இந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) நவம்பர் 15-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் ராக்கெட்டை தயாரித்துள்ளது.
விண்வெளியில் தனியார் துறை ஏவுதல் தொடங்கும் வகையில் இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ‘பிரரம்ப்’ (Prarambh - the beginning) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 2 இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் 1 வெளிநாட்டு செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
இந்த ராக்கெட் இஸ்ரோவிற்கு சொந்தமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நவம்பர் 15-ம் தேதி ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா கூறுகையில், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வானத்தை நோக்கிய பார்வையாக உள்ளது. நவம்பர் 15-ம் தேதி காலை 11:30 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ்கிட்ஸ் (Spacekidz) இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட 2.5 கிலோ எடையுள்ள ‘ஃபன்-சாட்’ (Fun-Sat) என்ற பேலோடை விக்ரம்-எஸ் ராக்கெட்டில் துணை சுற்றுப்பாதைக்கு அனுப்புகிறது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் ஸ்கைரூட்டின் ஏவுகணைகளுக்கு ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்கைரூட் நிறுவனம் தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமாகும்.
2018-இல் நிறுவப்பட்ட ஸ்கைரூட், இந்தியாவில் முதல் முறையாக தனியாரால் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக், ஹைப்பர்கோலிக்-திரவ மற்றும் திட எரிபொருள் சார்ந்த ராக்கெட் என்ஜின்களை
மேம்பட்ட தொழில்நுட்பம், 3டி-அச்சிடும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்தது.
ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் சீரிஸ்-பி ஃபைனான்சிங் ரவுண்ட் மூலம் 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை வெற்றிகரமாக திரட்டியது. கடந்த ஆண்டு ஜூலையில் சீரிஸ்-ஏ மூலம் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“