உலகின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினமாக நீல திமிங்கலங்கள் (Blue whales) உள்ளன. இவை தினமும் டன் கணக்கில் உணவு உண்ணும் தன்மை கொண்டவை. கடலில் மாசுபாடுகள் அதிகரித்துள்ளதால் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் உண்கின்றன. இந்தப் பட்டியலில் நீல திமிங்கலங்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.
அமெரிக்க பசிபிக் கடலில் 3 வகையான திமிங்கலங்கள் நீல திமிங்கலங்கள் (Blue whales), ஃபின் திமிங்கலங்கள் (fin), ஹம்பேக் திமிங்கலங்கள் (humpback) உட்கொண்ட மைக்ரோ பிளாஸ்டிக் அளவு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை சமர்பிக்கப்பட்டது. இது உயிரினங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், "நீல திமிங்கலங்கள் தினமும்
சுமார் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் 95 பவுண்டுகள் (43.5 கிலோ) பிளாஸ்டிக்குகளை உட்கொள்கிறது. அதேபோல் ஃபின் திமிங்கலங்கள் தினமும் சுமார் 6 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் 57 பவுண்டுகள் உண்கிறது.
ஹம்பேக் திமிங்கலங்கள் 4 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் 38 பவுண்டுகள் உண்கிறது. இது பெரும்பாலும் நேரடியாக கடலில் இருந்து உட்கொள்ளுவதில்லை. 99% தன்னுடைய இரையின் மூலம் பிளாஸ்டிக் உட்கொள்கிறது. அதாவது, திமிங்கலத்தின் இரை முன்பே பிளாஸ்டிக் உட்கொண்டு இருக்கும். இதை திமிங்கலம் விழுங்கும் போது பிளாஸ்டிக்கையும் உடன் சாப்பிடுகிறது" என ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேத்யூ சவோகா கூறினார்.
126 நீல திமிங்கலங்கள், 65 ஹம்ப்பேக் திமிங்கலங்கள் மற்றும் 29 ஃபின் திமிங்கலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திமிங்கலத்தின் உணவு பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த திமிங்கலங்களின் பின்புறம் கணக்கீடு செய்ய எலாக்ட்ரானிக் கருவி, கேமரா, மைக்ரோஃபோன், ஜிபிஎஸ் லொக்கேட்டர் கருவி போன்றவை பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது என ஆய்வின் ஆசிரியர்கள் கூறினர்.
ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான ஷிரெல் கஹானே-ராப்போர்ட் கூறுகையில், "இது திமிங்கலத்தின் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மாசடைந்த நீரால் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. பிளாஸ்டிக்குகள் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் இரசாயனங்களையும் வெளிப்படுத்தும்" என அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil