போயஸ் கார்டன் தனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் எம்.ஜி.ஆர். அம்மா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஜெ.தீபா சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக தொண்டர்களானா மக்களுக்காக நான் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். அதைத் தொடர்ந்து எனது கணவர் ஒரு கட்சியைத் தொடங்கினார். பின்னர் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர், இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள், பல கட்டங்களைத் தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். இதையடுத்து நாங்கள் தேர்தலின் போது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம். அதை அதிமுக தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகளை செய்ய முடியா நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எனது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் லட்சியக் கனவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறாண்டு காலம் இருக்க வேண்டும் என்ற அவர் லட்சியத்தை ஏற்றுக்கொண்டு நான் தொடங்கிய இயக்கத்தை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுத்துள்ளோம்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. போயஸ் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும்.” இவ்வாறு தீபா கூறினார்.
கடந்த மாதம் ஜெ.தீபா தனது ஃபேபுக் பக்கத்தில், உடல் நிலை காரணமாக தனது பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாகவும் அரசியலில் விருப்பமில்லை என்றும் பதிவிட்டிருந்தார். பின்னர், அந்த பதிவை விரைவிலேயே நீக்கிவிட்டு, தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.