அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான (நாசா) விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புது புது ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது, வானில் காணப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை ( unidentified flying objects- UFOs) ஆய்வு செய்ய நாசா ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்த பறக்கும் மர்ம பொருட்கள் பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில் நாசா, இதற்கான விடை தேட 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. 9 மாத கால ஆய்வு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்த நாசா, "அடையாளம் காணமுடியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) குறித்து ஆராய 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 9 மாதங்கள் ஆய்வு செய்யும். 9 மாத கால ஆய்வு நாளை ( அக்டோபர் 24) தொடங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வானில் அடையாளம் காணமுடியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று கூறினார்.
2000-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சிப் பகுதிகள், பயிற்சி மையங்கள், மற்றும் பிற கட்டுப்பாட்டு பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத/ அல்லது அடையாளம் காணமுடியாத விமானங்கள் மற்றும் பொருள் பறப்பது அதிகரித்து வருகிறது என்று கடற்படை உளவுத்துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரே, ஹவுஸ் பாதுகாப்புக் குழுவிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil