இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் முதல் தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் 2-வது தொகுதி செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு அனுப்பபட்டுள்ளது. ஒன்வெப் நிறுவனம் தனது இரண்டாவது தொகுதி செயற்கைக்கோள்களை அன்டோனோவ் விமானத்தில் புதன்கிழமை அனுப்பியது. இணையப் பயன்பாட்டிற்காக ஒன்வெப் செயற்கைக்கோள்கள் அனுப்பபடுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ GSLV-MkIII ராக்கெட்டை எல்.வி.எம்-3 என மறுவடிவமைத்தது.
ஒன்வெப் நிறுவனம் தனது ஜென்1 திட்டத்திற்காக இஸ்ரோ மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இஸ்ரோவிடம் செயற்கைக்கோள்களை 2 தொகுதிகளாக அனுப்ப ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இஸ்ரோ கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்கள் கொண்ட முதல் தொகுதியை விண்ணில் செலுத்தியது. தற்போது 2-வது தொகுதியை செலுத்த தயாராகி வருகிறது. இதுகுறித்து ஒன்வெப் நிறுவனம் கூறுகையில், இஸ்ரோவிற்கு செயற்கைக்கோள்கள் அனுப்பபட்டுள்ளன. இது 2-வது மற்றும் இறுதி தொகுதியாகும். உலகளாவிய இணைப்பிற்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விளக்குகிறது என்று கூறியுள்ளது.
செயற்கைக்கோள்கள் இந்தியா வந்தடைந்ததும் அவை LVM-3 உடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். அதன் பின் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/