தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைக்கு எம்.பி-யாகப் போகிறார் என்றபோதே தமிழக அரசியலில் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு எழத்தொடங்கிவிட்டது.
இந்த எதிர்பார்ப்புக்கு அவர் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் செயல்பட்ட விதம்தான். அதனால், மாநிலங்களவையில் எம்.பி ஆகியுள்ள வைகோ மத்திய பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வைகோ, மாநிலங்களவையில் பேசிய உரைகளில் பாஜகவுடன், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸையும் சேர்த்து கடுமையாக விமர்சித்து பேசினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது தமிழக காங்கிரசார் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, அவர் தனது முதல் உரையில், இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்கியது பற்றி குறிப்பிட்டு பேசினார்.
இப்படி, வைகோ காங்கிரஸை விமர்சித்து பேசியதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் அண்ணாவின் வழியில் வந்ததாக கூறுகிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.
காஷ்மீர் பிரச்சனையில் வைகோ பேச எடுத்துக் கொண்ட நேரத்தில் பெரும் பகுதியை காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு வைகோவிடம் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பா.ஜ.க.வின் தலைவர்களை சந்திக்கிறார். பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்று முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், வைகோவுக்கு எதிரி பாஜகவா? காங்கிரஸா?, காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, அரசியல் நாகரீகம் இன்றி காங்கிரசை விமர்சித்துள்ள வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கு பிறகு, சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “வைகோ மீது எனக்கு எந்த வன்மமும் கிடையாது. எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் வைகோ. வைகோவை எம்பியாக்கினால் நாங்கள் ஓட்டளிக்கமாட்டோம் என காங்கிரஸ் கூறியிருந்தால் வைகோ எம்பியாகி இருக்க முடியுமா? எங்களது ஓட்டு மறைமுகமாக அவருக்கு போயுள்ளது..எனவே வைகோ கூறுவது தர்மமில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த கூட்டணியை உருவாக்கி உள்ளார்..இப்படி வாய்க்கு வந்தபடி பேசுபவர்களையெல்லாம் கூட்டணியில் இணைத்து ஜெயித்திருப்பது ஸ்டாலினின் திறமையை காட்டுகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் காங்கிரஸை எதிர்த்து பேசுகிறேன் என நேரம் கேட்டு பேசியிருக்கிறார் வைகோ. அமித்ஷாவையும் மோடியையும் சந்தோஷப்படுத்தப் பேசியிருக்கிறார். பேராண்மை என்பது நிமிர்ந்து நின்றால் வருவதல்ல உள்ளத்தில் இருந்து வர வேண்டும். வைகோவை தனிப்பட்ட விதத்தில் தாக்கிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
சட்டமன்றம் நாடாளுமன்றம் அமைதியாக பேசுவதற்கு தான்.. சந்தையில் கூச்சல் போடலாம் சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடக்கூடாது. அமைதியாக பேசுங்கள், வைகோ பாண்டவர்கள் தரப்பா? அல்லது கௌரவர்கள் தரப்பா?, ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி என்ற அழகான சிற்பத்தை அவர் பேசி வைத்து உடைத்துவிட வேண்டாம். மதிமுக தொண்டர்கள் எனது அலைப்பேசிக்கு அழைத்து அநாகரிகமாக பேசுகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும் நேருவும் என்ன தவறு செய்தார்கள் என வைகோ கூறினால் பேச தயாராக உள்ளேன்.
ஈழத்தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கொள்கை அமைத்துக் கொடுத்தது காங்கிரஸ். இலங்கை ராணுவ வீரன் ஒருவன் ராஜீவ்காந்தியை கட்டையால் தாக்கினான். மதிமுகவினரையா தாக்கினான்? ராஜீவ் இலங்கை ஈழத் தமிழர்களுக்காக நின்றதால் தான் தாக்கப்பட்டார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தோல்வியடைந்ததற்கும் இறந்ததற்கு வைகோ போன்றவர்கள் தான் காரணம். விடுதலை புலிகளிடம் தவறான தகவலை கூறியதால் தான்.” என்று வைகோவை கடுமையாகப் பேசினார்.
கே.எஸ்.அழகிரிக்கு பதிலளிக்கும் வகையில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, “சாத்தான் வேதம் ஓத வேண்டாம்” என பதில் விமர்சனம் செய்தார்.
கே.எஸ்.அழகிரியின் பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறிது நேரத்திலேயே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் வாதாடிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கே.எஸ்.அழகிரிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். அதில், “காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் தான் நான் ராஜ்யசபாவில் பதவி ஏற்றேன் என்று அழகிரி கூறுவது தவறு. என்மீது கொண்ட வன்மத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியது. ஒரு ராஜ்ய சபா எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.-க்கள் போதும். மூன்று ராஜ்யசபா எம்பிக்களை தேர்ந்தெடுக்க 102 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும். திமுகவில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே திமுக என்னை அனுப்பியது. திமுக எம்.எல்.ஏ.-க்கள்தான் எனது பெயரை முன்மொழிந்தவர்கள். அதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கிடையாது. திமுக எம்.எல்.ஏ.-க்கள் ஓட்டு போட்டு என்னை அனுப்பி உள்ளார்கள். காங்கிரஸ் தயவில் நான் செல்லவில்லை.
ஒரு இனத்தையே அழித்த பாவிகள் காங்கிரஸ். ஒருபோதும் அவர்களோடு நான் செல்லமாட்டேன்.
மோடியிடம் சென்ற பொழுது உங்களை எதிர்த்து தான் ஒட்டு போடுவேன் என்று சொன்னேன். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் 12 பேர் ஒட்டு போடாமல் ஓடிப்போனார்கள். அவர்கள் எவ்வளவு ரூபாய் வாங்கினார்கள்.? நியூட்ரினோ, ஹைட்ரோ கார்போன் திட்டத்தை பற்றி மோடியிடம் சொன்னேன். பிரதமர் மோடி அவர்களிடமே சென்று அவருடைய தவறை சுட்டி காட்டும் தையரியம் வைகோ ஒருவனுக்கு மட்டும் தான் உள்ளது. ஈழத் தமிழினத்தை படுகொலை செய்த பாவிகள் காங்கிரஸ்கார்கள் அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.” என்று பொறிந்து தள்ளிவிட்டார்.
இதனிடையே, வைகோவின் பேச்சை மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தயவால்தான் வைகோ ராஜ்யசபா எம்.பியாகி உள்ளார். இன்னும் 15 நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் நன்றி மறந்துவிட்டார். வைகோ அரசியல் அநாதையாக இருந்தார். காங்கிரஸ், திமுக கூட்டணியில் வைகோவை சேர்த்ததால்தான், கணேசமூர்த்தி என்ற மக்களவை எம்.பி மதிமுகவுக்கு கிடைத்துள்ளது. அமித்ஷா சொல்லிதான் காங்கிரசை விமர்சனம் செய்து ராஜ்யசபாவில் வைகோ பேசியுள்ளார். துரோகி நம்பர் 1 வைகோ, கொஞ்சம் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்தபோது, அதிமுகவினரால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியபோது, வைகோ நேரில் சென்று சந்தித்தார். வைகோ காங்கிரஸை விமர்சித்தாலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாகவே இருந்தார் என்று கூறலாம். ஆனால், இன்று வைகோவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு வைகோ காங்கிரஸ் தயவால் நான் எம்.பி.யாகவில்லை என்று கடுமையாக பதில் அளித்துள்ளார். தலைவர்கள் இப்படி துரோகி, பச்சோந்தி, பாவிகள் என்று கடுமையான வார்த்தைகளால் உக்கிரமாக பேசிக்கொள்வது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை அமைதியாக இருக்கிறது.
இது தொடர்பாக, திமுகவின் கூட்டணிக் கட்சி எம்.பி.-க்கள் கூட்டத்தில் இந்த பிரச்னை எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள், திமுக தலைவர் இப்பிரச்னையில் தலையிடுவாரா? என்று கேள்வி எழுப்பியபோது, இது ஒரு சிறு பிரச்சனை. நாளை காலை இது சுமூகமாகிவிடும். இரண்டு கட்சிகள் பதில் பேசிக் கொள்கிறோம். அவ்வளவே என்று கூறி முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். ஆனால், இது முற்றுப்புள்ளிதானா என்பதுதான் தெளிவாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.