ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டம் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 3-வது முயற்சியை நவம்பர் 14-ம் தேதி மேற்கொள்ள நாசா திட்டமிட்டது. ஆனால் இப்போது வெப்பமண்டல நிக்கோல் புயல் காரணமாக விண்வெளி நிறுவனம் ஏவுதல் முயற்சியை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. புயலின் போது எஸ்.எல்.எஸ் (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் ஏவுதளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
நவம்பர் 16-ம் தேதி ஏவுதலுக்கான 2 மணி நேர கவுண்டவுடன் இந்திய நேரப்படி காலை 11.34 மணிக்கு தொடங்கிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் டிசம்பர் 11-ம் தேதி ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படுள்ளது. மேலும், நவம்பர் 16-ம் தேதி ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டால் நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை மீண்டும் ஏவுவதற்கான (Backup) ஏற்பாடுகளையும் நாசா செய்துள்ளது.
நாசா கூறுகையில், "விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் மற்றும் ஓரியன் விண்கலம் launchpad-லேயே வைக்கப்படும். SLS ராக்கெட் மணிக்கு 136 கிலோமீட்டர் வரை காற்றை தாங்ககூடும். தற்போதைய வானிலை அறிவிப்பு படி ஏவுதளத்தில் இந்த காற்று வீசாது. மேலும், இந்த ராக்கெட் கனமழையையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலம் அவ்வாறே வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் நுழையாதபடி பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நிக்கோல் புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். புயல் கரை கடந்த பிறகு ஏவதல் பணிகள் தொடங்கும். இது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
கென்னடி விண்வெளி மையத்தில் 'நிக்கோல்'
கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டமிடப்பட்டுள்ளது. ஏவுதளத்தில் எஸ்.எல்.எஸ் (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்னடி விண்வெளி மையம் மற்றும் சுற்றியுள்ள பகுதி ஹர்கான் III நிலையில் உள்ளது. நாசா விஞ்ஞானிகள் புயலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நாசா ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 மூலம் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ஆனால், 2 முயற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டது. என்ஜின் கோளாறு, திரவ ஹைட்ரஜன் கசிவு காரணமாக சோதனை முயற்சி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 3-வது ஏவுதல் பணிக்கு நாசா முயற்சித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“