வியாழன் கோள் நாளை (செப்டம்பர் 26) பூமிக்கு அருகில் வரவுள்ளது. 59 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது, 1969க்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு நாளை மீண்டும் நிகழவிருக்கிறது. விண்வெளி ஆர்வலர்கள் இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், 59 ஆண்டுகளுக்கு பிறகு நாளை பூமிக்கு அருகில் வரவுள்ளது என நாசா அறிவித்துள்ளது. பூமியின் எதிர்திசையில் வியாழன் கோள் வரவுள்ளது.
பூமி, வியாழன் கோள் எதிர் எதிரே இருக்கும். பூமி, வியாழன் கோள்கள் எதிர்திசையில் சந்திப்பது 13 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். ஆனால் இந்த முறை சந்திப்பு மிக அருகில் நிகழ்கிறது. 1969ஆம் ஆண்டு நிகழ்ந்ததுபோல் இந்த முறை எதிர்திசை சந்திப்பு அருகில் நிகழ்கிறது என நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின்போது, வியாழன் (Gas giant planet) பூமியிலிருந்து 590 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இந்த நிகழ்வை பைனாக்குலர், தொலைநோக்கி (Telescope) மூலம் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நாசாவை சேர்ந்த வானியற்பியல் நிபுணர் ஆடம் கோபெல்ஸ்கி கூறுகையில், "உயர்தர தொழில்நுட்பம் கொண்ட பைனாக்குலர் பயன்படுத்தி இந்த நிகழ்வை காணலாம். வியாழனில் உள்ள 3 அல்லது 4 கலிலியன் செயற்கைக்கோள்களை (நிலா) தெளிவாக காணமுடியும். கலிலியோ இந்த நிலவுகளை(Moons) 17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்" என்று கூறினார்.
ஆடம் தொடர்ந்து கூறுகையில், பெரிய தொலைநோக்கியை பயன்படுத்தியும் இந்த நிகழ்வை காணலாம். 4-இன்ச் அல்லது அதைவிட பெரிய தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம். பச்சை அல்லது நீலம் நிற கொண்ட பில்டர்ஸ் பயன்படுத்தி வியாழன் கோளை தெளிவாக பார்க்கலாம்.
விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தில் மொத்தம் 79 ஜோவியன் நிலவுகளை கண்டுபிடித்தனர். ஆனால் இப்போது 53 நிலவுகள் மட்டும் உள்ளன. கிரகத்தின் 4 பெரிய நிலவுகளான ஐஓ, யூரோபா, கேனிமீட் மற்றும் கலிஸ்டோ ஆகியவை கலிலியன் செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் கலிலியோ அவற்றை 1610இல் கண்டுபிடித்தார். நாளை இந்த 4 நிலவுகளையும் பார்க்க முடியும். வியாழன் கிரகத்தின் இருபுறமும் பிரகாசமான புள்ளிகளாகத் தெரியும் என விஞ்ஞானிகள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“