பெண் என்னும் போராட்டம்

பெண்கள் முன்னின்று நடத்தும் போராட்டங்கள் கொச்சைப்படுத்துவது இன்று நேற்றல்ல காலகாலமாக நடந்து வருகிறது. முதல்வர் பழனிச்சாமியே கொச்சைப்படுத்தும் அதனால்தான்.

கவிதா முரளிதரன்

சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூருக்கு அருகில் இருந்த வெங்கல் என்கிற சிறு கிராமத்துக்கு சென்றிருந்தேன். அருகில் நடக்கும் மாட்டுச் சந்தையை பற்றிய செய்திக்காகதான் பயணம். ஆனால் வெங்கல் சென்றிருந்த போது அங்கு வேறொரு பிரச்னையும் ஓடிக் கொண்டிருந்தது. மிகத் தீவிரமாக சில பெண்கள் அங்கு கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சாலையில் வரவிருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் பெண்கள் என்று பேச்சுக் கொடுத்த போது புரிந்தது.

பெரும்பாலும் தலித்துகள் வாழும் வெங்கலில் அவ்வளவு எளிதாக பெண்கள் போராட முன் வருவதில்லை. ஆனால் ஆறாவது படிக்கும் ஒரு சிறுவன் மது அருந்துவதை பார்த்த பிறகு போராடாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள் அந்த பெண்கள். இதுதான் பெண்களின் இயல்பு.

தாம் வாழும் சூழலுக்கும் எதிர்கால நலனுக்கும் கேடு விளைவிக்கும் எந்தவொன்றையும் பெண்கள் போராடாமல் கடந்ததில்லை. சாதாரணமாக ஒரு குடும்பத்தில் வாழும் ஒரு சராசரி பெண் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் போராட்ட பங்களிப்பு பற்றிய தமிழக வரலாற்றிலேயே கூட பல உதாரணங்கள் இருக்கின்றன. 1930களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதானவர்களில் பலர் பெண்கள். பெண்கள் மாநாடு நடத்தி அதற்கு ஆதரவு திரட்டினார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் வரையில் பெண்கள் முன்னின்று (முன்னிறுத்தப்பட்டு அல்ல) நடத்திய பல போராட்டங்கள் வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்திருக்கின்றன.

பெண்கள் சமையலைறைக்கு பூட்டு போட்டு வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று காந்தி குரல் கொடுத்த வரலாறு நமது. பெண்களால் மட்டுமே இதயத்தை தொடும் ஒரு வலிமையான கோரிக்கையை முன் வைக்க முடியும் என்றார் காந்தி.

இன்று நமது தலைவர்கள் பெண்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை `முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டங்கள்` என்று கொச்சைப்படுத்துகிறார்கள். பெண்களும் குழந்தைகளும் முன்னிறுத்தப்பட்டு நடைபெறும் போராட்டங்கள் இப்போது பேஷனாகிவிட்டது என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருந்தவரையில் கட்சியிலும் ஆட்சியிலும் அவரது இருப்பு பரவலாக அறியப்படாத நிலையில் இருந்த ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதன் பொருத்தம் அல்லது பொருத்தமற்றதன்மை பற்றி பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் பெண்களின் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல.

கூடங்குளம் போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் வீதிக்கு வந்து போராடிய போது அதை இப்படிதான் சொல்லி கொச்சைப்படுத்தினார்கள் காந்திய வழி நிற்பதாக சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் தரப்பினர். வேறெதையும் விட போராடும் பெண்கள் அதிகார வர்க்கத்தை கூடுதலாக பதற்றப்பட வைக்கிறார்கள். எனில் காந்தி சொன்னது போல அவர்களால் இதயத்தை தொடும் வலிமையான ஒரு கோரிக்கையை எழுப்ப முடிகிறது. அவர்கள் வாழ்வின் பக்கம், அசலான வளர்ச்சியின் பக்கம் நின்று தங்களது போராட்ட குரலை எழுப்புகிறார்கள்.

தமது சூழலும் அதன் அமைதியும் எதிர்காலமும் அச்சுறுத்தப்படும் போதே அவர்கள் போராட்ட களம் காண்கிறார்கள். அவர்களது போராட்டம் நீடித்த தன்மையுடையதாக இருக்கிறது. 1980களில் அமெரிக்க-ருஷ்ய பனிப்போரின் விளைவாக இங்கிலாந்தில் க்ரீன்ஹாமில் அணு ஆயுத ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்பட்ட போது அதை எதிர்த்து நூற்றுக் கணக்கான பெண்கள் முகாம் அமைத்து போராடினார்கள். 19 வருடங்கள் இந்த போராட்டம் நீடித்தது. துளியும் வன்முறையற்ற அந்த போராட்டத்தில், பெண்கள் வாழ்க்கையின், வளத்தின், தாய்மையின் கூறுகளை முன் வைத்து போராடினார்கள். ஆயுதமேந்திய ராணுவ வீர்ர்களுக்கு எதிராக டெடி கரடி போல வேடமணிந்து போராடினார்கள் பெண்கள். ஒரு முறை ராணுவ வீரர்களுக்கு முன் கண்ணாடிகளை காட்டி போராடினார்கள். குழந்தைகளின் diaperகள், பொம்மைகள், ரிப்பன்கள் ஆகியவற்றை வேலியில் கட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இப்படி அவர்கள் செய்ததன் நோக்கம் ஒன்றுதான். அழிவுக்கு துணை போகும் ஏவுகணைகளுக்கு எதிராக வாழ்வின், வளத்தின் குறியீடுகளை முன்னிறுத்தி அவர்கள் போராடினார்கள். இந்த கூறுகளை பெண்களின் போராட்டங்களில் பொதுவாக காண முடியும். தன்னை அழித்தாவது ஒரு மோசமான சட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐரோம் ஷர்மிளா நினைத்ததும், சிப்கோ இயக்கத்தில் மரங்களை கட்டி அணைத்து அதை பெண்கள் பாதுகாக்க முனைந்ததும் கீரீன்ஹாம் போராட்ட பெண்கள் சொன்னது போல் “இன்னும் சிறப்பான ஒரு வாழ்க்கைக்காகவும் எதிர்காலத்துக்காகவும்தான்.”

ஒரு குழந்தை ஊனமாக பிறப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கூடங்குளம் பெண்கள் எழுப்பும் கேள்வியும் ஆறாவது படிக்கும் பையன் மது அருந்துவதை பார்த்த பிறகும் எப்படி முடங்கியிருப்பது என்று வெங்கல் பெண்கள் எழுப்பும் கேள்வியும் சந்திக்கும் புள்ளி இது. இந்த எளிமையான கேள்விகளில் உள்ள உண்மையும் நியாயமும் பதில் எதுவும் இல்லாத அதிகார வர்க்கத்தை சுட்டெரிக்கிறது. அந்த வெம்மையிலிருந்து பிறப்பதுதான் போராடும் பெண்கள் பற்றிய கொச்சைப்படுத்துதல்கள்.

பெண்களுக்கு வருவது போல ஆண்களுக்கும் மாதவிலக்கு ஏற்பட்டால் அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது பற்றி பெண்ணியவாதி க்ளோரியா ஸ்டெய்னிமின் பிரபலமான கட்டுரை ஒன்று இருக்கிறது. அது பெண்கள் சந்திக்கும் போராட்டங்களுக்கும் பொருந்தும். உண்மையில் பெண்களையும் தனி வாழ்க்கையிலும் பொது வெளிகளிலும் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஒரு பெண் போராட்டத்துக்குள் பிறந்து அதற்குள்ளேயே வளர்கிறாள். முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் ஒரு தலைவரோ, அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளோ செய்யும் கொச்சைப்படுத்துதல்கள் அவளது போராட்டத்தை இன்னும் கூர்மையடைவே செய்யும். எனில் எல்லா பெண்களுக்கும் போராட்டம் என்பது இன்னும் கொஞ்சம் சிறப்பான வாழ்க்கையை நோக்கிய பாதை.

(கட்டுரையாளர் கவிதா முரளிதரன், கடந்த 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் ஒரு பத்திரிக்கையாளராக பெரும்பங்கை வகித்து வருகிறார். இந்தியாவின் பல செய்தி ஊடகங்களில் பணியாற்றிய இவர், தற்போது அரசியல், சமூகம், பெண்கள் மற்றும் இன்னபிற தலைப்புகளின் கீழ் ஃப்ரீலான்சராக கட்டுரைகள் எழுதி வருகிறார்.)

×Close
×Close