scorecardresearch

விஷால் போட்டி : ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் வியூகம்?

நடிகர் விஷால் திடுதிப்பென ஆர்.கே.நகரில் களம் இறங்கியிருப்பது, ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் வகுத்த வியூகம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

விஷால் போட்டி : ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் வியூகம்?

நடிகர் விஷால் திடுதிப்பென ஆர்.கே.நகரில் களம் இறங்கியிருப்பது, ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் வகுத்த வியூகம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

விஷால், கடந்த சில ஆண்டுகளாக அரசியலை மையப்படுத்தியே தனது நடவடிக்கைகளை அமைத்தார். அவ்வப்போது நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை என வழங்கியதையே அவரது அரசியலுக்கு அச்சாரமாக பலரும் குறிப்பிட்டார்கள்.

விஷால் மீது, ‘அவர் தமிழர் அல்ல’ என்கிற விமர்சனம் ஒரு தரப்பினரால் கூர் தீட்டப்பட்டது. அதற்கு விடை சொல்லும் விதமாக அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டிய ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் ஒவ்வொரு கட்டத்திலும் பதுங்கவே செய்தனர்.

விஷால், அந்தத் தப்பை செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர் சங்கத்தை கால் நூற்றாண்டு காலமாக கையில் வைத்திருந்த ராதாரவியை எதிர்த்து அவர் போட்டியிட்டபோது, ‘சினிமா நடிகர்களிடம் வேண்டுமானால் விஷாலுக்கு ஓட்டு கிடைக்கலாம். நாடக நடிகர்களை ராதாரவியிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது’ என பலரும் கூறினர்.

விஷால் அந்த சவாலை உடைத்து, நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ஆனார். அதேபோல தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் எதிர்த்தது, பெரிய நடிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த தாணுவை! அப்போதும், ‘இங்கே 3-வது அல்லது 4-வது இடத்தையே அவர் பிடிப்பார்’ என பலர் கணித்தனர். அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார்.

விஷால் தனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக்கொள்ள இந்த இரு தேர்தல்களும் உதவின. ‘சினிமா சங்கத் தேர்தல்களைப் போன்றது அல்ல அரசியல்’ என இப்போதும் சாதாரணமாக கூறி விஷாலை கடந்துவிட முடியாது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் போலத்தான் பார்ட்டியும், படை திரட்டலுமாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்கள் நடந்தன. எனவே ஆர்.கே.நகரில் விஷாலின் தாக்கத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

விஷால் வாங்கும் வாக்குகள், திமுக.வை பாதிக்குமா? அதிமுக.வை பாதிக்குமா? என்பது அரசியல் வட்டாரத்தில் பலமாக விவாதிக்கப்படும் கேள்வி! ஆளும்கட்சி வட்டாரமோ இதை, ‘ஜெயலலிதா பாணி வியூகம்’ என வர்ணிக்கிறது. அதாவது, 2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியையும் கூட்டணியில் சேர்க்காமல் வலுக்கட்டாயமாக அத்தனைக் கட்சிகளையும் வெளியே தள்ளினார் ஜெயலலிதா!

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயாரான சில கட்சிகளை மட்டும் அதிமுக.வுடன் இணைத்தார். இதனால் அதிமுக அணியில் இல்லாத அத்தனைக் கட்சிகளையும் தி.மு.க.வால் தனது கூட்டணியில் இணைக்க முடியவில்லை. ‘ஆட்சியில் பங்கு’ என்கிற கோஷத்துடன் திருமாவளவன் மாநாடு போட்டார். ‘திமுக.வும் வேண்டாம். அதிமுக.வும் வேண்டாம்’ என இடதுசாரிகள் பிரகடனம் செய்தார்கள். கூடவே வைகோவும் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை பிரசவித்தார்கள். ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய திமுக.வை முடக்கியது இந்த மக்கள் நலக் கூட்டணிதான்.

இப்போதும் அதேபோல ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை விஷால் பங்கு பிரிப்பார் என்பதே ஆளும் தரப்பு வியூகம் என்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காய் நகர்த்தல் அடிப்படையில் உளவுத் துறையினர் இதில் முக்கிய பங்காற்றியதாக பேச்சு இருக்கிறது.

நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆகியவற்றில் நடிகர் கமல்ஹாசன், விஷாலுக்கு ஆதரவு கொடுத்தார். சமீப காலமாக வெளிப்படையாக ஆளும்கட்சியினரை விமர்சிக்கும் கமல்ஹாசன், ஆர்.கே.நகரில் ஏதாவது ஒரு நிலைப்பாடை எடுத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது.

கமல்ஹாசனால் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா, நாம் தமிழர், டிடிவி தினகரன் என களத்தில் நிற்கும் வேறு யாரையும் ஆதரிக்க முடியாது. எனவே அவரும் விரும்பி விஷாலை முன்னிறுத்துவதாக பேச்சு இருக்கிறது. விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து, அவருக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுக்கும் திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். காரணம், அப்போதுதான் விஷால் தோற்றாலும்கூட அது கமல்ஹாசனின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது என்பதற்காக இந்த பிளான்!

இங்கே லாஜிக்காக ஒரு கேள்வியை எழுப்பலாம். ஆளும்கட்சியை விமர்சிக்கும் கமல்ஹாசன், மறைமுகமாக அதிமுக வெற்றிக்கு உதவுவாரா? என கேட்கலாம். தமிழக அரசியலில் காலூன்ற விரும்பும் ஒவ்வொருவரும் அதிமுக.வை தாக்குவது போலவே தோன்றும். ஆனால் அவர்களின் குறி திமுக.வாகவே இருக்கும். காரணம், நீண்டகால நோக்கில் இங்கு திமுக.வை எதிர்த்தே அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் திமுக தரப்பிலோ, ‘அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் பிரதான வாக்கு வங்கி தெலுங்கு பேசும் மொழி சிறுபான்மையினர்! அந்த வாக்குகளை விஷால் கணிசமாக பிரிப்பார். எனவே விஷால் போட்டியிடுவது, திமுக.வுக்கு சாதகத்தை உருவாக்கும்’ என்கிறார்கள். ‘விஷாலும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்கள். அவருடன் கருத்து பரிமாற்றங்கள் இல்லாமல் விஷால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்’ என்கிறார்கள் அவர்கள்.

ஒரு மெகா பட்ஜெட் சினிமா போலவே விஷாலின் ஆர்.கே.நகர் விசிட்டும் பிரமாண்டமாகத்தான் இருக்கப் போகிறது. ரிசல்ட்டுக்கு காத்திருப்போம்.

 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Vishal contest in rk nagar eps operates jeyalalitha strategy

Best of Express