ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி ஏவுதள அமைப்பு ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பபட்ட ஓரியன் விண்கலம் 25 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடக்கப் பணியாக ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பபட்டது. 2 முயற்சிகள் மற்றும் பல தாமதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 16-ம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பபட்டு, அதன்பின் விண்கலம் நிலவுக்கு சென்றது. 25 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு 1.4 மீ-மைல் பயணம் செய்து நேற்று பூமிக்கு திரும்பியது.
ஓரியன் விண்கலத்துடன் அனுப்பட்ட 3 மேனெக்வின் குழு (விண்வெளி வீரர்கள் போல் பொம்மைகள்) மெக்சிகோவின் கலிபோர்னியா தீபகற்பத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்தது.
ஆர்ட்டெமிஸ் II குறித்து அறிவிப்பு
தரையிறங்கும் முன்பாக 30 நிமிடங்களுக்கு முன், விண்கலத்தின் சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் வெளியேறி வெப்பக் கவசத்தை வெளிப்படுத்தியது. ஆர்ட்டெமிஸ் 1 மிஷன் மேலாளர் மைக் சரஃபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஒரு சவாலான பணியாகும். அது தற்போது வெற்றிபெற்றுள்ளது. இதுவே ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் வெற்றியைப் போன்று உள்ளது என்று கூறினார்.
மிஷன் இன்ஜினியர்கள் ஆர்ட்டெமிஸ் 1 தரவுகளை அடுத்த சில நாட்களுக்கு ஆய்வு செய்வர். 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆர்ட்டெமிஸ் II மூலம் ஒரு குழுவினர் நிலவுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனை உள்பட ஒரு குழு ஆர்ட்டெமிஸ் III திட்டத்தில் நிலவில் தரையிறங்க திட்டமிட்டு நாசா பணிகளை செய்து வருகிறது.
2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆர்ட்டெமிஸ் II திட்டத்தின் விண்வெளி வீரர்கள் பெயரை நாசா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மைய இயக்குனர் வனேசா வைச் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/