயமான தஞ்சை பெரிய கோயில் பிரகதீஸ்வரர் கோயில் என்றும் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அவ்வப்போது கோயிலையொட்டி கால இடைவெளியில் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பெரிய கோயிலின் விமானத்தைப் பார்த்து வியந்து போகிறவர்கள், எப்படி இவ்வளவு பெரிய கோயிலை கட்டியிருப்பார்கள் என்ற கற்பனையிலும் மலைப்பிலும் நின்று போகிறார்கள். அந்த கோயிலைப் பற்றி எல்லோரும் விரிவாக தெரிந்துகொள்ள முயற்சிப்பது குறைவு. உண்மையில், பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது ராஜராஜன் என்று நம்மவர்களுக்கு தெரிய வருகிறது.

1886 ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்த ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞர் பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து இந்த கோயிலைக் கட்டியது ராஜராஜ சோழன் என்று கூறிய பிறகே இந்த பெரிய கோயிலைக் கட்டியது ராஜராஜ சோழன் எனத் தெரிய வருகிறது.

அதன் பிறகு தஞ்சை பெரிய கோயிலையும் சோழர் வரலாற்றையும் ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் அது கட்டி முடிக்கப்படாத கோயில் என்றும் ராஜ ராஜன் கோயில் கட்டி முடிப்பதற்கு முன்னதாகவே குடமுழுக்கு செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

ராஜராஜ சோழன் பெரிய கோயிலை கட்டி முடிப்பதற்குள் குடமுழுக்கு செய்திருக்கிறார் என்றால் இந்த கோயில் கட்டப்படும்போதே சர்சைகள் தொடங்கிவிட்டிருக்க வேண்டும். அதைவிட, தஞ்சையில் இப்படி ஒரு மாபெரும் கோயிலை ஸ்தாபித்துவிட்ட நிலையில், ராஜராஜனுக்கு பின் வந்த அவனுடைய மகன் ராஜேந்திரச் சோழன் தலைநகரை தஞ்சையில் இருந்து என்ன காரணத்திற்காக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான் என்ற கேள்விகளுக்கு இன்னும் 100 சதவீதம் பொருத்தமான பதில்கள் அளிக்கப்படாமல் அப்படியேதான் உள்ளன.

தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களைப் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாசிரியர் சுரேஷ் பிள்ளை, தஞ்சை பெரிய கோயிலில் 3 புத்தர் தொடர் சிற்பங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு அங்கே புத்தர் கோயில் இருந்தது என்றும் அதனை அகற்றிவிட்டு பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் சிற்பங்களின் குறியீடுகள் மூலம் பொருள் கொண்டு விளக்குகிறார்.

தமிழகத்தில் திருவள்ளுவர், கண்ணகி போன்ற தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற ஆளுமைகளுக்கு மட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்களுக்கு சிலை வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார். அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும் சிலை வைத்தவர் கருணாநிதிதான். ஆனால், அவர் சிலை வைக்க முயன்றபோதும் ஒரு சர்ச்சை எழுந்தது.

1976-ம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி ராஜராஜனுக்கு சிலை வைக்க முயன்றபோது, பெரிய கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. கடும் முயற்சிக்குப் பிறகும் அனுமதி கிடைக்காததால், கருணாநிதி ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்கு வெளியே வைத்தார்.

அதற்குப் பிறகு, ராஜராஜன் அரியணை ஏறிய 1000 ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது, அப்போதும் எதிர்ப்புகள் எழுந்தன. மக்களை அடிமைகளாகக் கொண்டு கட்டப்பட்ட பெரிய கோயில் சாதனை அல்ல என்று அதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஆயிரம் ஆண்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவிஞர் இன்குலாப் எழுதிய ‘ராஜராஜேச்வரீயம்’ என்ற கவிதை விநியோகிக்கப்பட்டதாக அ.மார்க்ஸ் அன்றைக்கு நிலவிய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அதே போல, தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்லும் ஆட்சியாளர்கள் விரைவில் தங்கள் ஆட்சியை இழப்பார்கள் என்ற மூட நம்பிக்கையும் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இப்படி தஞ்சை பெரிய கோயில் கட்டத் தொடங்கியது முதல் தொடங்கிய சர்ச்சை அவ்வப்போது கால இடைவெளியில் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் காலத்தில்தான் தலித்துகளின் நிலம் பறிக்கப்பட்டது என்று கூற மீண்டும் ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது.

2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் தலித் சமூக செயல்பாட்டாளரான டி.எம்.மணி என்கிற உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் திருப்பனந்தாளில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட, பா.ரஞ்சித், “ராஜராஜ சோழன் காலம் பற்றி பொற்காலம் என்று சொல்வார்கள். அந்த ராஜராஜ சோழன் காலம்தான் நம்முடைய இருண்ட காலம் என்று நான் சொல்வேன். இந்த மண்ணில் இருந்து சொல்வேன். ராஜராஜ சோழனை என்னுடைய சாதி என்று பல சாதிகள் போட்டி போடுகிறார்கள். ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் என்னுடைய நிலம் பறிக்கப்பட்டது அவனுடைய ஆட்சி காலத்தில்தான். சாதி ரீதியான மிகப்பெரிய ஒடுக்குமுறைகள் ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜன் காலத்தில்தான்.” என்று பேசினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

தமிழர்கள் பெருமைகொள்ளும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனை தலித்துகளுக்கு எதிராக சித்தரிப்பதாக ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழ் சினிமா உலகில் வெளிப்படையாக தலித் அரசியல் பேசும் பா.ரஞ்சித்தை நீதிபதிகள் கண்டித்தனர். அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நிலவியது. எப்படியோ ரஞ்சித் அந்த பிரச்னையில் இருந்து தப்பித்தார். அப்போது இந்த விவகாரத்தில், சமூக ஊடகங்களில் பலரும் ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டு ஒரு வெர்ச்சுவல் மோதலையே நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சை பெரிய கோயிலுக்கு குட முழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டது. தமிழர் கட்டடக் கலையின் சாதனையாக விளங்கும் பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் ஓதுவார்களும் வலியுறுத்தினர். ஆனால், தேவஸ்தான நிர்வாகம் வழக்கம்போல சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால், பெரிய கோயிலையொட்டி மீண்டும் ஒரு சர்ச்சை உருவானாது.

தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக் கோரி தமிழ் ஆர்வலர்களும் ஓதுவார்களும் உயர் நீதிமன்றம் சென்றனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டதுபோல, சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது சமூக ஊடகங்களில் சமஸ்கிருத ஆதரவாளர்களும் தமிழ் ஆதாரவாளர்களும் கருத்துகளைப் பதிவிட்டு விவாதிக்க பெரும் சர்ச்சையானது.

இறுதியில், உயர் நீதிமன்றம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் தேவாரமும் திருவாசகமும் ஓத, சமஸ்கிருத வேதமந்திரங்கள் ஒலிக்க குடமுழுக்கு நடைபெற்றது. ஒரு வழியாக பெரிய கோயிலின் பெரும்பிரச்னையாக உருவெடுத்த குடமுழுக்கு பிரச்னை முடிவுக்கு வந்தது.

பெரிய கோயிலைப் பற்றிய சர்சை ஓய்ந்தது, கொரோனாவால் பொது முடக்கம் அமலில் உள்ளதால் அனைவரும் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, நான் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றிருந்தேன். நான் ஷூட்டிங்கிற்கா தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். அப்போது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்க்காமல் போகாதீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் அது என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறேன். உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல அவ்வளவு அழகான கோயில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷுட்டிங் இருந்தது. தஞ்சை கோயிலுக்கு நேர் எதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டிருந்தது. நான் பார்த்ததையெல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு. இதன் பிறகு, அந்த கோயிலுக்கு செல்ல எனக்கு தோன்றவில்லை. இதை வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். கோயில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பராமரிக்கிறீர்கள். உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள். தயவு செய்து அதே பணத்தை பள்ளிக்கூடங்களுக்காகவும் மருத்துவமனைகளுக்காகவும் கொடுத்து உதவுங்கள். கோயில்களைப்போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை என்று ஜோதிகா தன் மனதில் பட்டதை பேசினார்.

ஜோதிகா எப்போதோ பேசிய வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, ஜோதிகா ஒரு தேவாலயம் பற்றியோ அல்லது மசூதியைப் பற்றியோ இப்படி ஒரு கருத்தை சொல்ல முடியுமா? என்று  விமர்சனம் செய்து சர்ச்சையாக்கினார்கள். ஜோதிகாவுக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் சமூக ஊடங்களில் பதிவிட்டு கடுமையாக சாடிக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில், ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் சூரியா அறிக்கை வெளியிட்டார். இதனிடையே, ஜோதிகாவின் மாமனார் சிவக்குமார் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, ”நான் கோயில்களுக்கு அதிகமாக போகாததற்கு காரணம், கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை பணக்காரன் பாகுபாடு கோயிலில் இருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடினார்கள். அந்த கோயிலைக் கட்ட ஆயிரக் கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும் வேலை செய்திருப்பார்கள். ஒரு சிற்பி 15 அடி உயரமுள்ள ஒரு கல்லை எடுத்து அதன் மீது ஏறி அமர்ந்து கொத்தி செதுக்கி சிவலிங்கமாக்கியிருக்கிறான். அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துவிட்டால், அந்த சிற்பியாலேயே சிவலிங்கத்தை தொட முடியாது. கட்டிட வேலை செய்தவர்களும் தொட முடியாது. அந்த சிற்பிகளும், கொத்தனார்களும் சித்தாள்களும் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட முடியாது. இதை நான் தவறாக சொல்வதாக நினைக்காதீர்கள். செம்மொழி மாநாட்டில் நான் பேசும்போது, தஞ்சாவூரில் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த சிவலிங்கத்தை செய்த சிற்பியின் 12வது தலைமுறையைச் சேர்ந்தவர், எனக்கு போன் செய்து, இன்னும் அந்த நிலைமைதான் இருக்கிறது. நாங்கள் கோயிலுக்குள் போக அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்.” என சிவக்குமார் உறுதியாக பேசியுள்ளார்.

ஜோதிகா பேசி சர்ச்சையான விவகாரமே இன்னும் ஒயாத நிலையில், சிவக்குமார் பேசிய வீடியோ மீண்டும் வைரலாகி உள்ளது. கடவுள் வேடங்களில் நடித்த இறை நம்பிக்கையுள்ள சிவக்குமாரே சொல்லிவிட்டார் என்று ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆகையால், ஜோதிகாவின் பேச்சுதான் தஞ்சை பெரிய கோயிலையொட்டி, எழுந்த முதல் சர்ச்சை அல்ல. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் சர்ச்சையும் தொடங்கிவிட்டது என்பதே வரலாறு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Thanjavur big temple brihadeeswara temple jyothika controversy speech ranjith speech sivakumar speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X