சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் ஆதித்யா-எல்.1 திட்டம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய களமிறங்கியுள்ளது.
ஆதித்யா-எல் 1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 (சூரிய-பூமி லக்ராஞ்சியன் புள்ளி) க்கு அனுப்பபட்டு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி நிறுவனத்தால் தொடங்கப்படும் சூரியனைக் கண்காணிப்பதற்கான முதல் இந்திய விண்வெளிப் பணி இதுவாகும்.
சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகம் (The first space-based Indian observatory) பி.எஸ்.எல்.வி-சி 57 ராக்கெட் மூலம் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா-எல்1 மிஷன், சூரியனை எல்.1 சுற்றுப்பாதையில் இருந்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த விண்கலத்தில் 7பேலோடுகள் அனுப்பபடுகின்றன. போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளான கொரோனாவை வெவ்வேறு அலைவரிசையில் கண்காணிப்பது என பல்வேறு ஆய்வுகளை இந்த திட்டம் மூலம் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”