Great Indian Bustard habitat loss : 2004 – 2014 காலங்களில் ராஜீவ் காந்தி க்ரமீன் வித்யுதிகரன் யோஜனா (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana) என்ற பெயரில் இந்தியாவின் கடைகோடி கிராமங்களுக்கும் மின்சாரம் வழ்ங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana) என்ற திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற அறிவிப்பை தற்போதைய மோடி அரசு அறிவித்தது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற “semiarid” பகுதிகளில் பலருக்கும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் எடுக்கும் திட்டம் அமைந்துள்ளது. ஆனால் இது அந்த நிலத்தின் சூழலையே மாற்றும் தன்மை கொண்டது என்பதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வளர்ச்சி அனைத்து தரப்பினருக்குமானது தான். ஆனால் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் சரியானவையா? அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வேறெந்த உயிரினங்களுக்கும், அவற்றின் வாழும் சூழலுக்கும் பிரச்சனைகள் வராத வகையில் இருக்குமா என்பதை சோதனையிட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது நாம் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும்.
ஆண்டு தோறும் மின்கம்பிகளில் சிக்கி பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள் உயிரிழக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பகுதிகளில் மட்டுமே தற்போது தட்டுப்படும் கானமயில்கள் Wildlife Institute of India-வின் அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார கம்பிகளில் சிக்கி 18 உயிரிழக்கின்றன. இப்பறவைகளை காக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் அமைய இருக்கும் சோலார் பேனல்களுக்கான மின் இணைப்பை தரைக்கு அடியில் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்த நிலையில் அதனை எதிர்த்து வருகின்ற ஜூன் 29ம் தேதி அன்று மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
பார்வையற்ற பறவையா கானமயில்?
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் சோலார் எரிசக்தி உற்பத்திக்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்று கானமயில் குறித்து சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. “குருட்டு பறவைகள்” வாழும் ”புறம்போக்கு நிலம்” என்று கானமயில்களையும், புல்வெளி சுற்றுச்சூழலையும் குறை மதிப்பிற்கு ஆளாக்கி இந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தது. இது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப பிறகு தங்களின் செய்திகளின் உள்ளடக்கத்தை மாற்றினார்கள்.
கானமயில், பறக்கும் பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவையாகும். இப்பறவைகளுக்கு நேர்பார்வை கிடையாது. தங்களை தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்கு ஏற்ற வகையில் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருப்பதால் ஒற்றை பார்வை திறனை (Monocular vision) கொண்டுள்ளது. இதனால் பெரும்பாலான சமயங்களில் மின் கம்பிகளில் பட்டு உயிரிழக்கும் அபாயத்தை சந்தித்து வருகின்றன. மேலும் இதன் இனச்சேர்க்கை மற்றும் வளரிளம் பறவைகளுக்கான உயிர்பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் சவாலானதாகவே இருக்கிறது. தரையில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை இப்பறவைகள். நாய்கள் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தால் அந்த முட்டை, உயிருள்ள ஒரு பறவையாக வாழ்வதற்கான சாத்தியத்தை குறைத்துவிடுகின்றன. மனித இடையூறுகள் இருப்பதாக உணரும் பட்சத்தில், இனச்சேர்க்கையை தாமதப்படுத்தும் உயிரினமாகவும் கானமயில் உள்ளது.
வேட்டையாடுதல், மின்கம்பிகள், முட்டைகளை நாய்கள் உட்கொள்ளுதல், விவசாயத்திற்காக வாழ்விடம் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுதல், தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு போன்ற காரணங்களால் தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 150 ஆக குறைந்துள்ளது.
”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி”
என்ற மூதுரை பாடலில் ஔவையார் குறிப்பிட்டிருக்கும் கானல் மயில் என்பது தான் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் கான மயில். நாம் நம் வாழ்வில் தினசரி காணும் மயில் பற்றியதல்ல. இந்தியாவில் 150க்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் கானல் மயில் குறித்த சங்ககாலப் பாடல் இது. இன்று இந்த பறவையை தமிழகத்தில் எங்கும் காண முடியாது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ள உலர்ந்த புல்வெளி பகுதிகளிலும் வறண்ட புதர்க்காடுகளிலும் வாழ்ந்து வருகின்றது கானமயில் என்று அழைக்கப்படும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் ( Great Indian Bustard (GIB), அறிவியல் பெயர் – Ardeotis nigriceps ). வேட்டையாடுதல்களில் இருந்து இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் இப்பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொட்ட தென் துருவம்… எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
இந்தியாவின் புகழ் பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி, இந்தியாவின் தேசிய பறவையாக கானமயிலை அறிவிக்க வேண்டும் என்று 1960களில் இந்திய அரசை கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பு மட்டுமே இந்த பறவையை அழிவில் இருந்து காக்க உதவும் என்று அவர் நம்பினார். ஆனால் இதன் ஆங்கில பெயர் உச்சரிப்பு மற்றும் தகவமைப்பு போன்ற காரணங்களால் அந்த வாய்ப்பை இழந்தே விட்டது கானமயில்.
ராஜஸ்தானில் அதிக அளவில் இருக்கும் இந்த பறவை, குஜராத்தில் தங்களின் வாழ்விடங்களை கட்ச் வரை சுருக்கிக் கொண்டது. 1999ம் ஆண்டு 30 பறவைகள் இருந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு 2007ம் ஆண்டு 48 ஆக உயர்ந்ததது. ஆனாலும் தொடர்ந்து பல்வேறு விபத்துகளில் சிக்கி இந்த பறவைகள் இறக்க தற்போது 5 பெண் கானமயில்களே கட்ச் பகுதியில் காணப்படுகிறது.
குஜராத்தின் அப்தசா பகுதியில் 2 கி.மீ பரப்பில் அதிக அளவு கானமயில்கள் வாழ்ந்து வந்த நிலையில் அப்பகுதி கானமயில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதி உட்பட பல்வேறு இடங்களில் 5000 மெகா வாஅட் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5600 காற்றாலைகள் கட்ச் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Grassland ecosystem
பறவையை ”பருமனான, பார்வையற்ற” என்ற மோசமான வார்த்தைகளில் வர்ணித்தது மட்டும் அல்லாமல் அதன் வாழும் பகுதிகளை புறம்போக்கு (வேஸ்ட்லேண்ட்) அல்லது வாழ தகுதியற்ற பகுதிகள் என்றும் வகைமைப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் புல்வெளி காடுகளுக்கான பார்வையும் மதிப்பும் அது குறித்த புரிதல்களும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆறு வகையான புல்வெளி வாழிடங்கள் உள்ளன. மரங்கள் அதிகமாக இருக்கும் காடுகளில் நிலவும் பல்லுயிர் பெருக்க சூழலைப் போன்றே, இந்த புல்வெளிகளை நம்பி நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. சமயங்களில் இந்த நிலங்களை வாழ தகுதியற்ற நிலங்கள் என்று கருதி குப்பைகள், கட்டுமான சேதாரங்கள் போன்றவற்றை கொண்டு வந்து கொட்டுவதும் வழக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. மேலும் “மரம் வளர்க்கும்” திட்டத்தில் புல்வெளி பிரதேசங்களை சீர்படுத்தி மரம் நடும் அபத்தமான சூழல்களும் நிலவி வருகின்றன.
வெப்பமண்டல, மித வெப்பமண்டல, டுண்ட்ரா, ஈரபுல்வெளி, பாலைவன மற்றும் மோண்டேன் வகை புல்வெளிகள் காணப்படுகின்றன. போதுமான புல்வெளி நிலங்கள் இல்லாத காரணத்தால், தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவதும், உணவுக்காக அவை மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதும் அதிகரிக்கிறது. அதே போன்று தான் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவதால் ஊன் உண்ணிகளின் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகமாக வருகின்றன. இந்த வகையான புல்வெளிகள் ஒன்றும் புறம்போக்கும் நிலங்கள் அல்ல. மாறாக இவை சமநிலையை உருவாக்கும் வாழிடமாக இருக்கிறது.
மின்கம்பிகள் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படாதா?
பறவையை பற்றியும் அதன் வாழிடம் குறித்தும் அறிந்து கொண்டோம். ”பசுமை எரிசக்தி” என்பது தான் எதிர்காலமாக இருக்கும். எண்ணெய் வளங்கள் எல்லாம் குறையும் அபாயம் ஏற்பட்டால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) நம்மை காக்கும் என்று பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பின் படி, குறைந்த வோல்ட்டேஜ் கொண்ட மின் கம்பிகளை நிலத்துக்கு அடியே புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக அமையுமா? என்ற கேள்வியையும் நாம் புறந்தள்ளிவிட இயலாது.
20% சூரிய ஆற்றல் மட்டுமே மின்சாரமாக மாற்றப்படுகிறது. 80% சூரிய வெளிச்சம் சிதறடிக்கப்பட்டு அந்த நிலப்பரப்பின் காலநிலையை மாற்றுகிறது. ஒவ்வொரு பேனலையும் உருவாக்கும் போது குறைந்ததது 5 டன் அளவிற்கு கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. பார்ப்பதற்கு நீர் பரப்பு போன்று இருப்பதால் பறவைகள் இதில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது என்று சோலார் பேனல்கள் வைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அப்ஸ்ட்ரீம் எக்காலஜி (Upstream ecology) என்ற இன்ஸ்டகிராம் பக்கம் கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil