விஜய் சேதுபதி எதிர்ப்பாளர்களே… உங்களுக்கு சில கேள்விகள்

800 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் சில கேள்விகளுக்கு நேர்மையாக முகம் கொடுக்க வேண்டும்.

vijay sethupathi, 800 movie, Muttiah Muralitharan, Muttiah Muralitharan bio pic, vijay sethupathi 800 movie controvery, விஜய் சேதுபதி, 800, முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வலியுறுத்தல், விஜய் சேதுபதி 800 படம் சர்ச்சை, some questions for opposer, tamil nationalist opposed 800 movie, tamil nadu, tamil cinema, sri lanka

இலங்கையில் ராஜபக்ச குடும்பம், தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் 20வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான தீவிர முனைப்பில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதி முகாம்கள் பலவும் மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி நிறுவனங்களில், எந்த முன்னுரிமையும் இடஒதுக்கீடும் இல்லாமல் பலரும் தங்கள் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா என பல நாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் பலர் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பெறுவதற்கான எந்த வாய்ப்புகளும் இன்றி அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான், டார் நிறுவனம் தயாரிப்பில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் ‘800’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கும் அறிவிப்பு வெளியாகி தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் சர்ச்சையாகி உள்ளது.

‘800’ படம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னால், அந்த படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தபோதே இது சர்ச்சையாகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய ஒரு மலையகத் தமிழர். பல தடைகளைத் தாண்டி கிரிக்கெட்டில் சாதித்தவர். கிரிக்கெட் விளையாட்டில் அவருடைய சாதனைக்காக கொண்டாடபடும் முத்தையா முரளிதரன் அவருடைய அரசியல் கருத்துகளுக்காக இலங்கை தமிழர்களாலும் தமிழகத்திலும் விமர்சிக்கப்பட்டும் வந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

சமீப காலமாக, சினிமா உலகில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் போக்கு வளர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர், தோனியின் வாழ்க்கை, திரைப்படமாக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கைகள் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்த 800 திரைப்படத் தயாரிப்புக்கும் அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க கூடாது என்று வலியுறுத்தியும் எதிர்ப்பு எழுந்துள்ளதற்கு காரணம், முத்தையா முரளிதரன், விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் இலங்கை அரசு ஆதரவாளர் என்பதுதான்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இந்த நாள் இனிய நாள் என அறிக்கை விட்டார் என்றும் போரில் காணாமல் போனவர்கள் குறித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் நடிக்கிறார்கள் எனக் கூறினார் என்றும் அவருடைய தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடும் இலங்கை அரசு அதரவு நிலைப்பாடும் இப்போது 800 படத்தின் எதிர்ப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் எப்போதுமே ஈழத் தமிழர் ஆதரவு அரசியல் என்பது கனைத்துக்கொண்டிருக்கும் நெருப்பு, அரசியலில், சமூகத்தில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக, பாதகமாக லேசான சலனம் ஏற்பட்டாலும் அந்த நெருப்பு வெடித்து எரியத் தொடங்கிவிடும். மொத்த சூழலும் போராட்டச் சூழலாக மாறும். தமிழகத்தில் இந்த உணர்வு 3 தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 – 3 ஆண்டுகளில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் செல்வாக்கு என்பது தமிழகத்தில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு நடிகர்ளுக்கு இணையாக வளர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அவ்வப்போது, சமூகம் குறித்தும், அரசியல் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் அவருக்கு ஒரு முற்போக்கான அரசியல் சிந்தனை கொண்ட நடிகர் என்ற அடையாளத்தைக் கொடுத்துள்ளது. அவருடைய இயல்பான தோற்றமும், நடிப்பும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது. ஒரு வகையில் அவருக்கு மக்கள் செல்வன் என்ற சினிமா அடைமொழிகூட பொருத்தமானதுதான்.

நடிகர் விஜய் சேதுபதியின் புகழ், அவரது சமூக பிம்பம் 800 திரைப்படத்தின் மூலம் விமர்சனங்களையும் தாக்குதல்களையும் சந்தித்திருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, சேரன், கவிஞர் தாமரை, இயக்குனர் மு.களஞ்சியம் என திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள், ஆதரவாளர்கள் என ஒட்டுமொத்தமாக, முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்றும் அவர் அந்த படத்தில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று வரை கொண்டாடப்பட்ட ஒரு கலைஞன், இன்று ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததற்காக விமர்சனத்துக்குள்ளாவதை எப்படி புரிந்துகொள்வது? இலங்கையில் இறுதிப் போர் நடந்துகொண்டிருந்தபோது, இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்த திமுக தலைவரும் அன்றைய முதல்வருமான கருணாநிதி இலங்கை அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்த இந்திய அரசுக்கு போதிய தீவிர அழுத்தம் கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக கருணாநிதியிடம் எதிர்பார்த்தது காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறி பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதுதான். இந்த காரணங்களால், அது வரை உலகத் தமிழர்களின் தலைவராக கருதப்பட்ட கருணாநிதி மீது துரோகி என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. இந்த விமர்சனம்தான் கருணாநிதியால் கடைசி காலங்களில் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. இன்று வரை சமூக ஊடகங்களில் அந்த விமர்சனம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் சேதுபதி மட்டும் இதில் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

இலங்கை தமிழர்கள், இறுதிப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்ற முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சினிமாவாகக எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில், 800 சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று வலியுறுத்துகின்றனர். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கான பல போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்வதாக கூறப்பட்டபோது, இதே போன்ற எதிர்ப்பு எழுந்தது. இது தமிழகத்தில் தசாப்தங்களாக தொடரும் தமிழ்த்தேசிய அரசியல் உணர்வாக மாறியுள்ளது. இந்த உணர்வுகள் பற்றியும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், நியாயமில்லை என்று கூற முடியாது. இந்த அரசியல் உணர்வுகளை மீறி நடந்துகொண்டால் ஏற்படும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு பலரும் அவர்களின் முடிவுகளைக் கைவிட்டுள்ளார்கள். இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகாவிட்டால் அவருடைய வீடு முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் இதில் இருந்து விலகலாம்.

அதே நேரத்தில், இத்தகைய எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் முன்பு சில கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வெளியாகிற சினிமாக்கள் எல்லாமே அரசியல் ஓர்மையோடும் அரசியல் சரித்தன்மையோடும்தான் வெளியாகிறதா? அத்தகைய அரசியல் புரிதலோடுதான் இயக்குனர்கள் சினிமா இயக்குகிறார்களா? எல்லா நடிகர்களும் அத்தகைய அரசியல் புரிதலோடுதான் சினிமாக்களில் நடிக்கிறார்களா?

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை தமிழர்கள் முகாம்களில் இன்னும் அகதிகள் என்ற அடையாளத்தோடே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பலரும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இந்தியாவில் குடியுரிமையை எதிர்பார்க்கின்றனர். இங்கே அவர்களுக்கு குடியுரிமை வாங்கித் தருவதற்காக, அவர்களின் உரிமைகளுக்காக ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அழுத்தம் கொடுத்திருக்கிறார்களா?

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில், தெற்குதிட்டையில் ஒரு பட்டியல் சாதி ஊராட்சி மன்ற தலைவி ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். இதற்கு, இவர்களின் எதிர்ப்புக் குரல் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது? இப்படியான சாதிய பாகுபாடு கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர், தேனி கீழ் வடகரை ஊராட்சி மன்ற தலைவர், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் என்று தமிழகத்தின் பல கிராமங்களுக்கு நீண்டுகொண்டிருக்கிறது. இந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக 800 படத்துக்கு தீவிர எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் இயக்கங்களின் நடவடிக்கை என்ன?

கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. இத்தகைய சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க இவர்கள் என்ன போராட்டம் நடத்தினார்கள்? இப்படியான பல கேள்விகளுக்கு 800 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் நேர்மையாக முகம் கொடுக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay sethupathi 800 movie muttiah muralitharan bio pic controversy some questions for opposer

Next Story
தீதும் நன்றும் பிறர் தர வாரா!Tamil News Today Live, Rajinikanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com