நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (நவம்பர் 16) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நவம்பர் 16 புதன்கிழமை, இந்திய நேரப்படி மதியம் 12.17 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்தியது.
விண்ணில் ஏவப்பட்ட 8 நிமிடங்களில், ராக்கெட்டின் கோர் ஸ்டேஜ் என்ஜின்கள் துண்டிக்கப்பட்டு, மையப் பகுதி, ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டது. இது ஓரியன் விண்கலத்தை இடைக்கால கிரையோஜெனிக் உந்துவிசை நிலை மூலம் விண்வெளியில் செலுத்த அனுமதிக்கிறது. நாசா பின்னர் ஓரியனின் நான்கு சோலார் பேனல்களை நிலைநிறுத்தியது. விண்கலம் தன்னைத்தானே இயக்க அனுமதித்தது.
பல சோதனைகளை கடந்து வெற்றி
இது குறித்து நாசா கூறுகையில். “3-வது முயற்சி வெற்றிகரமாக இருந்தாலும், பிரச்சனைகள் ஏற்படாமல் இல்லை ‘kinder, gentler’ டேங்கிங் செயல்முறை பயன்படுத்தப்பட்டது. மைய நிலையில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், எரிபொருள் நிரப்ப பட்ட பிறகு, மைய பகுதியில் உள்ள திரவ ஹைட்ரஜன் டேங்கின் replenish வால்விலிருந்து கசிவு ஏற்படுவதை நாசா குழுக்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து திட்ட இயக்குநர் சிவப்பு குழுவை (Red crew)அழைத்து சரி செய்ய உத்தரவிட்டார். அபாயகரமான செயல்களை கையாளுவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற குழுவினர். 15 நிமிடங்களில் சரி செய்யப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் வால்வில் போல்ட்களை சரி செய்து வெளியேற 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
இருப்பினும் இதையடுத்தும் ஏவுதல் தொடங்கவில்லை. ரேடார் தளத்தில் இருந்து சிக்னல் இழப்பு ஏற்பட்டது. ஈத்தர்நெட் சுவிட்ச் செயலிழந்ததால் சிக்னல் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அது சரி செய்யப்பட்டது. இதனால் இந்திய நேரப்படி காலை 11.34-க்கும் தொடங்க இருந்த ஏவுதல் தாமதமானது” என நாசா தெரிவித்துள்ளது.
2 முறை ஒத்திவைப்பு
ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிட்டது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.
ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
பின்பு 2ஆவது முறையாக செப்டம்பர் 3-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. தொடர்ந்து 3-வது முயற்சி பல முறை தாமதமானது. 2 புயல், வானிலை நிலவரம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil