ஸ்ரீவித்யா
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மீண்டும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டுவதற்காக, 20 மாதங்களுக்கு மேலாக, லாலுவின் ஆர்.ஜே.டி., மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் அமைத்திருந்த கூட்டணியை, நிதிஷ் உடைத்து, வெளியேறியுள்ளார்.
தற்போது, பா.ஜ., ஆதரவுடன், மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகியுள்ளார். இந்தப் புதிய கூட்டணி அரசு யாருக்கு லாபம்? நிதிஷ்குமாருக்கா? பா.ஜ.,வுக்கா?
ஒரு சின்ன பிளாஸ்பேக்!
பா.ஜ., ஒரு தேசியக் கட்சியாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் அது பரவியிருக்கவில்லை. 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, அந்தக் கட்சி, பிரதமர் வேட்பாளராக அறிவி்த்தது.
அதுவரை பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. மோடி ஒரு மதவாதி. அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று குற்றம்சாட்டினார், நிதிஷ்.
2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், மோடி அலை கடுமையாக வீசி, சுழற்றி அடித்தது. அந்த சுழலில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சியாகவும், மிகப் பெரிய பெரும்பான்மை பலத்தையும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றது.
2015ல் பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, மெகா கூட்டணியை அமைத்து நிதிஷ்குமார் முதலாவரானார்.
நிதிஷின் திடீர் மனமாற்றம்!
கடந்த, 20 மாதங்களாக இருந்த கூட்டணி அரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வுக்கு தாவியுள்ளார் நிதிஷ்குமார். ஏன் இந்த திடீர் மாற்றம்? இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்கிறார், நிதிஷ்குமார். அதை மோடியும் வரவேற்றுள்ளார்.
இதற்கு பின்னால் மிகப் பெரிய அரசியல் சதுரங்க விளையாட்டு உள்ளது.
தற்போது பீகாரில் ஆட்சி அமைத்ததன் மூலம், நாட்டில் உள்ள, 31 சட்டசபைகளில், 16 சட்டசபைகளில் பா.ஜ., தனியாகவோ, பிற கட்சிகளின் கூட்டணியுடன் சேர்ந்தோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இது பா.ஜ.,வின் விரிவாக்கத்துக்கு உதவலாம்.
தற்போதைய நிலையில், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் மிகப் பெரிய இலக்காக உள்ளது. இதற்கு, பீகாரில் நிதிஷ்குமார் உதவலாம் என்பது பா.ஜ.,வின் கணக்காக இருக்கலாம்.
சமீபத்தில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்கவும் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பை பா.ஜ., சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது எனலாம். எதிர்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷை முன்னிறுத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டு இருந்தது. அந்த வியூகத்தை பாஜக உடைத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
நிதிஷ்குமாருக்கு என்ன லாபம்?
அரசியல் என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் தொழிலாக மாறியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலத்தில் இருந்தே, சமதா கட்சியில் இருந்த நிதிஷ்குமார், பா.ஜ.,வுடன் நெருக்கமாகவே இருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அபிமானத்தை பெற்றவராகவும் இருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, மோடியை மதவாதி என்று நிதிஷ் கூறினார். தற்போது மோடி மாறிவிட்டாரா? அல்லது முன்பு நிதிஷ் கூறியது தவறா?
குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தபோது, நிதிஷ்குமார் தான், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார் என்பதை, சுலபமாக மறந்து விட முடியாது.
தே.ஜ., கூட்டணியில் இருந்தபோது, பீகாரில் நிதிஷ்குமார் தான், நம்பர் 1 ஆக இருந்தார். ஆனால், மெகா கூட்டணியில், அவர் லாலு சொல்படி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், பீகாரில் தான் இழந்த நம்பர் 1 இடத்தை மீண்டும் பெறலாம் என்பதே நிதிஷ்குமாரின் கணக்கு. அதனால் தான், திடீர் ராஜினாமா நாடகத்தை நடத்தினார். ஆனால், இதற்கு பல மாதங்களாக, நிதிஷ்குமாரும், பா.ஜ.,வும் ஒத்திகை பார்த்து வந்தனர்.
மோடி, ஷாவுக்கு பின்னடைவு?!
பீகாரில் ஆட்சி அமைத்ததன் மூலம், நாட்டில், 70 சதவீத மக்கள்தொகை உள்ள மாநிலங்களில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது, மோடிக்கும், அமித் ஷாவுக்கும் பெருமையை தரக் கூடியதாக இருக்கலாம்.
நிதிஷ்குமாரின் வருகையால், அடுத்த லோக்சபா தேர்தலில், பீகாரில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும், நிதிஷின் கையே மேலோங்கியிருக்கும். கடந்த தேர்தலில், 40 தொகுதிகளில், 22 தொகுதிகளில், பா.ஜ., வென்றது. கூட்டணிக் கட்சிகள், 9 தொகுதிகளில் வென்றன. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அடுத்த லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட நிதிஷ் விரும்புவார். இதனால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் குறைந்துவிடும்.
2015 பீகார் சட்டசபை தேர்தலில், ஆட்சியை அமைக்க முடியாவிட்டாலும், அதிக ஓட்டு சதவீதம் பெற்ற கட்சியாக பா.ஜ., உள்ளது. அந்தக் கட்சிக்கு, 24.8 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. லாலு கட்சிக்கு, 18.5 சதவீதமும், நிதிஷ்குமாருக்கு, 16.7 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 6.7 சதவீதம் ஓட்டுகள் தான் கிடைத்தன.
2014 லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, 38.8 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதில் பா.ஜ.,வுக்கு மட்டும், 29.4 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2015 சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு 34 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. பீகாரில் மிகப் பெரிய கட்சிகளான, ஆர்.ஜே.டி., ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில், கட்சியை அங்கு வளர்ப்பதற்கு பா.ஜ.,வுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால், தற்போது, நிதிஷ்குமாருடன் சேருவதால், நிதிஷ்குமார் தான், அங்கு கூட்டணியில் நம்பர் 1 இடத்தில் இருப்பார். அதனால், வரும் தேர்தல்களில், மோடியையோ, அமித் ஷாவையோ முன்னிறுத்தி ஓட்டு கேட்க முடியாது. இது நிதிஷ்குமாருக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய லாபமாகும்.
எது எப்படியிருந்தாலும், அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது என்பதை மற்றொரு முறை நிரூபிக்கவும், இந்த புதிய கூட்டணி உதவியுள்ளது.