ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டம் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 3-வது முயற்சியை நவம்பர் 14-ம் தேதி மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை நாசா மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. புயல் காரணமாக 3-வது முயற்சி ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் கிட்டதிட்ட 1 மாதத்திற்கு பின் ராக்கெட் மீண்டும் ஏவுதளத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதற்காக சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 மூலம் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ஆனால், 2 முயற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் முறையாக எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது, ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
2-வது முறையாக செப்டம்பர் 3-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
3ஆவது முயற்சி செப்டம்பர் 27-ம் தேதி மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இயன் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ராக்கெட் அசெம்பளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில். மீண்டும் 3-வது முயற்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 முயற்சிகளில் ஏற்பட்ட கோளாறுகளை பொறியாளர்கள் சீரமைத்துள்ளனர்.
நாசா கூறுகையில், பொறியாளர்கள் கிரையோஜெனிக் ப்ராபல்ஷன் கட்டத்தின் (ஐசிபிஎஸ்) இடையில் உள்ள பேட்டரிகளை மாற்றியமைத்துள்ளனர். கோர் ஸ்டேஜ் மற்றும் பூஸ்டர்களின் மேல் பகுதியின் இன்டர்டேங்க் பகுதியில் பேட்டரிகளை மாற்றும் பணி நடந்து வருகிறது.
ராக்கெட், விண்கலத்தில் உள்ள சில கருவிகள் மாற்றிப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. பேலோடு கருவிகளும் மாற்றப்பட்டுள்ளது. இரட்டை திட ராக்கெட் பூஸ்டர்களின் எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு சோதனை மற்றும் ராக்கெட் பேட்டரிகளை நிறுவும் பணிகளை குழுக்கள் ஏற்கனவே செய்து முடித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“