அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் பணியில் சோதனை முயற்சியாக ஈடுபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக ராக்கெட் ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 3ஆம் தேதி(சனிக்கிழமை) 2ஆவது முறையாக ராக்கெட்டை நிலவுக்கு செலுத்த நாசா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசா ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 29ஆம் தேதி வீரர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இருந்தது. ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்வுன் தொடங்கப்பட்டது. என்ஜின் பழுது கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொறியியலாளர்கள் உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தப்பட்டது. என்ஜின் பழுது மட்டுமல்லாது வேறு பிரச்சனைகளும் கண்டறியப்பட்டதாக திட்ட குழுவினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை ராக்கெட் ஏவுதலுக்கு வானிலை நிலவரத்தையும் குழுவினர் கவனித்து வருகின்றனர். 40% சாத்திய கூறுகள் உள்ளதாக கணித்துள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் சில தொழில்நுட்ப சிக்கல்களும்
தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாசா அதிகாரிகள் கூறுகையில், திங்கட்கிழமை அனுபவம் சில சிக்கல்களைச் சரிசெய்வதில் பயனுள்ளதாக இருந்தது. 2ஆவது ராக்கெட் ஏவுதல் முயற்சியில் சிரமங்களை சமாளிக்க உதவும் என்று கூறினர். விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை மீண்டும் சனிக்கிழமை நிலவுக்கு அனுப்பபட உள்ளது. முன்பு ஏற்பட்ட கோளாறுகள் சீரமைக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
அனைத்தும் எதிர்பார்த்தபடி நடந்தால், விண்வெளி ஏவுகணை அமைப்பு (ராக்கெட்) புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2:17 மணிக்கு ஏவப்படும். இதனுடன் ஓரியன் விண்கலம் அனுப்பபடும். 6 வாரங்களுக்கு சோதனை முறையில் ராக்கெட் அனுப்பபடுகிறது. நிலவில் ஆய்வு மேற்கொண்டு ஆறுவாரத்திற்கு பிறகு பூமிக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை முயற்சியின் போது, முன்பு ஏற்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் இருக்க திட்டக்குழுவினர் தயாராகி வருகின்றனர். எஞ்ஜின் குளிரூட்டும் செயல்முறையை ராக்கெட் கவுண்டவுன் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
'அப்பல்லோ' திட்டத்திற்கு பிறகு நாசா ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil