உங்க சொந்த ஊர் பற்றியும் உங்க சிறு வயது நாட்கள் பற்றி சொல்லுங்க?
இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள மண்கும்பான் என்ற தீவில் நான் பிறந்தேன். இலங்கையில் நடைபெற்ற போரல் இடம் பெயர்ந்து மதுரைக்கு வந்துவிட்டோம். அப்போது நான் 3 மாத குழந்தை. எனது சிறுவயது பருவம் இனிமையானதுதான். மதுரையில் நாங்கள் அப்போது இருந்த இடம் முன்னேறிக்கொண்டு வந்தது. இதனால் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பங்கள் அங்கே இருந்தன. படிப்பது, விளையாடுவது என்று பள்ளி பருவம் சென்றது. அப்பா 1991-ம் ஆண்டு புலம்பெயர்ந்து ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். இலங்கையில் போர் நிற்கும். நமது தாய் நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தோம். இதுவரை அது நடக்கவில்லை.
நீங்க பெண்ணாக உணர்ந்த போது? என்ன யோசிச்சீங்க ? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க?
சின்ன வயதிலிருந்தே பெண்ணாக இருக்க வேண்டும் என்று தோன்றும். அழகிய கவுன் குறிப்பாக பேபி ஷாலினி போல் கவுன் அணிந்து பெண்ணாக காலையில் விழிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். இதுபோன்று கற்பனைகள் இருக்கும். இதை பெண்ணாக உணர்ந்து கொண்டது என்று கூறிவிட முடியாது. அதை பற்றி எனக்கு அப்போது ஒன்றுமே தெரியாது. சில ஆண்களுக்கு பெண்ணாக இருக்க வேண்டும், உடை உடுத்த வேண்டும் என்று தோன்றும் என்று நினைத்துக்கொண்டேன். யாரிடமும் இதை பகிர்ந்துகொண்டதில்லை. எனது அக்கா எனக்கு மேக் அப் போட்டுவிடுவாங்க. அக்காவுடன் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளுக்கும் இப்படி தோன்றும் என்று அப்போது நினைத்திக்கொண்டேன். எனக்கு உருவான உணர்வை இதுதான் என்று வெளிபடுத்த முடியவில்லை. பெண் ஆசிரியைகளை பார்த்து அவர்களை போல் நானும் ஒரு ஆசிரியையானால் இப்படி சேலை உடுத்த வேண்டும்/ கைகுட்டியை இப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்வேன். ஒரு கற்பனை உலகில் நான் அப்போது வாழத்தொடங்கினேன். அது ஒரு அளவில்லாத மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.
இன்று திருநங்கை என்று அழைப்பது ஒரு அங்கீகரம் என்று சொல்லலாம். ஆனால் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதே திருநங்கைகள் எண்ணம். அப்படி இருக்கும் போது அவர்களை பெண்களாக கருதுவதுதானே சரி? முன்றாம் பாலினம் என்பதை எப்படி பார்க்குறீங்க?
பெண்ணாக வாழ்வதற்குத்தான் திருநங்கைகள் ஆசைப்படுகிறோம். எனக்கு முன்றாம் பாலினம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. ஆண் என்றால் இப்படி இருக்க வேண்டும் பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்யும்போது மற்றவர்கள் அந்த விதிகளுக்குள் வராததால் அவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள். பெண் இரண்டாம் பாலினம் என்று கூறப்படுகிறது. பெண்கள் வழியாகத்தான் ஆண்களே வருகிறார்கள் என்றால் எப்படி பெண்கள் இரண்டாம் பாலினமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அப்போது மூன்றாவது யார் நான்காவது யார் என்ற கேள்வி எழுகிறது. திருநங்கை என்று அழைக்கும் சொல்லை நான் ஏற்றுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு திருங்கைகள் என்று கூறினால்தான் எங்களது வலியை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் ஏன் கோவமாக நடந்துகொள்கிறோம் என்பதற்கு நாங்கள் சந்தித்த ஒட்டுமுறைதான் காரணம் என்பதை அவர்கள் அப்போதுதான் புரிந்துகொள்கிறார்கள். மேலும் அரசியல் ரீதியாக பார்த்தால், எங்களுக்கு திருநங்கை என்பதால் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒடுக்குமுறைகளை மட்டுமே சந்தித்து வந்த எங்களுக்கு இந்த சலுகைகளால் சிறிய நன்மைகள் கிடைப்பதே மாற்றம் என்று நினைக்கிறேன். இதனால் திருநங்கை என்று எங்களை அங்கீகரிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களால்தான் திருநங்கை என்ற அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது தமிகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் எங்களை போன்றவர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம். இதனால் சமூகத்திலும் குடும்பங்களிலும் எங்களை மதிக்கிறார்கள்.
காமத்தை மறைத்து வைத்ததால் ஏற்படும் சிக்கல் என்ன ? இங்கே காமம் பற்றிய உரையாடல் எப்படி பொதுவாக பார்க்கப்படனும் என்று நினக்குறீங்க?
ஒரு அழகான காமத்தை திருநங்கையால் எப்போதுமே உணர முடியாது. எல்லா திருநங்கைகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆண்கள் பொதுவாக திருநங்கைகளை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள். எனது 6 வயதில் நான் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். இப்படி பல ஆண்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கபட்டேன். ஆண்கள் அவர்களது பாலியல் தேவைகளுக்காக என்னை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று புரிந்துகொண்டபோது இதிலிருந்து வெளியேறினேன். ஆனால் நான் திருநங்கையாக மாறியபோது காதல் என்ற பெயரில் மீண்டும் என்னை ஆண்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். பெண்களும், திருநங்கைகளும் ஆண்களின் பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அந்த உறவில் திருநங்கையின் ஆசை மற்றும் அவர்கள் விருப்பதற்கு இடம் இருக்காது. இந்த சுரண்டலால் நான் காமமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ தயாரிகிவிட்டேன்.
இங்கே அனைவருக்கும் ஒரு தனிமை இருக்கிறது. அந்த தனிமையை கையாள்வது மிகவும் கடினம். திருநங்கைகள் தனிமை எப்படிபட்டது ?
திருநங்கைகள் தனிமை தனித்துவம் வாய்ந்தது. அவர்களுக்கு பொது சமூகத்தினரிடம் எந்த உறவும் இருக்காது. சில திருநங்கைகள், திருநங்கை சமூகத்தினருடன் சேர்ந்து வாழ்வார்கள். ஆனால் என்னால் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. “ உலகம் பெரியது என்று சிந்திக்கும் “ ஒரு நபர் என்பதால். நான் பலதரபட்ட மக்களுடன் பழக விரும்புகிறேன். ஆனால் சில மனிதர்கள் ” திருநங்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்” என்று நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அது எரிச்சலாக இருக்கும். மேலும் என்னை ஏற்றுக்கொள்ளும் சில நபர்களுடன் பழகி வருகிறேன். தற்போது இணையதளம் பரவலாக இருப்பதால், யாருடனும் நேரில் நெருங்கி பழக வேண்டும் என்பதில்லை. இதனால் மக்களோடு நெருங்கியும் பழகலாம். அதே சமயத்தில் அதிக நெருக்கத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளத் தேவையில்லை.
பெண்ணியம், பாலியல் சுரண்டல் இப்படி பல விஷயங்களை தொடர்ந்து பேசும் நீங்கதான் இனப்பற்று நல்லது என்று ஒரு பதிவு முகநூலில் போடுறீங்க? முத்துராமலிங்கர் பிறந்த நாள் அன்று ? இது சரியா? இனப்பற்று அல்லது சாதி பெருமை எல்லாமே பிற்போக்குதானே?
நான் அந்த பதிவு போட்டதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. என்னுடைய புத்தகத்தை ’கருப்பு பிரதிகள்’ வெளியிட்டது. அந்த பதிப்பகம் என்னை மரியாதையாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. எனது புத்தகம் எவ்வளவு பிரதிகள் விற்றது என்று கூட என்னிடம் சொல்லவில்லை. தன்னை முற்போக்குவாதிகள் என்று காட்டுக்கொண்டவர்கள்தான் என்னை இழிவாக நடத்தினார்கள். ”தோழர் .. தோழர் என்று அழைத்து தோளில் கைபோடும்” நபர்களாக இருந்தனர். மேலும் என்னை கடுமையாக விமர்சித்தனர். ”நான் ஏன் பொட்டு வைக்கிறேன். பூ வைக்கிறேன்” என்று கேள்வி எழுப்பினர். ஏற்கனவே திருநங்கை சமூதாயம் நொந்து போய் இருக்கும்போது இதுபோல விமர்சிப்பது என்ன போக்கு என்று தெரியவில்லை. நான் சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது , எனக்கு ஒரு எழுத்தாளராக மரியாதை கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மனிஷியாக கூட நடத்தவில்லை. மதுரைக்கு சென்றிருந்தபோது, எனது பள்ளி தோழியை பார்க்க சென்றேன். அப்போது குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள் என்னை மரியாதையாக நடத்தினார்கள். நான் அந்த சாதியை சேர்ந்தவர் இல்லை என்றாலும் அவர்கள் என்னை மரியாதையாக நடத்தினார்கள். மேலும் முத்திராமலிங்கர் பற்றிய சில தவறான பார்வை இருக்கிறது. அவர் செய்த நன்மைகளை அவர் சேர்ந்த சாதியால் பார்க்காமல் தவிர்க்கப்படுகிறது.
கால்பந்து வீராங்கனை ப்ரியா மரணம் பற்றி சொல்லுங்க ? மருத்துவர்களை கைது செய்வது தீர்வாக இருக்குமா?
ப்ரியாவின் மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் மருத்துவத்துறையில்தான் இருக்கிறேன் என்பதால் என்னக்கு சில விஷயங்கள் தெரியும். குறிப்பாக ஒரு ஆண்டிபயாடிக்கை 7 நாட்கள் நிச்சயம் கொடுக்க வேண்டும் என்பதுகூட மருத்துவர்களுக்கு தெரியவில்லை. நான் தமிழகம் வந்தபோது, உடல் உபாதை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, எனக்கு ”3 நாட்களுக்கு மட்டும் ஆண்டிபயாடிக் கொடுக்கவா? என்று மருத்துவர்கள் கேட்டார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று கூறினேன். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 7 நாட்கள் குறைவாக ஆண்டிபயாடிக் எடுக்க கூடாது என்று கூறினேன். நிறைய விஷயம் கவனமாக செய்ய வேண்டியிருக்கிறது.
பிக்பாஸ் ஷிவின் - கதிர் மேல உள்ள ஒரு அன்பால் அழகா பொறாமைபடுறாங்க. இது ஒரு ரியலிட்டி ஷோவில் நடக்குது. திருநங்கைகளை சமமாக பார்க்க இது உதவி செய்யுமா?
நிச்சயமாக திருநங்கை பற்றிய விவாதங்கள் எழும்போதுதான், நிறைய விஷயங்கள் இங்கே சமமாக பார்க்கப்படும். சிவின் பிக்பாஸ்-க்கு சென்றதே பெரிய விஷயம். இவ்வளவு நாட்கள் நீடிப்பதும் சவாலானதுதான். அன்பு ஏற்படுவது இயற்கைதானே. இதன் மூலம், திருநங்களுக்கு ஒரு காதல் இருக்கும். கண்ணீர் வரும். அன்பு வெளிப்படும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ரியாலிட்டி ஷோ மூலமாக மாற்றம் வரும். இதை நான் வரவேற்கிறேன்.
அரசியல் வெளி ஆண்களால் நிரம்பி இருக்குது. பெண்கள் மேலே வர முயற்சி பண்ணுராங்க. சில திருநங்கைகள் ஊரட்சி தலைவராக இருக்காங்க. இங்கே அரசியல் அதிகாரம் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஒரு திருநங்கை முதல்வராக வருவது சாத்தியமா?
திருநங்கை முதல்வராக வருவது சாத்தியாம்தான். அடுத்த 60 வருடங்களில் நடக்காது என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை, அரசியல் குடும்பத்தை சேராத நபர்கள் அரசியலுக்கு வருவதே சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அரசியல் குடும்பத்தை சேர்ந்த திருநங்கை வேண்டுமானால் முதல்வராகலாம்.
ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் படங்கள் குறித்து உங்கள் பார்வை ?
குறிப்பாக ரஞ்சித் படத்தில் அவர்கள் தேர்வு செய்யும் நடிகைகளை எனக்கு பிடிக்கும். இதனால் இயக்குநர் ரஞ்சித் படங்கள் எனக்கு பிடிக்கும். மாரிசெல்வராஜ் மற்றும் ரஞ்சித் படங்களை நம்மை பெரிதாக பாதித்துவிடும்.
உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று நினைக்குறீங்களா? எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். எனது புத்தகம் பிக்பால் நிகழ்ச்சியில் கமல் சாரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை வெளியிட்ட பதிப்பகம் எனக்கு எந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தரவில்லை. ” உடல் உறவு கொண்டு. அதையெல்லாம் எழுதினால் அது படைப்பாகிவிடுமா ? என்று முற்போக்குவாதிகள் விமர்சித்தனர். தமிழகத்தில் பிறந்த திருநங்கைகளுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. ”ஆனால் நான் ஒரு அகதி. ”அதுவும் அகதியான திருநங்கை” என்பதால் எனக்கு கேலிகளும், விமர்சனங்களும், புறக்கணிப்பும்தான் கிடைத்திருக்கிறது. நான் இங்கே எளிதாக வெற்றியடைந்துவிட்டதாக பேசுகிறார்கள். என்னைப்போல் ஒரு திறமை கொண்ட ஆண் அல்லது பெண் மிக குறுகிய காலத்தில் வெற்றிபெற்றுவிடுவார்கள். ஆனால் நான் அதற்கு பல நூறு மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.