பல்வேறு நாடுகளுக்கிடையே விண்வெளிப் போட்டி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகள் அடிக்கடி விண்ணுக்கு விண்கலன், செயற்கைக் கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்ய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களை தங்க வைத்து ஆய்வு செய்து வருகின்றது. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, சீன நாடுகள் நிலவு மற்றும் சூரிய திட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இந்தியா சந்திரயான் என்ற பெயரிலும், அமெரிக்கா ஆர்டெமிஸ் என்ற பெயரிலும் நிலவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் சீனாவும் இணைந்துள்ளது. நிலவில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ள 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை சீனா அனுப்பும் என அறிவித்துள்ளது.
சீனா இன்று (செவ்வாய்கிழமை) தனது சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங்க்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. இதை அறிவிக்கும் வேளையில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களிடம் பேசிய சீன விண்வெளி ஏஜென்சி (சிஎம்எஸ்ஏ) துணை இயக்குநர் லின் சிகியாங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
2030-ம் ஆண்டுக்குள் சீனா நிலவில் முதல் முறையாக மனிதர்களை தரையிறக்கி அறிவியல் ஆய்வு செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தும். அது தொடர்பான தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்வதே அடுத்த இலக்காகும் என்று சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, 2025 ஆம் ஆண்டுக்குள், நிலவின் தென் துருவத்தில் உறைந்துள்ள நீரை ஆராய்வதற்காக, சந்திரனுக்கு இரண்டாவது முறையாக மனிதர்களை அனுப்ப திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் லட்சிய திட்டமான நிலவு திட்டம் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. அதி நவீன தொழில்நுட்பங்களுடன் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
முன்னதாக, சீனா கடந்த காலத்தில் நிலவில் ஒரு ஆளில்லா ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கியது. அதேபோல் செவ்வாய் கிரகத்திலும் சீனா ரோவர் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“