நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை ஆய்வைத் தொடர்ந்து சந்திரயான்-3 அடுத்த கட்ட ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. நிலவில் சல்ஃபர், ஆக்ஸிஜன், கால்சியம் , ஐஆர்ன் போன்ற தனிமங்கள் (Elements) இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்றும் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது .
விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகிறது. அதன் படி, விக்ரம் லேண்டரில் உள்ள ஒரு கருவி நிலவின் வெப்பநிலை ஆய்வு செய்து முதல் தரவை வெளியிட்டது.
இந்நிலையில் பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் இன்டியூசிடு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எல்.ஐ.பி.எஸ்) கருவி (The Laser-Induced Breakdown Spectroscopy (LIBS)) நிலவில் தனிமங்கள் இருப்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, லிப்ஸ் கருவி மேற்கொண்ட ஆய்வில் நிலவில் சல்ஃபர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள 'X' பதிவில், “ரோவரில் உள்ள லிப்ஸ் (Laser-Induced Breakdown Spectroscope-LIBS) ஆய்வுக் கருவியின் மூலம் தென் துருவத்துக்கு அருகே உள்ள நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் (கந்தகம்) தனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹைட்ரஜன் இருப்பை கண்டறியும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளது.
மேலும் இந்த கருவி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
கண்டறிந்தது எப்படி?
நிலவில் பல்வேறு தனிமங்கள் இருப்பு மற்றும் மிகுதியைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது சந்திரயான்-3 பணியின் முக்கிய அறிவியல் நோக்கங்களில் ஒன்றாகும். தனிமங்கள் பற்றி அறிய ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோவரில் உள்ள LIBS கருவி, இஸ்ரோவின் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தால் (LEOS) உருவாக்கப்பட்டது.
பாறைகள் அல்லது மண்ணிலிருந்து பிளாஸ்மாவை உருவாக்க இந்த கருவி உயர் ஆற்றல் பல்சரைப் பயன்படுத்துகிறது. பிளாஸ்மா நிலையில், தனிமங்கள் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இது அலைவரியாக சேகரிக்கப்பட்டு தனிமங்களின் இருப்பை காட்டுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆல்ஃபா பார்ட்டிகல் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் ரோவரில் உள்ள மற்ற கருவியும் சந்திர மேற்பரப்பின் தனிமங்களை ஆய்வு செய்வதாகும் கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் வரும் செப். 3-ம் தேதி வரை நிலவில் ஆய்வு மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“