வைர விழாவின் தாக்கம் என்ன?

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, தமிழக அரசு பற்றி ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது ஆகியவை இந்த விழாவின் முக்கியமான விளைவுகளாகத் தோன்றுகின்றன.

ஜெய முத்துராமன்

திமுக தலைவர் மு. கருணாநிதியின் 94ஆம் பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளை நிறைவுசெய்ததற்கான வைர விழா இரண்டும் சேர்ந்து திமுகவினரால் நடத்தப்பட்ட விழா பல விதங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் முதுபெரும் தலைவரும் இந்தியாவிலேயே இன்றுள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான கருணாநிதிக்கான சிறப்பான கவுரவமாக அது அமைந்தது. அதோடு, அரசியல் ரீதியாகப் புதிய வேகம் பிறக்கும் என்பதற்கான கட்டியம் கூறும் விழாவாகவும் அமைந்தது.


ராகுல் காந்தியின் குரல்

விழாவுக்கு வந்திருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதிக்குப் புகழ் மாலை சூட்டியதோடு நிற்கவில்லை. தமிழக அரசியல் பற்றியும் கருத்துத் தெரிவித்தார். தமிழக அரசை மத்திய ஆளும் கட்சியான பாஜகதான் பின்னாலிருந்து இயக்குகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலைத் தமிழக காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசு பற்றி காங்கிரஸின் உயர் மட்டத் தலைவரிடமிருந்து வந்துள்ள இந்தக் கூற்றை அவ்வளவு எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது. ராகுல் காந்தி, பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு பொம்மை அரசு என்று பொருள்படும்படியும் விமர்சித்திருக்கிறார். பாஜக, தமிழக அரசு இரண்டுமே இதற்கான பதிலைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளன.


தமிழக காங்கிரஸுக்கு அவர் விடுத்துள்ள செய்தியும் முக்கியமானது. தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான, நிச்சயமற்ற நிலையை எதிர்க்கட்சிகள் எதுவும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரியவில்லை. திமுக, பாமக போன்ற சில கட்சிகள் சில போராட்டங்களை முன்னெடுக்கின்றன. ஆனால், விவசாயிகள் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சென்னை சில்க்ஸ் பிரச்சினை, மாநில அரசு செயல்படாமை எனப் பல பிரச்சினைகளை வைத்து இந்த அரசை நெருக்கடிக்குள் தள்ள முடியும். எதிர்க்கட்சிகள் இதை வலுவாகச் செய்வதில்லை. இந்நிலையில் காங்கிரஸ் அதை முன்னெடுத்தால் இதர கட்சிகளும் விழித்துக்கொள்ளலாம்.

பாஜகவுக்கு எதிரான அணி?

மு. கருணாநிதிக்கான இந்த விழாவில் நாட்டின் பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ஒருவரும் கலந்துகொள்ளவில்லை. காரனம், அவர்கள் அழைக்கப்படவில்லை. மூத்த தலைவர்களைக் கவுரவிப்பதற்கான இத்தகைய விழாக்களில் பிரதமரை அழைப்பது வழக்கம். வாஜ்பேயி பிரதமராக இருந்திருந்தால் அவர் கட்டாயம் அழைக்கப்பட்டிருப்பார், கலந்து கொண்டிருப்பார் என்று சொல்லலாம். குறைந்தபட்சம் தமிழக பாஜகவுக்கேனும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரது எதிர்பார்ப்பு. பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதை வெளிப்படையாகவே சொன்னார். ஆனால், திராவிட இயக்கத்தை ஒழிப்பதையே தன் லட்சியமாகப் பிரகடனம் செய்திருக்கும் பாஜகவை அழைத்து அக்கட்சியைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை என திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டார்.

இதன் விளைவாக, பாஜகவினர் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழா மேடை, பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் சங்கமமாகவே காட்சியளித்தது. இதுவும் வரவிருக்கும் அரசியல் சூழலுக்கான அடையாளமாகவே கருதப்படுகிறது.

Karunanidhi - D.Raja
தமிழகத் தலைவர்களுக்கான இடம்?

இத்தகைய விழாவில் தேசியத் தலைவர்களை அழைத்தது பொருத்தமானதுதான் என்றாலும் தமிழகத் தலைவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதைப் பகிரங்கமாகச் சொன்னார். விழாவில் தமிழகட் தலைவர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் தன் ஆதங்கத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். திமுக தலைமை இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கருணாநிதியைப் போன்ற ஒரு தலைவரின் சட்டமன்றப் பணிகளுக்கான வைர விழாவில் எல்லாத் தலைவர்களுக்கும் உரிய இடம் அளிப்பது சாத்தியமல்ல. ஆனால், இரண்டு மூன்று கட்டங்களாக இந்த விழாவை திமுக திட்டமிட்டிருந்தால் அனைவருக்கும் உரிய இடம் கிடைத்திருக்கும்.

இப்படிச் சில உறுத்தல்கள் இருந்தாலும், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, தமிழக அரசு பற்றி ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது ஆகியவை இந்த விழாவின் முக்கியமான விளைவுகளாகத் தோன்றுகின்றன. இவற்றைத் தமிழக அரசியல்வாதிகள் எப்படி முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தமிழக அரசியலின் பயணம் அமையும்.

×Close
×Close