இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-07 உள்பட 3 செயற்கைக் கோள்களை இன்று (பிப்ரவரி 10) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 3 செயற்கைக் கோள்களும் பூமியைச் சுற்றி 450 கி.மீ புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் எஸ்.எஸ்.எல்.வி திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 9.18 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-07, அமெரிக்காவின் ஜானஸ்-1, ஆசாதிசாட் -2 ஆகிய செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டது. ஆசாதிசாட்-2 செயற்கைக் கோள் 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு மூலம் இந்த செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது.
இஸ்ரோ முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ்.எல்.வி-டி1 திட்டம் மூலம் செயற்கைக் கோளை ஏவியது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைக் கோள்கள் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டின் முதல் திட்டமாக இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்டை ஏவி வெற்றி கண்டுள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "எஸ்.எஸ்.எல்.வி-டி2 திட்டம் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.வி-டி1 திட்டம் தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். தற்போது அடுத்த திட்டமாக ஒன்வெப் இந்தியாவின் 236 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தயாராகி வருகிறோம். GSLV மார்க் III ராக்கெட் மூலம் ஏவப்படும். மார்ச் மாதம் இந்த ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/