இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். நாள்தோறும் புது புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பூமியைப் போலவே மற்றொரு உலகம் உள்ளதா? அங்கும் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற கேள்வி பல ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. விஞ்ஞானிகளும் இதற்கான ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த தேடலுக்கு உலகளாவிய எக்ஸோப்ளானெட் கண்டுபிடிப்புகள் அடித்தளமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே தனித்துவமான உலகங்களைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
அந்தவகையில், இந்தாண்டு (2022) வெற்றிகரமான ஆண்டாக இருந்துள்ளது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே 200 -க்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் பிற செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
"இந்த ஆண்டு 5,000 உறுதிப்படுத்தப்பட்ட எக்ஸோப்ளானெட்களுடன் தொடங்கப்பட்டது. இப்போது புதிய கோள்களுடன் சேர்த்து 5,235 கிரகங்களான உள்ளன. இதில் சுமார் 4% பூமி அல்லது செவ்வாய் போன்ற பாறை கிரகங்கள் ஆகும். புதிய ஆண்டு என்ன கொண்டு வரும்? அதிக கிரகங்கள்!" என நாசா ட்விட் செய்துள்ளது.
எக்ஸோப்ளானெட் பட்டியல் பலவிதமான உலகங்களைக் கொண்டுள்ளன. பூமி போன்ற சிறிய, பாறை உலகங்கள், வியாழனை விட பன்மடங்கு பெரிய வாயு ராட்சத கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவையை கொண்டுள்ளன.
மேலும், "சூப்பர்-எர்த்ஸ்" ஆகியவையும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய கிரகம் HD 109833 b ஆகும். இது ஒரு G-வகை நட்சத்திரத்தை சுற்றி வரும் நெப்டியூன் போன்ற எக்ஸோப்ளானெட் ஆகும். நாசாவின் கூற்றுப்படி, அதன் எடை 8.69 பூமிகள் மற்றும் அதன் நட்சத்திரத்தின் ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 9.2 நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/