Advertisment

பிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் - கொடியேரி பாலகிருஷ்ணன்

மதக்கலவரங்களை தூண்டிவிட்டு கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் நிலைத்து நிற்க முயற்சித்தால் அது தோல்வியில் தான் முடியும்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LDF Kodiyeri Balakrishnan

LDF Kodiyeri Balakrishnan

விஷ்ணு வர்மா, திருவனந்தபுரம்

Advertisment

2016ல், இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி கேரளாவில் ஆட்சி அமைத்தது. மே 2016ல் தொடங்கி இன்று வரை கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் /பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எஸ்பி. சுஹைப் என்பவரை இவ்வருடத்தின் தொடக்கத்தில் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் அடித்துக் கொன்ற விவகாரம் வரை இதில் அடங்கும்.

1995ல் இருந்து இரு தரப்பிலும் நிறைய கொலைகள் அரங்கேறியுள்ளன. இரு தரப்பிலும் இறப்பு விகிதம் சரியாகவே இருந்து வருகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நிகழ்த்தப்பட்ட கொலைச் சம்பவங்களை விட இடது சாரி ஆட்சியில் தான் அதிக அளவில் கொலைகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

political killings kerala கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் கொலைகள்

 

கேரளத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் அரசியல் கொலைகள் பற்றியும், செங்கனூர் இடைத்தேர்தல் பற்றியும்,  கேரள சிபிஎம் கட்சியின் தலைவர் கொடியேரி பாலக்கிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த நேரடி பேட்டி..

செங்கனூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது அனைவருக்கும் தெரியும். ஆனால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் கட்சி வெற்றி பெரும் என்று நினைத்தீர்களா?

செங்கனூர் மக்கள் இடதுசாரி அமைப்புகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை இது காட்டுகின்றது. அரசியல் ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் இது மிகப் பெரிய வெற்றி தான். இத்தொகுதியில் வேறொருவரால் இத்தகைய வெற்றியினை அடைவது கடினமான காரியம் தான்.

செங்கனூர் வெற்றியை உங்களின் வேட்பாளர் சாஜி செரியன் அவர்களின் வெற்றியாக பார்க்கின்றீர்களா அல்லது உங்கள் அரசின் வெற்றியாக பார்க்கின்றீர்களா?

இருவருக்கும் சேர்ந்த வெற்றியாகவே இருக்கின்றது. நாங்கள் செய்திருக்கும் மாற்றங்களை விரும்பியே மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.  இதற்கு மத்தியில், இந்த வெற்றியினை சாத்தியப்படுத்திக் கொடுத்தவர் செங்கனூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KK ராமச்சந்திரன் நாயர் தான். அவர் அத்தொகுதி மக்களுக்காக நிறைய செய்திருக்கின்றார். மக்களுக்கும் நன்றாகவே தெரியும் அடுத்த மூன்றாண்டுகளுக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தான் ஆட்சியில் இருக்கும் என்பது. அதனால் ராமச்சந்திரன் விட்டுச் சென்ற பணிகளை சாஜி செய்வார் என்று மக்கள் நம்புகின்றார்கள்.

செங்கனூரின் வெற்றி எவ்வகையிலாவது 2019 தேர்தலில் மாற்றத்தினை தருமா?

ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் ஆட்சியின் பலத்தினை அதிகரிப்பதாகவே அமைகின்றது. இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து எங்களின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. ஆகவே இது பெரிய மாற்றத்தினை நிச்சயமாக தரும். ஐக்கிய ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து இறங்கு முகத்தினையே தேர்தல்களில் சந்தித்திருக்கின்றார்கள். ஜனநாயக கொள்கைகள் என்ற ஒன்று காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் இருப்பதே அவர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது.

2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பிஜேபி 7000 ஓட்டுகளை இழந்துள்ளது. இருப்பினும் 35000 ஓட்டுகளை பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வலுவான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா?

செங்கனூர் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை வலுப்பெற செய்த தொகுதியாகும். 91 மற்றும் 96 தேர்தல்களில் அவர்கள் 16,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியெல்லாம் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் அதன் பின்னால் வந்த தேர்தல்களில் அவர்களின் வாக்குவங்கி குறைந்து போனது. எந்நேரமும் அவர்களின் கட்சியினை பலப்படுத்தி செங்கனூரில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அவர்கள் இருக்கின்றார்கள். திருவிதாங்கூர் பகுதியில் செங்கனூர் தொகுதி மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் அப்பகுதியில் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் அங்கு தோல்வி அடைந்துவிட்டார்கள்.

வெற்றிக்கான ஸ்ட்ரேட்டஜியாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்?

இன்று பிஜேபிக்கு கிடைக்கும் அனைத்து ஓட்டுகளும் காங்கிரஸில் இருந்தவர்கள் போடும் ஓட்டுகள் தான். இன்று பிஜேபி எம்பிக்களாக இருக்கும் 112 பேர் காங்கிரஸ்ஸில் இருந்தவர்கள் தான். ஆனால் கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கட்சி மாறவில்லை, மாறாக கட்சித் தொண்டர்கள் காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கு மாறிவிட்டார்கள். ஏற்கனவே கேரளத்தில் பிஜேபிக்கு 8-10 சதவீதம் ஓட்டுகள் இருக்கும். ஆனால் பாரதிய தர்ம ஜன சேனா கட்சி உதவியுடன் அவர்களின் வாக்கு வங்கி 15% மாக அதிகரித்திருக்கின்றது. 1991ல் இருந்து நடைபெற்று வந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சி என இரண்டுமே வாக்கு வங்கிகளை பகிர்ந்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்திருப்பதால் நிலைமை மாறிவிட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்தியன் முஸ்லீம் கட்சியினரும், கேரள காங்கிரஸ்ஸாரும் சேர்ந்துவிட  போட்டியானது தற்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் மட்டும் தான்.

Left Democratic Front இடதுசாரிகளின் கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் என்றும் நிலைக்காது -  சிபிஎம் தலைமை கொடியேரி பாலக்கிருஷ்ணன்

வருங்காலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மாற்றாக பிஜேபியை பார்க்கலாமா?

நாங்கள் அப்படி ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், கேரளா ஒரு மதச்சார்பற்ற மாநிலம். ஏனைய மாநிலங்கள் போல் இல்லாமல் சகோதரதுவத்துடன் தான் வாழ்கின்றோம்.  ஸ்ரீ நாரயண குரு, அய்யன்களி, சட்டம்பி ஸ்வாமி போன்றவர்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகவும் பெரியவை. அம்மாற்றங்களை கொண்டுள்ள இடத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பிற்கு வேலையே இல்லை. இதுவரை 217 சிபிஎம் கட்சி தொண்டர்கள் பிஜேபியினரால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் 35000 கிளைகளுடன் மக்களோடு மக்களாக சிபிஎம் பரவி இருக்கின்றது.

அரசியல் கொலைகள் பற்றி கொஞ்சம் கூறுங்கள்... ஆர்.எஸ்.எஸ், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை ஏன் உங்களால் தடுக்க இயலவில்லை?

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியல் கொலைகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. பிரிட்டிஷார் எங்கள் கட்சி உறுப்பினர்களை கொலை செய்திருக்கின்றார்கள்.  அச்சமயத்தில் மொயரத் சங்கரன் என்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மலையாளத்தில் எழுதியதிற்காக அவரையும் காங்கிரஸார் கொலை செய்தார்கள்.  1950ல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டார்கள்.

குண்டர்கள் மூலமாகவே இப்போதெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைகளில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ளவே நாங்கள் பதில் தாக்குதல்கள் நடத்துகின்றோம். கேரளத்தில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை 600, அதில் 217 நபர்கள் பிஜேபிகாரர்களால் கொல்லப்பட்டவர்கள் தான். பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருப்பதற்காக திருவனந்தபுரத்தில் சிபிஎம் மற்றும் பிஜேபி கட்சியினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனாலும் மாஹியில் இரட்டைக் கொலை நடைபெற்று பேச்சுவார்த்தையினை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ஒரு கட்சியினரால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாது. கொள்கை சார்ந்த அரசியலுக்கு மட்டுமே இங்கு இடமுண்டு மற்றபடி ஆயுதங்களுக்கு இடமில்லை.

RSS Member E Manoj ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் இ.மனோஜ் அவர்களின் இறுதி ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இதைத்தான் கூறுகின்றார்கள்.. அவர்களின் கட்சி அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில்?  

இதனை தடுப்பதற்காக முதலமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளின் ஏன் ஆர்,எஸ்.எஸ் அமைப்பினர் கலந்து கொள்வதில்லை. அவர்கள் வெளியில் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பிரச்சனைகள் செய்து அதிகாரத்தில் இடம் பெறலாம் என்று நினைக்கின்றார்கள். மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வளர்ந்து வருவது போல் கேரளத்தில் என்றும் நிலைத்து நிற்காது ஆர்.எஸ்.எஸ். இங்கு மதக்கலவரங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதால் ஆர்.எஸ்.எஸ் மார்க்சிஸ்ட் கட்சியினை அழிக்க விரும்புகின்றது. ஆனால் இது ஒரு போதும் இங்கு நடக்காது. நாங்கள் எந்த கட்சியினையும் அழிக்கவோ, கட்சி உறுப்பினர்களை கொலை செய்யவோ நினத்தது இல்லை. அவர்கள் உயிரோடு இல்லாமல் போனால் நாளை எப்படி அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவார்கள்? பாஜகவில் இருந்தும் கூட எங்களின் கட்சிகளில் நிறைய பேர் இணைகின்றார்கள். நாங்கள் யாரையும் வேண்டாம் என்று ஒதுக்குவது கிடையாது . இப்போதும் எங்காவது பிரச்சனை ஏற்பட்டால் பிஜேபி தலைவர்கள் பிரச்சனை குறித்து அறிய எங்களை தொடர்பு கொள்கின்றார்கள்.

கடந்த வருடத்தினைப் போன்று இவ்வருடமும் பிஜேபியுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா?

எப்போது பிரச்சனை நடந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கின்றோம். கண்ணூரில் சமீபத்தில் நடந்த பிரச்சனையை ஒட்டி, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து தொண்டர்களையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். தற்போது பல பிரச்சனைகள் குறைந்துவிட்டன.

காவல்துறையில் விசாரணையில் நிகழும் மரணங்களை கணக்கில் கொண்டு முழுநேர உள்துறை அமைச்சரை நியமிப்பீர்களா?

எந்த ஒரு அமைச்சருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாக்காக்கள் ஒதுக்கப்படும். ஒருவர் முழு நேரமும் யார் எந்த காவல் நிலையத்தில் இருப்பார் என்று கவனித்துக் கொண்டே இருக்கே முடியாது. கடந்த ஆட்சியில் போலிஸ் கஸ்டடியில் நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் இதைப் பற்றி யாருக்காவது தெரியுமா? எந்த மீடியாக்களும் ஏன் அதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. இது நாள் வரையில் அக்காவலர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்களா? இல்லை, ஆனால் இந்த ஆட்சியில் அவை அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படுமெனில், அவர்களுக்கு ஆதரவு தருவீர்களா?

2004ல் நாங்கள் தந்த ஆதரவினை நிச்சயமாக காங்கிரஸிற்கு தருவோம். எக்காரணம் கொண்டும் நாங்கள் பிஜேபிக்கு ஆதரவு தரமாட்டோம். எங்கள் தொகுதியில் இருந்து மத்திய அமைச்சரவை சென்ற எங்கள் கட்சி உறுப்பினர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால் தான், மத்திய அரசு மக்களுக்கு பிடிக்காத முடிவுகளையே தொடர்ந்து எடுத்து வருகின்றது. 2004ல் மத்தியில் நாங்கள் 63 அமைச்சர்களை கொண்டிருந்தோம். 2004லின் நிலை தற்போதும் நிகழுமெனில், நிச்சயம் காங்கிரஸ்ஸிற்கு ஆதரவினை அளிப்போம்.

2019 தேர்தலில் நீங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்?

தோராயமாக மதிப்பிட்டு கூற இயலாது ஆனால் காங்கிரஸ் மிகப் பெரும் தோல்வியை சந்தித்து வந்திருப்பதால், இம்முறை நிச்சயம் நாங்கள் அதிக அளவு இடம் பெறுவோம்.

ராகுல் காந்தி காங்கிரஸ்ஸின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

இந்தியாவின் அரசியல் என்பது காங்கிரஸின் தலைவர் யார் என்பதை பொறுத்து நடப்பதில்லை. அரசியல் என்பது தனி நபர் சார்ந்தது அல்ல. நாங்கள் காங்கிரஸ் கட்சியினை தனி நபராக பார்க்காமல், கொள்கையினால் உருவாக்கப்பட்ட கட்சியாகவே பார்க்கின்றோம். பிஜேபிக்கு எதிரான தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைப்பதில் ராகுல் வளர்ந்திருக்கின்றார். ஆனால், சோனியாவின் தலைமை ராகுலின் தலைமையாக மாறியதால் காங்கிரஸ் ஒன்றூம் மாறிவிடவில்லை என்பது தான் உண்மை.

2021 சட்ட மன்ற தேர்தல் போட்டியில் உங்களுக்கு வலுவான எதிர் போட்டியாளர்களாக ஐக்கிய ஜனநாயக முன்னணி இருக்குமா அல்லது பிஜேபி இருக்குமா?

2016ல் வெற்றி பெற்றது போலவே 2021லும் வெற்றி பெறுவோம். ஆனால் அச்சமயத்தில் பிஜேபி தக்கவைத்திருக்கும் 15% வாக்கு வங்கியும் காணாமல் போவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பேட்டி மலையாளத்தில் எடுக்கப்பட்டு ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தமிழில் எழுதப்பட்டது.

தமிழில் நித்யா பாண்டியன்

Kerala Nithya Pandian Kodiyeri Balakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment