Advertisment

மாமன்னன்... மகளிர் உரிமைத் தொகை... உதயநிதி!

தயாரிப்பாளராக, நடிகராக மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக தீவிரமான விவாதங்களை நோக்கி நகர்ந்துள்ளார் உதயநிதி. சமூக அரசியல் தளங்களில் மாமன்னன் திரைப்படத்தின் மையக் கரு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
மாமன்னன்... மகளிர் உரிமைத் தொகை.

மாமன்னன்... மகளிர் உரிமைத் தொகை.

அரியகுளம் பெருமாள் மணி, அரசியல் ஆய்வாளர்.

Advertisment

தயாரிப்பாளராக, நடிகராக மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக தீவிரமான விவாதங்களை நோக்கி நகர்ந்துள்ளார் உதயநிதி. சமூக அரசியல் தளங்களில் மாமன்னன் திரைப்படத்தின் மையக் கரு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகங்களின் அரசியலை நுட்பமாகப் பேசிய ஒரு சில திரைப்படங்களில் மாமன்னனும் ஒன்று. ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி தனது திரைப் பயணத்தில் நீண்ட தூரம் வந்து விட்டார். தனது இறுதிப் படமாக மாமன்னனை தேர்ந்தெடுத்தது மிகவும் முக்கியமான அரசியல் நகர்வு. மாமன்னனை ஆபத்தான நகர்வு என்றும் மதிப்பிடலாம்.

மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு திராவிட இயக்க ஆதரவாளர்களும் அதற்கு எதிர் நிலையில் இருப்பவர்களும் படத்தின் மீது பல்வேறு பார்வைகளை முன்வைத்தனர்.  சமூக வலைதளங்களில் வெளியான முக்கியமான விமர்சனங்களுக்கு உதயநிதி பதிலளித்தார்.  மாமன்னன்  பற்றிய உதயின் ஒவ்வொரு பதிவும் நுண் அரசியலைப் பேசியது. நகைச்சுவை கலந்த எளிய கதாநாயக பாத்திரங்களை தேர்ந்தெடுப்பவராக அறியப்பட்ட உதயநிதி மாமன்னன் படத்தின் வாயிலாக கனமான அரசியலை பேசும் கதாநாயகனாக உயர்ந்தார்.

திராவிட இயக்க ஆதரவாளர்களாக கருத்தியல் தளத்தில் செயல்படுபவர்களில் பலர் மாமன்னன் படத்தை விமர்சித்தனர். கள அரசியலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு போட்டி அமைப்பான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களில் ஒருவரான தனபால் அவர்களைப் பற்றிய படம் என்ற கருத்தாக்கம் சமூகவலைதளங்களில் படம் வெளியான உடன் ஓங்கி ஒலித்தபோது உதயநிதி அமைதி காத்தார்.

மாமன்னன் பாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை குறிக்கிறது என்றால் ரத்னவேலு பாத்திரம் யாரைக் குறிக்கிறது? அந்த மாவட்டச் செயலாளர் யார்? என கழக உடன்பிறப்புகள் எதிர்க் கேள்வியின் வாயிலாக அதிமுகவிற்கு பதிலளித்தனர்.

இன்றைய அரசின் அமைச்சர்களில் ஒருவர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் சேலத்தைச் சேர்ந்தவர். இத்தகைய சூழ்நிலையில் தனது கதைக்களமாக சேலத்தை உதயநிதி அரசியல் கணக்குகளுடன் தேர்ந்தெடுத்தார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

மாமன்னன் திரைப்படத்தில் பல்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் காட்டப்படும் இருவண்ணக் கொடி மிக முக்கியமான குறியீடு. படம் கழக அரசியலின் போதாமைகளை பேசுகிறதா? என்ற கேள்வி திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உட்பட திமுக ஆதரவாளர்கள் பலருக்கும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அந்த கேள்வியை கடந்து சென்றனர். ஆனால் உதயநிதி் தவறு எங்கே நிகழ்ந்தாலும் அதை திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம் என பலரும் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார்.

மாமன்னன் திரைப்படத்தை முன் வைத்து எழுப்பப்பட்ட பல சிக்கலான தத்துவார்த்த கேள்விகளையும், பதிவுகளையும் உதயநிதி எதிர் கொண்ட விதம் கவனிக்கத்தக்கது. திரைப்படத்தை தாண்டி அரசியலில் தான் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என்பதை உதய் உறுதிப்படுத்திய இடம் இது.

மாநிலம் முழுவதும் மாமன்னன் திரைப்படம் ஒரு வாரத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அறிவார்ந்த தளங்களில் மாமன்னன் திரைப்படத்தைப் பற்றிய விவாதங்கள் பரவிக் கிடக்கின்றன. இந்த நேரத்தில் மாவட்ட. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பட்டியலை இளைஞரணி செயலாளராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி வெளியிட்டார்.

திமுக அரசின் மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத் தொகை உதயநிதி பொறுப்பு வகிக்கும் துறையின் மூலமாக. வழங்கப்படுகிறது. செப்டெம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் பெயரில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க நாள் குறித்துள்ளது திமுக அரசு. மிகப்பெரிய சமூக நலத் திட்டத்திற்கான துறையின் அமைச்சராக உதயநிதியின் பொறுப்பு இங்கே மிகவும் கடினமானது என்று கூறலாம்.

மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பெறுவது, பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பது, தொகையை அவர்தம் கணக்குகளில் வரவு வைப்பது என நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாவும் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வரும். அமைச்சராக நிர்வாகத்தின் பலம், பலவீனங்களை அறிந்துகொள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அவருக்கு உதவும். விளையாட்டுத்துறையில் எத்தனையோ திட்டங்களை அவர் செயல்படுத்தி இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அவருக்கு கற்றுத் தரப் போகும் பாடங்கள் ஏராளம் எனலாம்.

மாமன்னன் வெளியீட்டிற்கும் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பிற்கும் இடையிலான இந்த குறுகிய காலகட்டம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒன்று. இரண்டாண்டு கால திமுக ஆட்சி முதலாம் ஆண்டில் நற்பெயரையும், இரண்டாவது ஆண்டில் விமர்சனங்களையும் எதிர் கொண்டது. அமைச்சரவையில் விரும்பி சில மாற்றங்களையும் சூழல் காரணமாக சில மாற்றங்களையும் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2024 தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை முக்கிய பங்காற்றும் என்பதை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பும் அறிவர்.

தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டார், நடிகராக மாமன்னனே இறுதிப்படம் என்பதையும் தெளிவுப்படுத்தி விட்டார்.  2024 பாராளுமன்ற தேர்தல் உதயநிதிக்கு மிகவும் முக்கியமான தேர்தல். வேட்பாளர் தேர்வு முதல் பரப்புரை வரை உதய்க்கு பெரும் பங்கு அந்த தேர்தலில் காத்திருக்கிறது. தனது தாத்தா பெயரிலான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தன்னையும், கழகத்தையும் தயார் படுத்துகிறார் உதயநிதி. இனி மாமன்னன் என்பது ஒரு திரைப்படத்தின் பெயரல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment