அமெரிக்காவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 1990-ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பபட்டு ஆய்வு செய்து வருகிறது. கிட்டதிட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நமது பூமியைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல அறிய நிகழ்வுகளை கண்டுபிடித்துள்ளது. வெளிப்புற கிரகங்கள், நெபுலாக்கள் மற்றும் பிற அண்ட நிகழ்வுகளைக் கண்டறியவும் உதவியது.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளியில் ஆய்வு செய்து வரும் ஹப்பிள் தொலைநோக்கியின் ஆயுளை அதிகரிக்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தொலைநோக்கியின் ஆய்வகத்தை மீண்டும் மேம்படுத்தி அதற்குப் புதிய உயிர் கொடுக்க முடியுமா என்று பிரத்தியேக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் மீண்டும் உயர்த்துவதற்கான வணிகத் திறன்கள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளது.
இருப்பினும்,"நாசா பிரத்யேகமாக ஹப்பிள் தொலைநோக்கியின் சேவை பணியை தொடந்து நடத்தவோ அல்லது நிதியளிக்கவோ தற்போது எந்த திட்டமும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஹப்பிள் தொலைநோக்கி தற்போது பூமிக்கு மேலே 540 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. இந்நிலையில் மேலும் அதன் சுற்றுப்பாதையை மீண்டும் அதிகரிக்க ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும். ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் இண்டிப்ரேஷன்-4 அதன் பயணத்தின் போது பூமியிலிருந்து 500 கிலோமீட்டர்களுக்கு மேல் பறந்தது.
ஹப்பிள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் (zero gravity) 31 ஆண்டு காலப் பயணத்தில் விண்வெளியில் ஒரு பில்லியன் வினாடிகளுக்கு மேல் பயணித்துள்ளது. பல ஆய்வுகள், தகவல்களை ஹப்பிள் அனுப்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/