சந்திரயான்- 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 2 நாட்களுக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திர மேற்பரப்பில் ரோவர் நகரும் முதல் வீடியோவை வெளியிட்டது.
Advertisment
தொடர்ந்து, ரோவர் சந்திர மேற்பரப்பில் 8 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றுள்ளதாகவும், அதில் உள்ள 2 சோதனை கருவிகளும் இயக்கப்பட்டுள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்தது. ரோவர் மொத்தம் 500 மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணியளிவில் லேண்டர் தரையிறங்கிய பின் சில மணி நேரங்களில் லேண்டரில் இருந்து இரண்டு-பிரிவு மடிக்கக்கூடிய வளைவு திறந்து ரோவரை வெளியேற்றியது. ரோவர் வெளி வந்ததும் லேண்டர் வளைவு மூடப்பட்டது.
ரோவர் வெளி வந்ததும் சோலார் பேனலும் திறக்கப்பட்டது. ரோவர் அதன் பயணத்திற்கு தேவையான 50W மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து கிடைக்க செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ரோவரின் இயக்கங்கள் உள்ளன. அவை சரிபார்க்கப்பட்டன. ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்து சென்றது. ரோவர் பேலோடுகளான LIBS (LASER Induced Breakdown Spectroscope) மற்றும் APXS (ஆல்ஃபா பார்ட்டிகல் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்) ஆகியவையும் இயக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்தது.
மேலும், புராபல்ஷன் மாட்யூல், லேண்டர் மாட்யூல் மற்றும் ரோவர் பேலோடு என அனைத்து பேலோடுகளும் நன்றாக செயல்படுகின்றன என்றும் கூறியது.
தரவுகள் எப்படி கிடைக்கும்?
பிரக்யான் ரோவர் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் விக்ரம் லேண்டருக்கு அனுப்பபடும். பின்னர் அது சந்திரயான்-2 திட்டத்தில் ஏவப்பட்ட ஆர்பிட்டருடன் தொடர்பு கொள்ளும்.
அந்த தரவுகளை சந்திரயான்-2 ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்புகிறது. இந்நிலையில் ஒரு சந்திர நாளில் தரவு சேகரிக்க அனுப்பபட்ட அனைத்து சோதனை கருவிகளும் இயக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்தது.
இந்த கருவிகள் அடுத்த இரண்டு வாரங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரயான்-3 விண்கலம் 1 சந்திர நாள் அல்லது 14 பூமி நாட்கள் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 சந்திர நாள் முடிந்தவுடன் சூரிய ஒளி இல்லாததால் விண்கலம் செயலிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil