Ocean Wave Energy Generator, IIT Madras: ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை தயாரித்துள்ளனர். சிந்துஜா-I என அழைக்கப்படும் இந்த கருவியை தூத்துக்குடி கடலில் பொருத்தி ஆய்வு செய்கின்றனர். கடற்பரப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் 20 மீட்டர் ஆழத்தில் கருவியை பொருத்தியுள்ளனர். சிந்துஜா கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இது மேம்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
“தற்போது இதை சென்னை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்த முடியாது. அதற்கான செலவு அதிகம் ஆகும். ஆனால் தீவு, கடலோர பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களில் பயன்படுத்தலாம். இங்கு கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு குறைவு” என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் அப்துஸ் சமத் கூறினார்.
சிந்துஜா-I அமைப்பு
சிந்துஜா-I அமைப்பு ஒரு மிதக்கும் கருவி. அதில் ஒரு ஸ்பார் மற்றும் ஒரு மின் தொகுதி உள்ளது. கடலில் அலைகள் மேலும் கீழும் ஊசலாடும்போது கருவி மேலும் கீழும் நகரும். இந்த கருவியின் மையத்தில் ஒரு துளை உள்ளது. அதில் ஸ்பார் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பார் நகராதபடி பொருத்தப்பட்டிருக்கும். அலை அடிக்கும் போது கருவி நகரும், ஆனால் உள் உள்ள ஸ்பார் நகராது. அலைகள் இரண்டிற்கும் இடையே ஒரு ஒப்பீட்டு இயக்கத்தை உருவாக்குகின்றன. இந்த சார்பு இயக்கம் மின்சார ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

“வெவ்வேறு பருவங்களில், அலைகள் மாற்றம் பெரும். சில நேரங்களில் உயரமான அலைகள் வரும், சில நேரங்களில் அலைகள் இருக்காது. அலைகள் இல்லாத போது கருவி ஆற்றலை உற்பத்தி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதே மோசமான வானிலையின் போது கணினி சேதமடையாமல் இருக்க வேண்டும். சேதமானால் அதில் முதலீடு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கடினமான காலநிலையிலும் கருவி நிலையான இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்” என்று சமத் விளக்கினார்.
சோதனை வெற்றி
இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் வானிலை மையத்தால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடப்பட்டது. அப்போது நாங்கள் இந்த அமைப்பு சோதனை செய்தோம். எங்கள் கருவி மிகச் சிறப்பாக செயல்பட்டது. கடினமான வானிலையால் கருவி பாதிக்கப்படவில்லை என்பதை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்,” என்று அவர் கூறினார்.
டிசம்பர் 2023க்குள் கருவி பொருத்தப்பட்டுள்ள இடத்தில் நீர் உப்புநீக்க அமைப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தஆராய்ச்சி குழு திட்டமிட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் மின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மேலும் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை, அலை ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை “point absorber wave energy converter” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/