Chandrayaan-3 Mission: இந்தியாவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான்-3, நாட்டின் ஒரே விண்வெளித் தளமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 13ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ மூத்த அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். விண்கலம் ஒரு மாதத்திற்கு மேல் பயணித்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜூலையில் அனுப்பபடும் விண்கலம் ஒரு மாதத்திற்கும் மேலாக விண்வெளியில் பயணித்து ஆகஸ்ட்டில் நிலவை அடைந்து தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலத்தில் முந்தைய சந்திரயான்-2 திட்டத்தைப் போலவே ஒருங்கிணைந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அனுப்பபடும். முந்தைய பணியைப் போலவே நிலவின் தென் துருவத்திற்கு அருகில் 70 டிகிரி அட்சரேகையில் (latitude) தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கம் (soft landing) செய்யப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான்-3 பெறும்.
பல பள்ளங்கள் நிழலில் நிரந்தரமாக இருப்பதால், நீர் பனியை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால் இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாசா பேலோடுகளையும் சுமந்து சென்ற சந்திரயான் 1, நிலவில் நீர் மற்றும் ஹைட்ராக்சில் (OH) மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது.
பல கட்ட சோதனைகள்
இந்த திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, நிலவில் விண்கலத்தை மென்மையான தரையிறக்கம் செய்த பட்டியலில் இந்தியா 4-வது நாடாக சேரும்.
இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்கனவே ஆர்ப்பிட்டர் நிலைநிறுத்தப்பட்டதால் இந்த திட்டத்தின் விண்கலத்தில் லேண்டர்-ரோவர் மட்டுமே அனுப்பபடும். லேண்டர்-ரோவர் கட்டமைப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை.
திட்டமிட்டபடி பணி நடப்பதை உறுதிசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்ய பல கட்ட சோதனைகள் செய்துள்ளோம்" என்று கூறினார்.
முன்னதாக சாஃப்ட் லேண்டிங் மற்றும் ரோவிங் ஆகியவற்றை நிரூபிக்க திட்டமிடப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் வேகமாக தரையிறங்கி தொடர்பு துண்டிக்கப்பட்டு திட்டம் தோல்வியடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“