நகர ஏழைகளின் பார்வையில்…

தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாகி நான்கு ஆண்டு ஆனபிறகும் இன்னும் பல குடிசைப்பகுதிகளில் கழிவறைகளே இல்லை.

அஷுடோஷ் வர்ஷ்னே

கட்டுரையாசிரியர், ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறையின் சோல் கோல்டுமேன் பேராசிரியர். அங்கேயுள்ள வாட்சன் கல்வி நிறுவனத்தின் இந்திய புலத்தை வழிநடத்துகிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கான்டிரிபியூட்டிங் எடிட்டர்.

இதுநாள் வரை, இந்தப் பகுதியில் அரசியலையும் அரசியல் பொருளாதாரத்தையும் அலசி வந்தேன். எனக்கு நானே விதித்துக்கொண்ட வரையறையை விட்டு விலகிய பிறகு, இரண்டு மாற்று விஷயங்களை தொட்டுப் பார்த்தேன். குறிப்பிட்ட துறையில் என்னைவிட நன்கு விஷயம் தெரிந்த முக்கியமான நிபுணர்களோடு உரையாடல் என்பது ஒன்று, பயணக் குறிப்புகள் எழுதுவது என்பது மற்றொன்று.

என்னுடைய சீனப் பயணங்களையே அதிகம் எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இருந்து என் இந்திய பயண அனுபவத்தை ஆரம்பிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கட்டுரைகள் நிறைய வரும். ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்தை பின் தொடரப் போகிறேன். குறிப்பாக நான் வளர்ந்த உத்திரப் பிரதேச மாநிலத்தின் நகரங்களான ஷாஜாஹான்பூர், ஃபைசாபாத், ரே பரேலி, ஹமிர்பூர், ஆக்ரா, அலிகர், அலகாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பிரசாரத்தைத் தொடர்ந்து கவனித்து எழுதப் போகிறேன். தில்லிக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் நான் இடம்பெயர்வதற்கு முன்னால், நான் வாழ்ந்த பகுதிகள் இவை. ஒவ்வோராண்டும் மூன்று மாதங்கள் இந்தியா வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

நான் நகர நிர்வாகம் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். குறிப்பாக, குடிநீர், கழிவுநீர், மின்சாரம், சாலைகள், கல்வி, சுகாதாரம், காவல்துறை ஆகிய நகர பொதுச் சேவைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். இதற்காக கடந்த 12 மாதங்களில், சென்னை, கொச்சி, அகமதாபாத், வதோதரா, பாவ்நகர், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்தேன். அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் வடக்கு மற்று கிழக்குப் பகுதிகளை நோக்கி நகரும். நகர நிர்வாகம் குறித்து விரிவான தரவுகள் சார்ந்த ஆய்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு நகரத்திலும் ஒருசில நாட்கள், அதன் பண்புகளை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற மேட்டுக்குடியினரிடமும் குடிசைப்பகுதி மக்களை உள்ளடக்கிய பொதுமக்களிடமும் பேசுவோம். தெற்கு மற்றும் மேற்குப் பகுதி நகரங்களைச் சேர்ந்த 21 குடிசைப்பகுதிகளில் இதுவரை இப்படி பேசியிருக்கிறோம்.

Prime Minister Narendra Modi, urban governance, நகர நிர்வாகம், பிரதமர் மோடி, குடிசைவாசிகள்

மோடி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள பல்வேறு முக்கிய திட்டங்களைப் பற்றி தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகளைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு, அவை எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அபிப்பிராயங்களை பதிவு செய்வது சரியாக இருக்கும். 2014 தேர்தலின் போது, நகரவாழ் ஏழைகள் மத்தியில் மோடி மிகவும் பிரபலமானவராக இருந்தார் என்று தேர்தல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சென்னையிலும் கொச்சியிலும் இந்தப் பார்வை எடுபடாது, ஏனெனில், அங்கே பா.ஜ.க. சிறிய கட்சி மட்டுமே. ஆனால், மேற்கு மற்றும் வடக்குப் பகுதி நகரங்களிலும், ஏன், ஹைதராபாத், பெங்களூரு நகரங்களும் இந்தப் பார்வை பொருந்தும். ஆனால், இனி இந்த நிலைமை இல்லை. மோடி ஆதரவாளர்களைவிட மோடி விமர்சகர்கள் அதிகமாகிவிட்டனர். குடிசைப்பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பற்றி மட்டும் நான் பேசவில்லை, மாறாக, தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றியும் பேசுகிறேன். அவநம்பிக்கையும் ஏமாற்றப்பட்ட உணர்வும் பரவலாக இருக்கிறது.

ஏன் இப்படி?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தாங்கமுடியாத சிரமத்தைக் கொடுத்தது என்பதே முதன்மையான காரணம். ஏழை குடும்பங்களில் பணமே இல்லை, வங்கி வாசலில் நீண்ட வரிசை, அப்படி நின்றபிறகும், வங்கிகளில் கொடுப்பதற்குப் புதிய நோட்டுக்கள் போதுமான அளவு இல்லை. சிறுவர்கள் உணவில்லாமல் வாடி வதங்க, முதியோருக்கோ, மருத்துவம் செய்துகொள்ள வசதியில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. எப்படி இவ்வளவு பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது என்பது மர்மமாகவே இருக்கிறது. அதேசமயம், டிசம்பர் 2017இல் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகளில் இருகட்சிகள் இடையே வாக்குவித்தியாசம் நெருக்கமாகவே இருந்தது என்பதையும், 2018 டிசம்பரில் நடைபெற்ற தேர்தல்களில், பா.ஜ.க. வலிமையாக இருந்த மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் அவை தோற்கடிக்கப்பட்டன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடைசி மூன்று மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க.வின் கிராமப்புற வாக்குகள் மட்டுமல்ல, நகரப்புற வாக்குகளும் சரிந்துள்ளன என்பதையே தரவுகள் தெரிவிக்கின்றன. நகர மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் மோடி இன்னும் தேவைப்படலாம், ஆனால், மோடியின் சரிவுக்கு மிக முக்கியமாக பங்கு வகித்தவர்கள் நகரவாழ் ஏழைகள் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சொல்லொண்ணா துன்பத்தையும் துயரத்தையும் தந்துவிட்டது.

நாங்கள் சென்ற குடிசைப்பகுதிகளில், தூய்மை இந்தியா திட்டம் ஒன்றும் சிறப்பாக செயற்படுத்தப்படவில்லை. சுயேச்சையான ஆய்வுகள் தெரிவிப்பது போன்று, இந்திய கிராமப் புறங்களில் வேண்டுமானால், இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம். இந்திய பெருநகரங்களில், இத்திட்டம் மாறுபட்ட பலன்களையே கொடுத்துள்ளன. குப்பைகளை அகற்றுவதில் தூய்மை இந்தியா திட்டம் என்ன செய்திருந்தாலும், அதன் கழிவறைத் திட்டம், மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்ளை ஒட்டியுள்ள குடிசைப்பகுதிகளில் பெரும் மாறுதல் எதையும் கொண்டுவரவில்லை. நீங்கள் ஒரு அறை கொண்ட குடியிருப்புகளில் வாழ்ந்தால், அங்கே குடும்ப கழிவறை கட்ட முடியாது. அங்கே தனி கழிவறைகளுக்குப் பதில் சமூகக் கழிவறையையே எழுப்ப முடியும். ஆனால், இத்தகைய சமூகக் கழிவறைகளைக் கட்ட, தூய்மை இந்தியா திட்டம் பணம் கொடுப்பதில்லை என்றே நாங்கள் அறிகிறோம். அல்லது இதனைப் பற்றி எங்களுடைய குடிசைப்பகுதி வாழ் சமூகங்களுக்கு போதிய விவரம் தெரியவில்லை. புதிதுபுதிதாக சமூகக் கழிவறைகள் கட்டப்பட்டால், அதற்குப் போதுமான தண்ணீர் கிடைக்குமா? அவற்றை தொடர்ச்சியாக எப்படி சுத்தம் செய்து வைப்பது? தாராவி அல்லது காட்கோபர் போன்ற மிகப்பெரும் குடிசைப் பகுதிகளில் இதெல்லாம்தான் அடிப்படைச் சவால்கள். தூய்மை இந்தியா நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஒருசில கழிவறைகளை நாங்கள் பார்த்தோம். திறந்தவெளியில் மலங்கழிக்கும் பழக்கம் நகரங்களில் படிப்படியாக குறைந்துவருவது உண்மைதான். ஆனால், அது தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாவதற்கு வெகுமுன்னரே ஆரம்பமாகிவிட்டது. இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால், தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாகி நான்கு ஆண்டு ஆனபிறகும் இன்னும் பல குடிசைப்பகுதிகளில் கழிவறைகளே இல்லை.

  • கடந்த 12 மாதங்களில், சென்னை, கொச்சி, அகமதாபாத், வதோதரா, பாவ்நகர், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்தேன். 
  • மோடி ஆதரவாளர்களைவிட மோடி விமர்சகர்கள் அதிகமாகிவிட்டனர். குடிசைப்பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பற்றி மட்டும் நான் பேசவில்லை,
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை தாங்கமுடியாத சிரமத்தைக் கொடுத்தது என்பதே முதன்மையான காரணம். ஏழை குடும்பங்களில் பணமே இல்லை,
  • ஒவ்வொருவருக்கும் தருவதாக அறிவித்த ரூ. 15 லட்சம் வருவது ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாகவே அரசாங்கம் தரவேண்டிய எந்தத் தொகையுமே வந்துசேரவில்லை.
  • கொச்சியின் கடற்கரைகளில் இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேரவில்லை என்றால், நிச்சயம் அதனை இந்தியாவின் மிக அற்புதமான நகரம் என்று சொல்லிவிடலாம்.

மோடி அரசாங்கத்தின் மற்றொரு முக்கியத் திட்டமான ஜன்தன் யோஜனாவினால் பெரிதாகப் பலன் இல்லை. அனைத்துத் தரப்பினரையும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கும் புரட்சிகரமான திட்டமாக இது கொண்டாடப்பட்டது. குறைந்தபட்ச இருப்புகூட இல்லாமல், ஏழைகளுக்கு ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு வாய்ப்பளித்த இத்திட்டம், கொள்கை அளவில் நம்பிக்கையளித்தது. அரசாங்கத்தின் மானியத் தொகையைப் பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தால், அது இத்தகைய கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பதன் மூலம், ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் என்பது கருத்தளவில் சரி. ஆனால், அரசாங்கத்தையோ, வங்கிகளையோ குடிசைவாசிகளில் பாதிபேர் நம்பாததால், அவர்கள் இத்தகைய கணக்கைத் தொடங்கவே இல்லை. கணக்கைத் தொடங்கியவர்களில், ஒருசிலருக்கு மானியத் தொகைகள் கிடைத்தன, ஆனால் பெரும்பாலான நேரங்களில், அதன் பெயருக்கு ஏற்ப ‘ஜீரோ பேலன்ஸ்’ உடன் தான் இருந்தது. இந்தச் சொற்றொடர் அத்தனை குடிசைவாசிகளுக்கும் நன்கு அறிமுகம். ஆனால், இதில் வருத்தம் தரும் அம்சம் என்னவெனில், இத்தகைய கணக்கைத் தொடங்கிய நகர வாழ் குடிசைவாசிகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்தால், பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் தருவதாக அறிவித்த ரூ. 15 லட்சம் வருவது ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாகவே அரசாங்கம் தரவேண்டிய எந்தத் தொகையுமே வந்துசேரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருசிலர் ரூ.15 லட்சமும் தங்கள் வங்கிக் கணக்கு வந்துசேரும் நம்பினார்கள், ஆனால், “ரூ.2,000 – 3,000 கூட வந்துசேரவில்லை” என்று தெரிவித்தார்கள். ஆய்வுநோக்கில் பார்த்தால், இந்தக் கருத்தைத் தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், போதிய தகவல் இல்லாமல், மோடி அரசாங்கம் பொய் உறுதிமொழிகளைக் கொடுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.

கொஞ்சம் மகிழ்ச்சியான தகவலோடு இக்கட்டுரையை நிறைவு செய்வோம். மிகக் குறைந்த வருவாய் உடைய ஏழை எளியவர்கள் வாழும்போது, நகரங்களில் குடிசைப்பகுதிகள் இருந்தே தீரும் என்பது ஒரு பொதுக் கருத்து. இந்த எண்ணத்தைக் கேரளம் உடைத்துவிட்டது. கொச்சியில் இருந்தால், அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் ஒரு சதவிகிதத்துக்கு மேல், குடிசைவாசிகள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (மும்பையில் குடிசைவாசிகள், மொத்த மக்கள்தொகையில் பாதிபேர், ஹைதராபாத்தில் மூன்றில் ஒரு பகுதியினர்). ஆனால், அந்தப் பகுதிகள் எல்லாம் குடிசைப்பகுதிகள் போன்றே தெரியவில்லை. பொதுச்சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது இங்கே ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி இருக்கிறது. பொதுவாக, தண்ணீர், மின்சாரம், கழிவுவசதிகள், சாலைகள் போன்ற பொதுச் சேவைகளில் எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும், அனைத்து மக்களுக்கும், தங்களுடைய கார்ப்பரேஷன் கவுன்சிலரின் அலைபேசி எண் தெரியும். உடனே அவர்களிடம் சொல்லி, தீர்வு கண்டுவிடுவார்கள். கொச்சியின் கடற்கரைகளில் இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேரவில்லை என்றால், நிச்சயம் அதனை இந்தியாவின் மிக அற்புதமான நகரம் என்று சொல்லிவிடலாம். ஏழ்மை மற்றும் குப்பைக்கு எதிரான போரில் இந்நகரம் வெற்றி பெற்றுள்ளது. இது கேரளத்தின் சாதனை, நிச்சயம் பிரதமர் மோடியின் சாதனை அல்ல.

(கட்டுரையாசிரியர், ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறையின் சோல் கோல்டுமேன் பேராசிரியர். அங்கேயுள்ள வாட்சன் கல்வி நிறுவனத்தின் இந்திய புலத்தை வழிநடத்துகிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கான்டிரிபியூட்டிங் எடிட்டர்.)

தமிழில்: துளசி

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close