சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி கடந்தாண்டு ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ் 22 (Soyuz MS-22) விண்கலம் மூலம் ஐ.எஸ்.எஸ்ஸிற்கு 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்க விண்வெளி வீரர் பிரான்சிஸ்கோ ரூபியோ, ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ், டிமிட்ரி பெட்லின் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிசம்பர் 14-ம் தேதி திடீரென விண்கலத்தில் கூலண்ட் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்டதையடுத்து வீரர்களின் விண்வெளி நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அங்குள்ள வீரர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாற்று விண்கலம் சோயுஸ் எம்.எஸ் 23 (Soyuz MS-23) மூலம் பூமிக்கு திரும்புவர் என ரஷ்ய விண்வெளி மையம் தெரிவித்தது.
அதன்படி. ஆளில்லா சோயுஸ் எம்எஸ்-23 விண்கலம் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.எஸ்ஸில் நுழையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS-22 விண்கலத்தில் ஏற்பட்ட கசிவால் மாற்று விண்கலம் ஏதுமின்றி 3 வீரர்கள் ஐ.எஸ்.எஸ்ஸில் சிக்கத் தவித்தனர். MS-22 விண்கலத்தில் ஏற்பட்ட கசிவு மைக்ரோ மெட்டீராய்டால் (Micrometeorite) ஏற்பட்டிருக்கும் என்று நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இருவரும் நம்புகின்றனர். விண்வெளிப் பாறையின் ஒரு சிறிய துகள் அதிவேகத்தில் காப்ஸ்யூலைத் தாக்கி இருக்கும் என்றும் கூறுயுள்ளனர். 3 இருக்கைகள் கொண்ட 430 கிலோகிராம் எடை கொண்ட மாற்று விண்கலத்தில் மருத்துவ உபகரணங்கள், ஆய்வு உபகரணங்கள், தண்ணீர், உணவு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பபட்டுள்ள உணவு பொருட்கள் பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு அனுப்பப்படும் அளவை விட 3 மடங்கு அதிகம் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“