ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் மீண்டும் தாமதம்.. இப்போது என்ன பிரச்சனை? | Indian Express Tamil

ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் மீண்டும் தாமதம்.. இப்போது என்ன பிரச்சனை?

புயல் காரணமாக நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3-வது முயற்சியாக இன்று செப்டம்பர் 27 ஏவப்பட இருந்த நிலையில் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் மீண்டும் தாமதம்.. இப்போது என்ன பிரச்சனை?

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயன் புயல் எச்சரிக்கை காரணமாக கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் வைக்கப்பட்டிருந்து விண்வெளி ஏவுதள அமைப்பு ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் அசெம்பளி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.

ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

பின்பு 2ஆவது முறையாக செப்டம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. பொறியாளர்கள் எரிபொருள் கசிவு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின், 3ஆவது முயற்சியாக இன்று (செப்டம்பர் 27) நிலவுக்கு அனுப்பபடும் என கூறப்பட்டது. ஆனால் புயல் காரணமாக இந்த முயற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசா கூறுகையில், ஆர்ட்டெமிஸ் 1 திட்டக்குழு உறுப்பினர்கள் நேற்று இது குறித்து ஆலோசித்தனர். புயல் குறித்த தரவுகளை ஆராய்ந்தனர். இயன் புயல் கென்னடி விண்வெளி நிலையத்தை நெருங்குவதையடுத்து ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அடுத்தகட்டமாக ஏவுதல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாசா செப்டம்பர் 21 கிரையோஜெனிக் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சோதனை வெற்றி அடைந்தாலும், மீண்டும் அதிக அளவு எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இருப்பினும் பொறியாளர்கள் அது கட்டுப்படுத்த கூடிய நிலையில் உள்ளது எனத் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Nasa rolling back artemis 1 rocket spacecraft back to assembly building