நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பபட்ட இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் தற்போது நிலவு சுற்றுப் பாதை பயணத்தில் உள்ளது. விண்கலத்தின் சுற்றுப் பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 14) நிலவு சுற்றுப் பாதை மேலும் குறைக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் தற்போது சந்திரனைச் சுற்றி “Near-circular orbit” பாதையில் உள்ளதாக கூறியுள்ளது.
ஜூலை 14-ம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-3, ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவு சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விண்கலத்தின் இரண்டு சுற்றுப் பாதை குறைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது முறையாக சுற்றுப் பாதை குறைக்கப்பட்டு விண்கலம் நிலவின் மேற்பரப்பை நெருங்கி வருகிறது.
ஆகஸ்ட் 16-ல் என்ன நடக்கும்?
இஸ்ரோ கூறுகையில், இன்று 150 கி.மீ x 177 கி. மீ என்ற தூரத்தில் விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து கட்ட சுற்றுப் பாதை குறைப்பு ஆகஸ்ட் 16 காலை 8.30 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று ட்விட் பதிவிட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 16-ம் விண்கலம் 100 கி.மீ சுற்றுப் பாதை அடைய சுற்றுப் பாதை குறைப்பு செய்யப்படும். இதைத் தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் அடங்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து (Propulsion module) பிரிந்து செல்லும்.
இதற்குப் பிறகு, லேண்டர் ஒரு "டீபூஸ்ட்" (வேகத்தை குறைக்கும் செயல்முறை) மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக தரையிறங்கும் (soft landing) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/