ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டம் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 3ஆவது முயற்சியை நவம்பர் 14ஆம் தேதி மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான 69 நிமிட கவுண்டவுன் நவம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9.37 மணிக்கு தொடங்குகிறது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆர்ட்டெமிஸ் 1 சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் நிலவுக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டம் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்டது. 3ஆவது முயற்சி செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இயன் புயல் காரணமாக முன்னே நிறுத்தப்பட்டு எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் அசெம்பளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் பேட் 39B-இல் இருந்து ராக்கெட் ஏவப்படும். 2 முயற்சிகளில் ஏற்பட்ட கோளாறுகள், பழுதுகளை பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சரி செய்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.
ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
பின்பு 2ஆவது முறையாக செப்டம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. மீண்டும் இயன் புயல் காரணமாக திட்டம் தாமதமனாது. நவம்பர் 14ஆம் தேதி திட்டம் செயல்படுத்த முடியாமல் போனால் நவம்பர் 16 புதன்கிழமை, நவம்பர் 19 சனிக்கிழமை ஆகிய இரண்டு தேதிகளில் ஆர்ட்டெமிஸ் 1 மீண்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பேக்அப் திட்டமாக நாசா வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“