நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்த 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ரூ.16,361 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை விட 2,000 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான (Artificial Intelligence) புதிய மையங்கள் அமைப்பது உள்பட பல அறிவியல் திட்டங்களின் பின்னணியில் அமைச்சகத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு அமைச்சகத்தில் மூன்று துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை எனப் பிரித்து வழங்கப்படுகிறது. உயிரி தொழில்நுட்பத் துறைக்கு ரூ.2683.86 கோடி, றிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறைக்கு ரூ. 5746.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் வருடாந்திர ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டாலும், விண்வெளித் துறைக்கான பட்ஜெட் கடந்த நிதியாண்டில் இருந்து ரூ.1100 கோடி குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில் ரூ.13,700 கோடியாக இருந்த நிலையில், இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு பொறுப்பான விண்வெளித் துறைக்கு ரூ.12,543.91 கோடி தற்போது மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நிதி ஒதுக்கீடு குறித்து இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறுகையில், "இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத் திட்டம், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் உள்பட வரலாற்றில் மிகப்பெரிய பயணங்ளை திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ உலகளவில் குறைந்த செலவில் பணிகள் மேற்கொள்வதாக அறியப்பட்டாலும், அதன் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதி குறைப்பு ககன்யான் பணி உட்பட அதன் சில பணிகளை மேலும் தாமதப்படுத்தலாம்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/