Advertisment

பாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி

தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Party reformation in TN seems impossible

Party reformation in TN seems impossible

பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தருவாயில், பிப்ரவரி 2ம் தேதி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கே.எஸ்.அழகிரியை அக்கட்சியின் தமிழக தலைவராக நியமித்தது. 2017ம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவியில் அமர்ந்தார் கடலூர் மாவட்டத்தின் எம்.பியாக இருந்த அழகிரி. அழகிரி இதற்கு முன்னர் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1991ம் ஆண்டு பா.சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்றார். பிறகு 1996ம் ஆண்டு தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தேர்தல் நேரத்தில் கட்சி பணிகளுக்கு இடையே, நேரம் ஒதுக்கி நமக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ!

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதை எவ்வாறு உணர்கிறீர்கள்? திருநாவுக்கரசர் நீங்கள் நியமிக்கப்பட்ட உடன் என்ன சொன்னார்?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். ராஜாஜி, கக்கன், காமராஜர், மூப்பனார் போன்ற தலைவர்கள் வரிசையில் எனக்கும் இடம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தலைவராக நியமிக்கப்பட்ட உடன் அவர் வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் சிறந்த நண்பர்கள். நாங்கள் 1991 சட்டப்பேரவையில் ஒன்றாக பணியாற்றி உள்ளோம். தலைமை மாற்றம் எனது ஒரு இயல்பான விஷயம், இதில் வருத்தப்பட எதுவும் இல்லை.

2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அவர்களுடன் இணைய காரணம் என்ன?

மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வு இந்தியா முழுவதும் உள்ளது. மாநில கட்சிகளும், பொதுவுடைமை இயக்கங்களும் பிஜேபிக்கு எதிராக செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. நாடு இறையாண்மையை இழந்து கொண்டு இருக்கிறது, மக்கள் சாதி, மதத்தால் நசுக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த அராஜகத்தை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் இணைத்துள்ளோம்.

publive-image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு தனது முகநூலில் ஒரு திருக்குறளை பதிவு செய்தார். அதற்கு பொருளாய் உடன் இருப்பவர்களை மதிக்காமல் செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள் என கூறியுள்ளார். திமுக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தியில் வெளிப்பாடா இது? பாமக உங்கள் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா?

வன்னி அரசு ஏன் இப்படி பதிவு செய்தார் என்று அவர் தான் கூற வேண்டும். நாங்கள் கொள்கை அடிப்படையில் இணைத்துள்ளோம், தனிமனித அடிப்படையில் இல்லை. கூட்டணி தலைவர் ஸ்டாலின் தெளிவாக வழிநடத்துகிறார். பாமக எங்கள் அணியில் இணையுமா என்று எனக்கு தெரியாது. கூட்டணி தலைவர், கட்சி மேலிடம் அதை முடிவு செய்யும்.

கமல்ஹாசனுடன் உங்கள் நிலைப்பாடு என்ன? என் நீங்கள் அவரை கூட்டணிக்கு அழைத்தீர்கள், பிறகு என் அவரை விமர்சித்தீர்கள்?

நான் அவரை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. கமல்ஹாசன் ஒரு இடது சாரி ஆதரவாளர், சமய சார்பற்றவராகவும், சனாதன கொள்கைக்கு எதிரானவருமாக தன்னை காண்பித்துக்கொள்கிறார். டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு வெளியேவரும்போது ஒரு நிருபர் கமல்ஹாசன் பற்றி என்னிடம் கேட்டார், எனக்கு அவர் அளித்த அறிக்கை தெரியாது. நல்ல எண்ணத்தில், இயக்கத்தினுடைய வாக்குகள் சிதற கூடாது என்ற எண்ணத்தில் நான் அவரை வரவேற்றேன். அன்று மாலை அவர் திமுக பற்றி கூறியது எனக்கு தெரியவந்ததும் நான் அதிர்ச்சி ஆனேன். இத்தனை நாள் அவர் அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் வரும் நேரத்தில் தன நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இது போல் அவர் கூறியது தேவையற்றது. இது மதசார்பற்ற வாக்குகள் சிதறுவதற்கு காரணமாய் அமைந்துவிடும்.

தம்பிதுரை தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து கொண்டு வருகிறார். ஆனால், அதிமுக அமைச்சர்களோ தம்பிதுரையின் அவருடைய சொந்த கருத்து என்றும், கட்சியின் கருத்து அல்ல என்று பாஜக பற்றி மழுப்பலான பதில்களையே அளித்து வருகின்றார். பாஜக- அதிமுக கூட்டணி பற்றி உங்கள் கருத்து?

பாஜக-அதிமுக கூட்டணி என்பது காரியசாத்தியமற்ற கூட்டணி. இந்த கூட்டணிக்கு கொள்கை பலமோ, மக்கள் பலமோ கிடையாது. கூட்டணி பற்றி ஆரம்பிக்கும் முன்பே அவர்கள் கட்சியில் இத்தனை குழப்பங்கள், கடும் வாதங்கள். அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தொடர்ந்து பிஜேபியை விமர்சனம் செய்கிறார். நாங்கள் பிஜேபியை சுமக்கணுமா என்று கேட்கிறார், அவர் கேள்விகள் பொருள் போதித்தவை. ஆனால் இங்கே, மதசார்பற்ற கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் மிக லாவகமாக அமைத்துள்ளார். எந்த ஒரு சிறு சங்கடம் கூட இல்லாமல் கூட்டணி சுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது.

சமாஜ் வாதி கட்சி தலைவர் சேர்ந்த அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உடன் இணக்கமாக உள்ளார். நரேந்திர மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைக்கிறார். ஆனால், பாராளுமன்றத்தில் அவரது தந்தை முலாயம் சிங், மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள்?

அகிலேஷ் எங்களுடன் இணக்கமாக உள்ளார். முலாயம் சிங் அகிலேஷ் உடன் இணக்கமாக இல்லை. இது அதனுடைய விளைவு தான். அகிலேஷ் எங்களுக்கு ஆதரவு அளிப்பதால் முலாயம் மோடியை புகழ்கிறார். இது தந்தைக்கும்-மகனுக்கும் இடையே நடக்கும் அரசியல். அவர்கள் இருவரும் இடையே உள்ள முரண்பாட்டை அவர்கள் தான் சரிசெய்து கொள்ள வேண்டும்.

தமிழக சட்டசபையில் ராமசாமி அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து அதிமுக தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்று கேட்டார், அதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் தனித்து போட்டியிட தயார் என்றால் நாங்களும் தயார் என்று கூறினார். காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?

அதற்கான தேவை வரும்போது நாங்கள் தயாராக இருப்போம். இப்பொழுது அதற்கான தேவை இல்லை என நான் நினைக்கிறன்.

publive-image

திமுக தலைவர் ஸ்டாலினின் தலைமை பண்பு எவ்வாறு உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள், மறைந்த தலைவர் கலைஞருக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ஸ்டாலின் அவர்களின் தலைமை பண்பு மிகச்சிறப்பாக உள்ளது. ஒரு மாபெரும் கூட்டணியை எந்த வித சலனமும், சஞ்சலமும் இல்லாமல் மிக முறையாக அமைத்திருக்கிறார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் அகில இந்திய அரசியல் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை உள்ளது. அதனின் வெளிப்பாடாக தான் அவர் ராகுல் காந்தியை மதசார்பற்ற கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று மேடையில் அறிவித்தார். அவரின் அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலைஞர் எப்படி இருந்தாரோ அப்படியே தன்மையோடும், திறமையோடும் இருக்கிறார் ஸ்டாலின். அவர் தந்தையை போலவே, அகில இந்தியா அரசியலை நன்கு கணித்து வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உங்கள் தலைமையில் எப்படி வழி நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்?

எங்களை ஆதரிப்பவர்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எடுத்து செல்வோம். தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம். மத சார்பற்ற ஆட்சி இக்காலத்தின் கட்டாயம். பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் இந்த நாட்டை அழிக்க நினைக்கிறார்கள். அவர்களை ஒடுக்கும் அரசு தான் மக்களுக்கு தேவை, அதை காங்கிரஸ் வழங்கும்.

Dmk Aiadmk All India Congress K S Alagiri Lok Sabha M K Stalin General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment