இயன் புயல்: நாசா, ஸ்பேஸ் எக்ஸ் 'க்ரூ-5' ஏவுதல் திட்டம் ஒத்திவைப்பு | Indian Express Tamil

இயன் புயல்: நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ‘க்ரூ-5’ ஏவுதல் திட்டம் ஒத்திவைப்பு

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் க்ரூ-5 திட்டம் (crew 5 mission) இயன் சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயன் புயல்: நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ‘க்ரூ-5’ ஏவுதல் திட்டம் ஒத்திவைப்பு

நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் க்ரூ-5 திட்டம் (crew 5 mission) இயன் சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அக்டோபர் 4ஆம் தேதி 2.23 PM EDT (9.53 PM IST) இந்திய நேரப்படி இரவு 9.53மணியளவில் க்ரூ-5 ஏவுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 3ஆம் தேதி அனுப்பபட இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்காக அக்டோபர் 5ஆம் தேதி ஏவுதலுக்கும் தயாராகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயன் புயலின் தாக்கத்தை திட்டக் குழு கண்காணித்து வருகின்றன. க்ரூ-5 ஏவுதல் மேலும் தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போதை திட்டத்தின்படி க்ரூ-5 திட்டம் குழுவினர் (விண்வெளி வீரர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி) வருகைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் எண்டூரன்ஸ் விண்கலம் தற்போது ஃபால்கன் 9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு, லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39 ஏ இல் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஹேங்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புயலிலிருந்து விண்கலம், ராக்கெட் பாதுகாக்கும் பணியில் நாசா குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் குழு புயலின் தாக்கத்தைக் கொண்டு மேலும் திட்டமிடுவர்.

க்ரூ-5 ஏவுதல் திட்டம் தள்ளிப்போகும் பட்சத்தில் க்ரூ-4 பணியும் ஒத்திவைக்கப்படும் என நாசா கூறியுள்ளது. க்ரூ-5 திட்டத்தில் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அன்னா கிகினா ஆகியோர் க்ரூ-5 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். மான் மற்றும் கசாடா ஆகிய இருவரும் முறையே மிஷன் கமாண்டர் மற்றும் பைலட்டாக பணியாற்றுவார்கள். மீதமுள்ளவர்கள் மிஷன் நிபுணர்களாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயன் புயல் காரணமாக நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​திட்டமும் தள்ளிவைப்பட்டுள்ளது. விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27அன்று 3ஆவது முயற்சி திட்டமிடப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைப்பு. நவம்பருக்கு முன் ஏவுதல் சாத்தியமில்லை என்றும் நவம்பர் 12ஆம் தேதி ஏவுதலுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Nasa spacex postpone crew 5 launch to iss due to hurricane ian