போயஸ் கார்டன் வேதா நிலையம் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. இன்று அதனை ஆளாளுக்கு சொந்தம் கொண்டாட, பிரச்னைக்குரிய இடமாக மாறியிருக்கிறது.
தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் போயஸ்கார்டனில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. ஜெயலலிதா இறந்த பின்னர் அங்கு சசிகலா குடியிருந்தார். அங்கிருந்தபடியே கட்சியின் நிர்வாகிகளை விஐபிகளை சந்தித்து வந்தார்.
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்த போதும் அவர் போயஸ் கார்டன் வீட்டில்தான் குடியிருந்தார். அவருடன் இளவரசி மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் யாரும் போயஸ் கார்டனில் தங்குவதில்லை.
இந்நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஆவி உலவுவதாகவும் வதந்திகள் வெளியானது. இதையடுத்து இரவில் யாரும் வேதா நிலையத்தில் தங்குவது இல்லை. ஜெயலலிதாவின் நேரடி உதவியாளராக இருந்து வந்த பூங்குன்றன் மட்டும் தினமும் அலுவலகம் வந்து செல்கிறார். வீட்டில் வேலைப் பார்த்த சில பெண்களும் வந்து செல்கிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எப்போதாவது அங்கு வந்து செல்கிறார்.
ஜெயலலிதா இறந்த பின்னரும் சசிகலா வேதா நிலையத்தில் தங்கியிருந்த வரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சசிகலா ஜெயிலுக்கு போன பின்னர் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, தனியார் பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபா, போயஸ் கார்டன் சென்ற பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேதா நிலையம் ஜெயலலிதா வாழ்க்கையில் பிரிக்க முடியாத இடம். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் பார்த்த இடம். அங்கு அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து, ஜெயலலிதா மிகவும் உருக்கமாக குமுதம் வார இதழில் எழுதியுள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதா 70 களில் ‘மனம் திறந்து சொல்கிறேன்’ என்ற தலைப்பில் குமுதம் வார இதழில் எழுதி வந்தார். அதன் முதல் பகுதியில் வேதா இல்லம் பற்றி சொல்கிறார். அதன் விபரம் வருமாறு:
’’ ‘என் வீட்டின் பெயர் வேதா நிலையம்’. அம்மாவின் உண்மையான பெயர் வேதா. திரை உலகத்திற்காக வைத்துக் கொண்ட பேர் தான் சந்தியா. அவங்க பேரையே வீட்டுக்கு வைச்சிருக்கேன்.
இந்த வீடு உள்ள இடம் போயஸ் கார்டன். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு அருகே. இங்கிருந்து கடற்கரை, தியேட்டர்கள், மவுண்ட் ரோடு, ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே கிட்ட இருக்கு. இவ்வளவு செண்ட்ராக இருக்கே தவிர, இங்கே போக்குவரத்து எல்லாம் ஜாஸ்தி கிடையாது. பஸ் லாரி சத்தங்களே கிடையாது. அமைதியாக இருக்கு. எங்கேயோ ஊட்டியிலோ கொடைக்கானலிலோ இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படுகிறது.
இந்த வீட்டில் என்னிக்காவது என்னை தனியாக உட்கார விட்டிருப்பாங்களா? எப்போதுமே இருபது இருப்பத்தைந்து பேர் என்னைச் சுற்றி உட்கார்ந்திருப்பாங்க. இப்போ நான் தனியாக உட்கார்ந்திருகேன்னா யாரும் என்னை இப்போ தேடி வரதில்லைன்னு அர்த்தம் இல்லை. இப்போதெல்லாம் , அதாவது இரண்டு, இரண்டரை வருடங்களாகவே, என்னைத் தேடி யாரையும் நான் வர விடுறதில்லை. அனுமதிக்கிறதில்லை. அதுதான் காரணம். எனக்கு நானாக விதிச்சுக்கிட்ட வனவாசம்னு சொல்லலாம். வனவாசம் என்றால் வனம் இல்லை. எல்லா மார்டன் வசதியும் இருக்கிற விசாலமான பங்களாவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் தனிமையில் வாழ்ந்து கொண்டு இருக்கேன்.
இந்த ரூமில் இருக்கும் போது என் கண், என் எதிரில் இருக்கிற ஜன்னலிலே இருக்கிற கர்ட்டனிலேதான் படர்கிறாது. அந்தக் கர்ட்டன் மஞ்சல் கலர். என்னுடைய டிராயிங் ரூமிலே இருக்கிற மெயின் கலர் ஸ்கீம் பச்சை. மஞ்சள், பிரெள்ன். இந்த ரூமில் இருக்கிற ஒவ்வொரு பொருளையும் ஓவ்வொரு பொருளையும் ஒவ்வொரு டெக்ரேஷனையும் எங்க அம்மாவும் நானும் சேர்ந்து உட்கார்ந்து, பேசி, டிஸ்கஸ் பண்ணித்தான் வாங்கினோம். அப்போ இந்த ரூமுக்கு பச்சை கர்ட்டன் போடனும்கிறது என்னுடைய வாதம். அம்மா வேண்டாம். ’பச்சை போட்டால் ரொம்ப பளீரென்று இருக்கும். நல்லா இருக்காது. மஞ்சள் போட்டால் கண்ணியமா இருக்கும். கண்ணுக்கு குளுமையாக இருக்கும்’ன்னாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சண்டை போட்டோம். அம்மாவும் நானும் சண்டை போடுவோம். கடைசியிலே எப்போதும் நாந்தான் விட்டுக் கொடுக்கிறது வழக்கம். அது போல இந்த கர்ட்டன் விஷயத்திலும் நாந்தான் விட்டுக் கொடுத்தேன். உண்மையில் மஞ்சள் ரொம்ப பிரமாதமாகத்தான் இருக்கு. நான் சொன்ன மாதிரி போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கது.
அதே போல இந்த ஸோபா. ஸோபா மேலே தைக்கப்பட்டிருக்கிற துணி, எதிரே இருக்கிற காஷ்மீர் லாம்ப், அதற்கு மேலே ஸில்கிலே ஷேட்... இந்த ரூமிலே இருக்கிற ஒவ்வொரு துணி, ஒவ்வொரு பொருள், ஒவ்வொரு கார்பெட், அலங்காரப் பொருள் எல்லாமே எங்க அம்மா ஸெலக்ட் பண்ணினதுதான்.
இந்த ஸோபாவுக்கு டிஸைன் கொடுத்து, ஆர்டர் கொடுத்து வாங்கினது எங்க அம்மாதான். ஆனால் ஒரு நாள் கூட அவங்க இந்த ஸோபாவிலேயே உட்காரையே! ஏன்னா, அம்மா போகும் போது இந்த வீடு கட்டி முடியவில்லை.
இந்த ஸோபாவை பார்க்கும் போதெல்லாம், என்னுடைய வாழ்க்கையிலேயே ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் உடல்நிலை அப்போ சரியாக இல்லை. இரண்டு மூன்று நாளாய் உடம்பு சரியாக இல்லை. என்னமோ பலவீனம் சோர்வுன்னு நினைச்சுட்டு நானும் யார்கிட்டேயும் சொல்லலை. டாக்டர் கிட்டேயும் போகலை. அன்னைக்கு காலையிலே யாரோ என்னை பார்க்க வந்திருந்தாங்க. அதுக்காகத்தான் கீழே இறங்கி வந்து, இங்கே உட்கார்ந்தேன். பேசும் போதே தலை சுற்றியது. உடல் தள்ளுகிற மாதிரி இருந்தது. ஒரு வழியாகப் பேசி முடிஞ்சதும் அவர் போனதும், ஒரு மாதிரியான சோர்வு, மயக்கம் போட்டு இங்கேயே ஸோபாவிலே விழுந்துடேன். வீட்டிலே எல்லோரும் பதறி போயிட்டாங்க. வேலைக்காரங்க எல்லோரை யும் கூப்பிட்டாங்க. சித்திமார்கள் ஓடி வந்தாங்க. அப்போ என் கூட இரண்டு சித்திகள் இருந்தாங்க.
வீட்டிலே இருந்த ஓரே ஆண் பிள்ளைத் துணை எங்க சித்தப்பாதான். அவர் வீட்டிலே இல்லை. வெளியூருக்குப் போயிருந்தார். லேடீஸ்களுக்கு என்ன செய்யறதுன்னு புரியல. அப்போ இருந்த மானேஜர் , உடனே திரு.எம்.ஜி.ஆர்க்கு டெலிபோனில் தகவல் சொன்னார். ’அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. வேறு ஒருத்தரும் ஹெல்ப் பண்றதுக்கு வீட்டில் இல்லை’ன்னு சொல்லியிருக்கார்.
அவரும் உடனே டாக்டருக்கு பொன் பண்ணி வரச் சொல்லிவிட்டு, அவரும் வந்தார். ‘நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு. ஆஸ்பத்திரியில்தான் அட்மிட் பண்ணனும். இது வீட்டிலேயே பார்க்கிற கேஸ் இல்லைன்னு டாக்டர் சொல்லியிருக்கார். திரு. எம்.ஜி.ஆர் எல்லோரையும் தயார்படுத்தச் சொன்னார். இந்த ஸோபாவிலே நான் படுத்துட்டிருந்தேன். அவர் பக்கத்திலேயே இருந்தார். டாக்டர் இருந்தார். மானேஜர், வேலைகாரர்கள் எலோரும் ஆஸ்பத்திருக்குப் போக தயாராக இருந்தாங்க. ஆனால் என்னுடைய இரண்டு சித்திமார்கள் மாடியிலே என்னமோ பண்ணிக் கொண்டிருந்தாங்க. அவங்க கீழேயே வரலை. டாக்டர் வாட்ச்சை பார்த்தனர். ‘என்னங்க, சீக்கிரம் கூட்டிக்கிட்டு போகனுங்க... இல்லைன்னா, கேஸ் இன்னும் ஸீரியஸ் ஆகிடும்’னு சொன்னார். வேலைக்காரங்களும் மேலே போய் பார்த்துட்டு வந்தாங்க. சித்திங்க இரண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. வர மாட்டேங்கிறாங்க சொன்னாங்களே தவிர ஏதோ மழுப்பிக்கிட்டே இருந்தாங்க. ‘என்ன நடக்குதுன்னு நானே பார்த்துட்டுவாறேன்’ன்னு சொல்லி டாக்டர்கிட்ட என்னைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு திரு. எம்.ஜி.ஆர் மேலே போனார்.
அங்கே போனால், என்னுடைய அறைக்குள்ளேயே, என் சித்திமார்கள் இரண்டு பேரும் என் கொத்துச் சாவியைப் பிடிச்சுகிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. இங்கே என் உயிர் டேஞ்சரில் இருக்கிறதைப் பத்தி அவங்களுக்குக் கவலையில்லை. பெண்ணை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போகணுமே, அவளுக்கு ஏதாவது வைத்தியம் பண்ணனுமேன்னு அக்கறை இல்லை. இரண்டு பேரும் என் சாவிக் கொத்தை யார் வைச்சுக்கிறதுன்னு காரசாரமா சண்டை. எம்.ஜி.ஆருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. சாவிக் கொத்தை வாங்கிக்கிட்டு, உடனே அவங்களைக் கீழே வரச் சொல்லிட்டு, எனது அறையைப் பூட்டிட்டு வந்தார். உடனே எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போனோம். மயக்கம் தெளியறதுக்கு எனக்கு எத்தனையோ நேரம் ஆச்சு. நிறைய மணி நேரம். அத்தனை மணி நேரமும் எம்.ஜி.ஆர் பொறுமையா அங்கேயே இருந்தார். நான் மயக்கம் தெளிந்து பார்த்த முதல் முகம் அவர் முகம்தான். உடனேயே சாவிக் கொத்தை நீட்டி, ’இதை பத்திரமா வச்சிக்கோ’ன்னு என்கிட்டே கொடுத்தார்.
ரொம்ப நாட்களுக்கு அப்புறம்தான் என் சாவிக் கொத்து எப்படி அவர் கிட்டே வந்தது, இந்த மாதிரி ஏன் நடந்ததுன்னு எனக்கு தெரியவந்தது.’’ இவ்வாறு குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.