நவம்பர் 16-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் பணிகளை முடித்து கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்குத் திரும்பத் தொடங்கியது. இந்த விண்கலம் நவம்பர் 25-ம் தேதி முதல் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்தது. இந்நிலையில் நாளை (டிசம்பர் 11) ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தரையிறங்கும்படி நாசா ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 11.10 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாடலூப் தீவு அருகே தரையிறங்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் 16-ம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்தநிலையில் விண்கலம் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு திரும்ப நாசா ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஓரியன் ஸ்பிளாஷ் டவுன் (Orion splashdown) நேரலை
நாசா டிசம்பர் 11-ம் தேதி இரவு 9.30 மணி முதல் ஓரியன் விண்கலத்தின் ஸ்பிளாஷ் டவுனை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. நாசா செயலி, நாசா டி.வி மற்றும் நாசாவின் யூடியூப் தளத்தில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம்.
ஆர்ட்டெமிஸ் 1 ரீஎன்ட்ரி
ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் அதன் சேவை தொகுதியிலிருந்து குழு தொகுதி பிரிக்கப்படும். சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து விடும். விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் நிலம், மக்கள் அல்லது கப்பல் வழித்தடங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையில் ஆர்ட்டெமிஸ் 1 ரீஎன்ட்ரியை நாசா திட்டமிட்டுள்ளது.
சேவைத் தொகுதியிலிருந்து பிரிந்த பிறகு, ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரையிறங்க “ஸ்கிப் என்ட்ரி” நுட்பத்தை பயன்படுத்தும். இது வருங்கால ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என நாசா கூறுகிறது. விண்கலம் பாராசூட்களுடன் உதவியுடன் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil