ப. சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்.
ஒரு வங்கிக்கு நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு போன்றவற்றால், நிதி கிடைக்கிறது. அதற்கு வட்டியும் வழங்குகிறது. அது நிதிச்செலவு எனப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் நிபந்தனைக்கு உட்பட்டு, சேமிப்பின் ஒரு குறிப்பிடத்தக்க அளவை இருப்பு என்று வங்கிகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். எஞ்சிய தொகையை மட்டுமே கடனாக வழங்கமுடியும். அதிலிருந்து வட்டியையும் பெறவேண்டும். அது வட்டி வருமானமாகும். இந்த தொகையையும், ஆபத்து கால சொத்து முதலீட்டு விகிதம் (சிஆர்ஏஆர்) அல்லது முதலீட்டு நிறைவு விகிதம் மறைத்துவைத்திருக்கும். வட்டி வருமானத்திற்கும், நிதிச்செலவிற்கும் இடையே உள்ள வேறுபாடே நிகர வட்டி வருமானம் (என்ஐஎம்) அல்லது வங்கியின் லாபமாகும். அதனால் என்ஐஎம் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். வங்கி எப்போதும் லாபத்தையே பெறவேண்டும்.
ஒரு கடன் கொடுக்கும் வங்கி, தன்னிடம் கடன் வாங்குபவரை நெருக்கமாக கவனிக்க வேண்டும். அவர் முறையாக வட்டி கட்டுகிறாரா? பிரதான கடனுக்கான தவணையை உரிய தேதிக்குள் செலுத்திவிட்டாரா? இருப்பு நிலை, லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவை முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதா? அவை கடன் வாங்கியவரின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறாதா? ஆகியவை குறித்து கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
பலகட்ட கண்காணிப்பு
வங்கிகள் மீது பலமடங்கு கண்காணிப்பு இருக்கும். முதலில் வங்கியின் நிதிக்குழு இருக்கும். அடுத்ததாக இயக்குனர்கள் குழு. மூன்றாவதாக அக தணிக்கையாளர். நான்காவதாக புற தணிக்கையாளர். ஜந்தாவதாக இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட பூர்வமான தணிக்கையாளர். ஆறாவதாக பங்குதாரர்களின் ஆண்டு பொது கூட்டம். ஏழாவதாக இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி துறை. கடைசியாக பருந்து கண்களைப்போல் கண்காணிக்கக்கூடிய ஆய்வாளர் என்று பல அடுக்கு கண்காணிப்பு இருக்கும். இதற்கும் மேலாக கண்ணுக்குத்தெரியாத சந்தை இருக்கும். அது வெகுமதி கொடுக்கும். வங்கி பட்டியிலப்பட்ட நிறுவனங்களின் கீழ் வந்தால், தண்டனை கொடுக்கும். நிதி அமைச்சகத்தின், நிதி சேவைகள் துறை, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட, ஒவ்வொரு வணிக வங்கியையும், கண்காணிக்க வேண்டும்.
இத்தனை கட்ட கண்காணிப்புகள் இருந்தாலும், சில கடன்கள் நேர்மையான வியாபார தோல்விகளால், செயல்பாடில்லாமல் இருக்கும். எந்த கடனை செயல்படாத சொத்துக்கள் என தீர்மானிக்கவேண்டும் என்பதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் மற்றும் வழிகாட்டல் உள்ளது. செயல்படாத சொத்து என்று அறிவிக்கப்பட்டவுடன், அந்த வங்கி ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். அதன் லாபங்கள் மீது கைவைக்க முடியாத வகையில், பங்கு ஆதாயத்தை அறிவிக்க முடியாத வகையில் அல்லது அதன் லாபத்தை வேறு எதிலும் முதலீடு செய்ய முடியாத வகையில் அதன் திறனை பாதிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும். மொத்த செயல்படாத சொத்துக்கள் அதிகரித்தால், எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டும். இந்த பலகட்ட கண்காணிப்புகளில் இருந்தும் எஸ் வங்கி தப்பியிது போல் தெரிகிறது. மேலும் எல்லா காலாண்டிலும் லாபத்தையே அறிவித்துள்ளது. அது தனது காலாண்டு இழப்பை 2019ம் ஆண்டு ஜனவரி – மார்ச் காலாண்டில்தான் முதன்முதலாக தெரிவித்தது. அப்போதும் நிதி சேவைகள் துறை அல்லது வங்கி செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி துறையில் எந்த எச்சரிக்கை மணியும் ஒலிக்கவில்லை.
கடன் புத்தகத்தில் திடீர் ஏற்றங்கள்
2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் எஸ் வங்கியின் கடன் அதிகரித்துள்ளது. வங்கியின் இருப்பு நிலை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி நிலுவை கடன்கள்
மார்ச் 2014 – ரூ.55,633 கோடிகள்
மார்ச் 2015 – ரூ.75,550 கோடிகள்
மார்ச் 2016 – ரூ.98,210 கோடிகள்
மார்ச் 2017 –ரூ.1,32,263 கோடிகள்
மார்ச் 2018 –ரூ.2,03,534 கோடிகள்
மார்ச் 2019 –ரூ.2,41,499 கோடிகள்
2014 மார்ச்சிலிருந்து 2019 மார்ச் வரை ஏற்பட்டுள்ள தாவலை உற்றுநோக்குங்கள். கடன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின்னர், 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் ஏற்பட்டுள்ள உயர்வை நன்றாக கவனியுங்கள்.
சில பொருத்தமான கேள்விகள் எழுகிறது. 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் எந்த குழு அல்லது யார் கடன் வழங்க அங்கீகாரம் கொடுத்தது? இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசுக்கு எஸ் வங்கி கடன் கொடுக்கும் நிலையில் இல்லை என்பது தெரியவில்லையா? இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசில் இருந்து ஒருவர் கூட, ஆண்டு இறுதியிலான இருப்பு நிலையை படித்து பார்க்கவில்லையா? தலைமை நிர்வாக அதிகாரி மாற்றியவுடன், இந்திய ரிசர்வ் வங்கியால், 2019 ஜனவரியில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னரும் எந்த மாற்றமும் ஏன் செய்யப்படவில்லை? 2019 மே மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் எஸ் வங்கியின் இயக்குனர்கள் மன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பின்னரும் ஏன் ஒன்றும் மாறவில்லை? 2019ம் ஆண்டு ஜனவரி – மார்ச் காலாண்டில், தனது காலாண்டு இழப்பை எஸ் வங்கி அறிவித்தபோது ஏன் எச்சரிக்கை மணிகள் ஒலிக்கவில்லை.
யார் பொறுப்பு?
2020ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, இந்த கேள்விகள் கேட்கப்பட்டபோது, இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசு, இரண்டில் இருந்தும் யாரும், எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து, எஸ் வங்கியின் கதை மறைந்துவிட வேண்டும் என்று அரசு விரும்புவது போல் தெரிகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. சமூக வலைதளங்களுக்கு நன்றி. ஆனால், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்குதான் இந்த மோசமான கதைகளை எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பில்லை.
இந்திய ரிசர்வ் வங்கி, எஸ் வங்கி அல்லது வங்கி செயல்பாடு மற்றும் வளர்ச்சித்துறையில் யார் மூலம் இந்த தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் முன், சிபிஜயும், அமலாக்க இயக்குநகரகமும் இதில் குதித்து என்ன செய்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. நான் இப்போது பயப்படுகிறேன். விசாரணை முடியும் வரை யார் பொறுப்பு என்பதை கூறமுடியாது. கசியும் தகவல்களை வைத்து, மீடியாக்கள் சுவையான கதைகளை எழுதிக்கொள்வார்கள். பொறுப்பை யார் ஏற்பது என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு, எதிர்காலத்தின் கைகளில் விடப்படும். மக்களும், நாடாளுமன்றமும் கடன் வாங்கியவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று கோரவேண்டும். (பெரிய கடனாளிகளின் பெயர் முக்கியம்) அவர்களுக்கு கடன் வழங்கிய தனிநபரோ, குழுவோ அதற்கு தெளிவான விளக்கமளிக்குமாறு உத்தரவிடவேண்டும். கூடுதலாக அதில் நிதி சேவை துறை மற்றும் வங்கி செயல்பாடு மற்றும் வளர்ச்சி துறையின் நேரடி பொறுப்பில் கண்காணிக்க வேண்டியவர் உள்ளார்களா என்பதை கண்டுபிடித்து, அவர்களிடமும் விளக்கம் கேட்க வேண்டும். கவனக்குறைவாக செய்யப்பட்ட குறைகளை மட்டும் கண்டுபிடிக்கக்கூடாது. ஆனால், குற்றமென்று தெரிந்தே செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசு, மீட்பு திட்டத்தை செயல்படுத்த தயாராகிறது. அது ஒரு குளுறுபடியான திட்டம். மார்ச் 12ம் தேதி அறிவிக்கப்ட்ட திட்டத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி ரூ.7,250 கோடியை முதலீடு செய்யும், எஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்கும். பூஜ்யம் மதிப்புள்ள நிறுவனத்தின், பங்குகளின் விலை ரூ.10 கூட விற்கப்படாத நிலையில் அதை எஸ்பிஐ எவ்வாறு வாங்கும் என்பது தெரியவில்லை. பெரிய தொகையை அதில் முதலீடு செய்யும் முன் வேறு ஏதாவது சிறந்த வழிமுறைகள் உள்ளதா என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். எஸ் வங்கியின் கதை இன்னும் முடியவில்லை.
தமிழில் : R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.