ஜெயலலிதா போலவே இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் போகும் இடமெல்லாம் குட்டிக்கதைகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். கடந்த ஞாயிறன்று, ‘ஆபத்தில் இருக்கும் போது உதவாதவன் நண்பன் அல்ல’ என்று பொருள்படும் படி, பள்ளியில் படித்த கரடி கதையைச் சொன்னார்.
இந்த கதையை அவர் சொன்ன சில மணி நேரங்களில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழுவை கலைத்தார், ஓபிஎஸ். இருவரும் ஓரே கட்சியில் இருந்தாலும் எதிரெதிராக இருக்கிறார்கள். எனவே அவர் ஆபத்தில் இருக்கும் போது உதவாத நண்பன் என்று ஓபிஎஸ் ஐ சொல்ல வாய்ப்பு இல்லை. அப்படியானால் அவர் சொன்னது யாரை? என்ற கேள்வி அரசியல் அரங்கில் உயர்ந்து நிற்கிறது.
அதே ஞாயிற்றுகிழமை நடந்த இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தாக வேண்டும். ஒன்று, தஞ்சாவூரில் தினகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முதலில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர்கள் ரத்து செய்ய வைத்தது யார்? முதல்வருக்கு தெரியாமல் ரத்து செய்ய முடியுமா? டிடிவி தினகரன் பக்கம் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் போது இப்படியொரு முடிவை எடப்பாடி எடுக்க யார் காரணம்? இப்படி பல கேள்விகள் எழுகிறது.
அதிமுகவில் இப்போது மூன்று அணிகள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அதாவது ஓபிஎஸ், எடப்பாடி, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து நிற்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அணிக்கு திவாகரன் தலைமை தாங்குகிறார். திவாகரன் வேறு யாரும் அல்ல. சசிகலாவின் தம்பி. இவர் சொல்வதை கேட்க 24 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக் ஆளும் கட்சியினர் சொல்கிறார்கள். அவர் வெளிப்படையாகவே கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு போன் செய்து, டிவிவி தினகரனுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்று பேசி வருகிறாராம். அவர் கொடுத்த தைரியத்தில்தான், எடப்பாடி முதல்வராக நீடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இரண்டாவது, போயஸ்கார்டனில் நடந்த சம்பவம். கார்டனுக்கு வந்த தீபா, ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த சசிகலா படத்தை அப்புறப்படுத்த முயன்றதும், அவர் துரத்தி அடிக்கப்பட்டார். அவர் சொந்த தம்பி தீபக் மீதும், சசிகலா, டிடிவி தினகரன் மீதும் சரமாரியாக குற்றம்சாட்டினார்.
ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்வுகள் எல்லாமே, டிடிவி தினகரனைச் சுற்றியே நிகழ்ந்துள்ளன. ‘தமிழகத்தில் அதிகமாக வெறுக்கப்படும் குடும்பம் சசிகலா குடும்பம்’ என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்கிறார். ஆனால் அதையும் தாண்டி 33 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள். கட்சியின் மாவட்ட செயலாளர்களில் பெரும்பான்மையினர் தினகரன் அணியில் இருப்பதாகவே தெரிகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று.
மன்னார்குடி குடும்பத்தில் டிடிவி தினகரன் மட்டும் வித்தியாசமானவர். கட்சியினருடன் எளிமையாக பழகக் கூடியவர். இன்று கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் இவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஏன்... ஓபிஎஸ் கூட இவருடைய தேர்வுதான். எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததும் தினகரன் தான்.
தினகரனுக்கும் எடப்பாடிக்கும் என்ன பிரச்னை? ஒன்றும் இல்லை என்றுதான் வெளிப்படையாக சொல்கிறார்கள். ஆனால், டிடிவி தினகரன் ஜெயில் இருந்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை பார்க்க செல்லவில்லை. அதோடு, அமைச்சரவையில் உள்ள சிலர் சசிகலா, தினகரனுக்கு எதிராக பேசிய போதும் முதல்வர் கண்டிக்கவில்லை. அதனால்தான், ‘அமைச்சர்கள் யாருக்கோ பயப்படுகிறார்கள்’ என்று தினகரன் தனது பேட்டியின் போது சொன்னார்.
இத்தனை ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு டிடிவி தினகரன் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அவர் முன் இருப்பது இரண்டு வழிகள். ஒன்று, கட்சியில் அவருக்கே ஆதரவாளர்கள் அதிகம். இப்போதைக்கு 33 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளிப்படையாக சந்தித்து ஆதரவு சொன்னவர்கள். இன்னும் 30 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவித்த 122 எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கு மேல் டிடிவி தினகரன் பக்கம் இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாராகவும் இருக்கிறார்கள். இவர்கள் ஆதரவுடன் டிடிவி தினகரன், முதல்வராக முயற்சிக்கலாம். அப்போதுதான் அவர் மீதும், சசிகலா மீதும் உள்ள வழக்குகளை சந்திக்க முடியும் என்று சிலர் அவருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது.
ந்து என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கேட்டதாகவும் தெரிகிறது.
இரண்டாவது வாய்ப்பு, கட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது என்று தினகரன் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லும் போதே ஏதோ ஆபத்து இருப்பதாக தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க சொல்லப்படுவது. உண்மையில் தினகரனுக்கு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவருடன் இருப்பவர்கள் யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. தினகரனின் ஆதரவாளராக இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மாவட்ட அமைச்சருக்கு எதிரான மன நிலையில் இருப்பவர்கள். தாங்கள் அந்த பதவியில் அமர வாய்ப்பு இல்லையென்னால், ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். உதாரணமாக, தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடியை வற்புறுத்தி வந்த செந்தில்பாலாஜி, அது கிடைக்காததால் தினகரனுடன் கைகோர்த்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் செல்வமோகன் தாஸ் பாண்டியன், இன்பதுரை இருவரும் மந்திரி பதவி கேட்கிறார்கள். எங்கள் சமூகத்தில் யாருக்காவது மந்திரி பதவி கொடுங்கள் என்று நேருக்கு நேர் கேட்டுவிட்டார்கள். அவரும் கைவிரித்துவிட்டார். அவர்கள் இருவரும் இப்போது தினகரனின் தளபதிகள்.
தமிழகத்தில் ஆட்சி நீடிக்கும் வரையில்தான், மத்திய அரசுக்கு அதன் மீது கண் இருக்கும். ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற முகத்திரையோடு சுற்றும் பாஜகவினர், தமிழக முதல்வராக சசிகலா குடும்பத்தினர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். எனவே இந்த ஆட்சி இருக்கும் வரையில் மத்திய அரசின் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் திமுக வசம் ஆட்சி போய்விடும். தேர்தல் அறிவிப்பு வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அப்படியோ போட்டிப்போட்டாலும் ஜெயிக்க முடியாது. போட்டி ஓபிஎஸ், தினகரன் ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் இருக்கும். தேர்தலில் தினகரன் அணி கூடுதலாக வாங்குகளைப் பெற்றாலோ, சில தொகுதிகளில் வென்றாலோ போதும். தேர்தலில் தோற்றுப் போனால் ஓபிஎஸ் தரப்பு சோர்ந்து போய்விடும். அப்போது ஓபிஎஸ் உடன் பேசி, இணைப்பு விழா நடத்திவிடலாம். கட்சியும் சின்னமும் நம் வசம் வந்துவிடும். பின்னர் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதைப் பார்க்கலாம். அதற்குள் கட்சிக்குள் இருக்கும் குழப்பம் தீர்ந்துவிடும் என்று தினகரனுக்கு அட்வைஸ் சொல்லப்பட்டுள்ளதாம்.
இரண்டாவது வாய்ப்பை தினகரன் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். முதலில் கட்சி பின்னர் ஆட்சி என்ற முடிவுக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.