அறிவியல் எப்போதும் ஆச்சரியம் தருவதாகவே இருக்கும். நாள்தோறும் பல்வேறு நாடுகள் ஏராளமான ஆய்வுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் விண்வெளி தொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமி உள்பட 8 கோள்கள் உள்ளன. மேலும் 5 குறுங்கோள் உள்ளன. வியாழன் எனப்படும் Jupiter கோள் சூரிய குடும்பத்தில் பெரிய கோள். ஒவ்வொரு கோள்களிலும் நிலவு இருக்கும். பூமியில் ஒரு நிலவு மட்டும் உள்ளது.
வியாழன் கிரகத்தை சுற்றி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் தற்போது மேலும் 12 புதிய நிலவுகளை (Jovian moons) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வியாழன் கிரகத்தில் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோளாக வியாழன் மாறியுள்ளது. முன்னதாக 83 நிலவுகளுடன் முதல் இடத்தில் இருந்த சனி (Saturn) கிரகத்தை வியாழன் முந்தியுள்ளது.
ஸ்கை & டெலஸ்கோப் பத்திரிகையின் கூற்றுப்படி, "புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து நிலவுகளும் சிறியதாகவும், வியாழனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை வியாழனைச் சுற்றி வர 340 நாட்களுக்கு மேல் ஆகும்" என்றும் கூறியுள்ளது.
இந்த நிலவுகளில் பல பிற்போக்கு சுற்றுப்பாதையைக் ( Retrograde orbit) கொண்டுள்ளன, அதாவது அவை உள் நிலவுகளின் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டதில் 5 நிலவுகள் மட்டுமே 8 கிலோமீட்டரை அளவை விட பெரிய நிலவாக உள்ளன. சிறிய நிலவுகள் பெரிய பொருட்களின் மோதலில் இருந்து வெடித்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil