உலகம் முழுவதும் நாளை (செவ்வாய்கிழமை) முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழு சந்திர கிரகணம் நிகழாது என்பதால் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இதை காண ஆர்வமாக உள்ளார்.
சூரியன், பூமி மற்றும் நிலவு (சந்திரன்) மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் சந்திரனை குறிப்பிட்ட நேரத்திற்கு மறைத்து கடந்து செல்கிறது. இந்த அற்புத நிகழ்வானது நாளை நடக்க உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணமானது பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை நீடிக்கும். பின்னர் பகுதி அளவு சந்திர கிரகணமும் 6.19 மணியளவில் நிறைவடைகிறது .
இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும். இருப்பினும் கிரகணத்தின் ஆரம்ப நிலையை எந்தப் பகுதியில் இருந்தும் காண முடியாது. முழு மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை மட்டுமே காண முடியும். இந்த நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி மற்றும் முடியும் நிலைகளை மட்டும் இங்கிருந்து காணலாம்.
நாகலாந்தின் கோஹிமாவில் மட்டும் சந்திர கிரகணத்தின் உச்ச நிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
இனி 3 ஆண்டுகளுக்கு பிறகு தான்
நாளை நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்திற்கு பிறகு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தில் (Reddish color) இருக்கும். Blood moon என்று அழைக்கப்படுகிறது. பூமியின் ஒளியால் நிலவு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். கிரகணத்தின் உச்ச நிலையில், நிலவு 242,740 மைல்கள் (390,653 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் கண்களால் பார்க்கலாம்
இந்த முழு சந்திர கிரகணத்தை சிறப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், நேரடியாக வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும், தொலைநோக்கிகள் (Binoculars,telescopes) பயன்படுத்தி பார்த்தால் நிகழ்வுகள் தெளிவாக தெரியும் என கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil