தமிழக அரசு ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் டிடிவி.தினகரனே முதல்வர் எடப்பாடிக்கு எதிராக இருப்பதுதான் ஆச்சரியம். சசிகலா குடும்பத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸ் இது. இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதி தினகரன் தரப்பு அடிபட்ட புலியாக உறுமிக்க் கொண்டு இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை கட்சியின் பொது செயலாளராக்கிய கையோடு, அவரை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, ஓ.பி.எஸ். சசிகலா தலைமைக்கு எதிராக கலகக்குரல் எழுப்பினார். டிடிவி.தினகரன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத ஓபிஎஸ், மறுதலித்த போது ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட நாலு பேருக்கு தண்டனை கிடைத்து ஜெயிலுக்கு போனார். சிறை செல்லும் முன் டிடிவி.தினகரனை துணை பொது செய்லாளராக்கினார். அவருடைய ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் நாற்காலியைப் பிடித்தார். ஆனாலும் டிடிவி.தினகரன் சொல்வதையே வேதவாக்காக கருதி செயல்பட்டு வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிட்டார்.
வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கட்சியை கைப்பற்றும் வேலையில் இறங்கினார், டிடிவி.தினகரன். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீசார் டிடிவி.தினகரனை கைது செய்து, திகாரில் அடைத்தனர்.
ஒரு மாதம் சிறையில் இருந்த அவர், கடந்த 2ம் தேதி ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்தார். டெல்லி விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், ‘சென்னை சென்றதும், கட்சி பணிகளை தொடங்குவேன்’ என்றார். இது அமைச்சரவையில் இருந்த பலருக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவருக்கு எதிராக ஏப்ரல் 13ம் தேதி அமைச்சர்கள் போர்கொடி தூக்கினர். கட்சி பணிகளில் டிடிவி. தலையிடக் கூடாது என்று சொன்னார்கள். அவரும் அதை ஏற்று, ‘அம்மாவின் ஆட்சி தொடர அரசியலில் இருந்து நான் ஒதுங்கி இருக்கிறேன்’ என்று சொன்னார்.
‘கட்சியில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருப்பதாலேயே நிறைய சோதனைகளை ஆளும் அரசு சந்தித்து வந்தது. அவர்கள் ஒதுங்கி இருப்பதாக அறிவித்த பின்னரே, மத்திய அரசு அமைதியானது. இப்போதுதான் தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. ஜெயிலில் இருந்து வந்ததும், தினகரன் கட்சி பணிகளில் தலையிடப் போவதாக சொல்வது பிரச்னைகளை அதிகரிக்க செய்யும். அவர் ஒதுங்கியிருப்பதே, அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது.’ என்றார் மூத்த அமைச்சர் ஒருவர்.
ஆனால் இதையெல்லாம் கேட்கும் மன நிலையில் டிடிவி.தினகரன் இல்லை என்கிறார்கள். டெல்லி சிறையில் இருந்த போது டிடிவி.தினகரன் பாஜக மேலிடத்துக்கு தூது அனுப்பிப் பார்த்தார். ஆனால் அவர்கள் பிடிகொடுக்கவில்லை. அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கையில் எடுத்துவிட்டனர். அவரும் ஆட்சியை தக்க வைக்க மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்ட ஆரம்பித்துவிட்டார். இது தமிழகத்தில் பெரிய அளவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை கழக துணை வேந்தரை தேர்வு செய்ய கவர்னரே நேர்முக தேர்வு நடத்தி நியமித்தார். இது இதுவரை இல்லாத ஒன்று.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயூடு, தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு துறை அதிகாரிகளை அழைத்து அமைச்சருடன் அமர்ந்து ஆய்வு செய்கிறார். சசிகலாவின் பினாமி ஆட்சி என்று சொல்லப்பட்ட எடப்பாடியின் அரசு, பாஜகவின் அடிமையாகிவிட்டது என்று எதிர்கட்சிகள் நக்கல் செய்யும் அளவுக்கு ஆகிப் போனது.
இதையெல்லாம் தாண்டி டெல்லியில் நடந்த சில மூவ்களை எடப்பாடி தலைமையிலான அணி கவனிக்க தவறிவிட்டது. ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற மத்திய அரசுக்கு இணக்கமாக செல்ல டிடிவி.தினகரன் விரும்பியது உண்மைதான். ஆனால் பிஜேபி அதற்கு தயாராக இல்லை. ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தி அவரது குடும்பத்தையே வெளியே அனுப்ப தயாராகிவிட்டது. ஓபிஎஸ். இபிஎஸ் இரு அணிகளையும் இணைத்து தமிழகத்தில் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் என நம்பியது. அதைவிட ஜனாதிபதி தேர்தலில் அதிமுக வசம் உள்ள 50 ஆயிரம் புள்ளிகள் தங்கள் வெற்றியை உறுதிபடுத்தும் என்று நம்பியது.
காங்கிரஸ் கட்சிக்கும் இது தெரியாமல் இல்லை. இந்த ஓட்டுக்கள் காங்கிரஸ் வசம் வந்தால் போட்டி கடுமையாக இருக்கும். சமீபத்தில் சோனியா அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் விருந்து கொடுத்தார். அப்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவை எடுத்தனர். அதிமுகவின் 50 ஆயிரம் புள்ளிகளை குறி வைத்து காய் நகர்த்த முடிவு செய்யப்பட்டது. முழுவதுமாக அந்த ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும், கணிசமான புள்ளிகளை பெற வேண்டுமானால் டிடிவி.தினகரனை கையில் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து அதற்கான காயை நகர்த்தினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரிடம் அந்த பணி ஒதுக்கப்பட்டது.
அவர் எம்.நடராஜனோடு நெருக்கமாக இருப்பவர். ரகசிய பேச்சுவார்த்தைகள் கச்சிதமாக முடிந்தது. டிடிவி.தினகரனுக்கு ஜாமீன் கிடைக்க தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்தது. ஜாமீனில் வெளியே வந்த டிடிவி.தினகரன் தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் அரசிடம் சொல்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து, தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சொல்ல வேண்டும். தினகரன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற செய்ய வேண்டும். இதை செய்ய தவறினால் ஜனாதிபதி தேர்தலில் பாஜகாவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.
இந்த கோரிக்கைகளை ஏற்க இபிஎஸ் தரப்பு மறுத்தால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற டிடிவி தரப்பு தயாராகிவிட்டது. வெளிப்படையாக அமைச்சர் பதவி கேட்டு மிரட்டி வந்த முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், தங்கமணி, செந்தில்பாலாஜி உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி.தினகரனை வரவேற்க டெல்லிக்கே சென்றனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து டிடிவி.தினகரனோடு தொடர்பில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் 5 பேர் உள்பட 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவருக்கு உள்ளதாம். கணிசமான எம்பிக்கள் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. தினகரனின் கோரிக்கையை மீறி பாஜக அரசுக்கு வாக்களித்தால், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்துவிடுவார், தினகரன்.
என்னதான் மத்திய அரசின் ஆதரவு இருந்தாலும், ஓபிஎஸ் தரப்பு வாக்களித்தாலும் ஆட்சியை காப்பாற்ற முடியாது. இருந்தாலும் தன் சமூகத்தைச் சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட இபிஎஸ் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். தினகரன் அணியிலிருந்த செங்கோட்டையனே இபிஎஸ் அணியில் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். ஜெயக்குமார் பேட்டிக் கொடுத்த போது கொங்கு அமைச்சர்களே அதிகம் அங்கிருந்தனர்.
ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வந்தால், அதை எப்படி சந்திக்க வேண்டும் என்பது டிடிவி.தினகரனுக்குத் தெரியும். தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று, தேர்தலுக்கு பின் கட்சியை கைப்பற்றிவிடலாம் என்று டிடிவி.தினகரன் கணக்குப் போடுகிறார்.
ஒருவேளை பொதுத்தேர்தல் வரும் போது, நல்ல கூட்டணியில் இடம் பிடிக்க முடியும் என்று தினகரன் தரப்பு நம்புகிறது.
டிடிவி.தினகரன் சொன்னது போல 60 நாட்கள் கெடு முடியும் முன்பே இபிஎஸ் ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் வியப்பு ஏதுமிருக்காது.